பாகுபலி பிரபாஸ் படத்துக்காக எத்தனை செலவுகள்... இதை உருவாக்குன பணத்தில் ஒரு படத்தையே எடுத்துடலாம்!!
சினிமா திரைப்படங்களுக்காக பெரிய, பெரிய செட்கள் போட்ட காலம் போய், இப்போதெல்லாம் படத்திற்காக உண்மையாகவே வாகனங்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில், பாகுபலி நடிகர் பிரபாஸின் நடிப்பில் திரைக்கு வந்துள்ள கல்கி 2898AD திரைப்படத்திற்காக புஜ்ஜி (Bujji) என்கிற பெயரில் ஓர் வாகனம் விசித்திரமான தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புஜ்ஜி வாகனத்தை பற்றி ஏற்கனவே பலமுறை நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். ஆனால், இன்று (ஜூன் 27) கொஞ்சம் ஸ்பெஷலான நாள் ஆகும். ஏனெனில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கல்கி 2898AD திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
பாகுபலி வெற்றிக்கு பிறகு தெலுங்கு நடிகர் பிரபாஸுக்கு பெரியதாக எந்த வெற்றி படமும் அமையவில்லை. அல்லது, அவரது பெயருக்கு பின்னால் இருக்கும் பேன் இந்தியா நடிகர் என்கிற ஒளி வட்டத்திற்கு ஏற்ற கதை எதுவும் அமையவில்லையா? என்கிற சந்தேகம் அவரது ரசிகர்களை தாண்டி, பொதுமக்கள் இடையேயும் நிலவி வந்தது. அந்த கேள்விகள் அனைத்தையும் உடைத்தெறியும் விதமாக கல்கி 2898 AD திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்கி 2898AD திரைப்படம் குறித்து தற்போது வரையில் நல்ல விமர்சனங்களே மக்களிடம் இருந்து கிடைத்துள்ளன. இந்த திரைப்படத்திற்கும் இதிகாச தொடரான மகாபாரதத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், மகாபாரத்தின் நீட்சியாகவே இந்த கதையை உருவாக்கி உள்ளனர். அதேநேரம், ஹாலிவுட் தரத்திற்கு கற்பனை உலக கதைக்களமாக கல்கி 2898AD படமாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்களுள் ஒன்று புஜ்ஜி ஆகும். இந்த படத்தில் நிறைய இடங்களில் சிஜிஐ எனப்படும் கம்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், புஜ்ஜி வாகனத்தை மட்டும் ரியாலிட்டியாக உருவாக்கி உள்ளனர். அதாவது, பார்ப்பது மட்டுமின்றி இந்த வாகனத்தை ஓட்டவும் முடியும். இதனால், புஜ்ஜி வாகன காட்சிகள் திரைப்படத்தில் மிரள வைக்கின்றன. அதற்கேற்ப படப்பிடிப்பில் அதிநவீன கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், புஜ்ஜி வாகனம் திரையில் பார்ப்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் கோயம்புத்தூரை சேர்ந்த ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த புஜ்ஜி காரை உருவாக்கியுள்ளன. இதனை கார் என சொல்ல முடியாது. ஏனெனில், இந்த வாகனத்தில் முன்பக்கத்தில் 2, பின்பக்கத்தில் 1 என மொத்தம் 3 கதவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனத்தில் இருவர் மட்டுமே ஒருத்தர் பின் ஒருத்தராக அமர முடியும்.
ஓட்டுனர் உள்ளே நுழைவதற்கும், வெளியே வருவதற்கும் கதவு ஆனது ஹெலிகாப்டர்களில் வழங்கப்படுவதை போன்று மேல்நோக்கி திறக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. மற்றப்படி, புஜ்ஜி வாகனத்தில் எந்த மாதிரியான என்ஜின் & கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த விபரங்கள் இல்லை. வாகனத்தினுள் ஆங்காங்கே வயர்கள் செல்கின்றன. குறிப்பாக, ஸ்டேரிங் சக்கரத்துடன் மட்டும் 4 வயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த வயர்களின் பயன்பாடுகள் என்ன என்பது உண்மையில் எங்களுக்கு தெரியவில்லை. இந்த வாகனத்தை உருவாக்குவதற்கு சுமார் ரூ.4 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கல்கி 2898AD திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக, புஜ்ஜி வாகனத்தை தென்னிந்தியாவில் பல நகரங்களில் காட்சிப்படுத்தினர். நம் சென்னையில் கூட இந்த வாகனம் ஓட்டி பார்க்கப்பட்டது.
அந்த வகையில் மும்பையில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த வாகனத்தை மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஓட்டி பார்த்தார். மேலும், பல சினிமா நட்சத்திரங்களும் இந்த வாகனத்தை நேரில் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இந்த நிலையில், கல்கி 2898AD திரைப்படம் திரைக்கு வந்ததை அடுத்து, ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான பிரசாத் திரையரங்கிற்கு வெளியே புஜ்ஜி வாகனம் ரசிகர்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எதிர்காலத்தில், அதாவது இன்னும் 500, 600 வருடங்கள் கழித்து கார்கள் எவ்வாறு இருக்கும் என்று கேட்டால், புஜ்ஜி வாகனத்தை காட்டலாம். அந்த அளவிற்கு எதிர்கால வாகனமாக புஜ்ஜி உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வாகனங்கள், உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களால் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவையாவும் அவர்களது ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்புகளுக்காகவே உருவாக்கப்படுகின்றன. ஆனால், புஜ்ஜி வாகனம் ஆனது ஓர் சினிமா திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்டு இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









