சென்னை சாலையில் வலம் வந்த ராட்சத கார்! ஹாலிவுட்டே இந்தியாவை அண்ணாந்து பாக்குது!
நடிகர் கமல் மற்றும் பிரபாஸ் ஆகியோர் இணைந்து நடிக்கும் கல்கி 2898 ஏடி என்ற திரைப்படத்திற்கு முற்றிலுமாக கற்பனையில் உருவாக்கிய வாகனம் ஒன்றை நிஜ உலகில் உருவாக்கி மஹிந்திரா நிறுவனம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இது வெறும் பொம்மை காராக மட்டுமல்லாமல் உண்மையிலேயே இந்திய சாலைகளில் இயங்கும் வகையிலான காராக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திரைப்படத்தின் பிரமோஷனிற்காக இந்த கார் பல்வேறு பகுதிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த காரை பொதுமக்கள் பலர் வியந்து பார்த்து வருகிறார்கள். இந்த காரை எப்படி உருவாக்கினார்கள்? இதன் பின்னால் உள்ள முழு வரலாறையும் காணலாம் வாருங்கள்.
நடிகையை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் என்ற திரைப்படம் தேசிய விருது பெற்றது. அந்த திரைப்படத்தை நாக அஸ்வின் என்பவர் இயக்கியிருந்தார். இவர் தனது அடுத்த திரைப்படமாக கல்கி 2898 ஏடி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். நடிகர் கமலஹாசனும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் மகாபாரத கதையையும் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தையும் கலந்து புனையப்பட்ட கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கதைக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் பலர் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரமாக ஒரு கார் ஒன்று நடித்துள்ளது தெரியவந்துள்ளது.
கதையில் வரும் நாயகன், நாயகி வில்லன் போலவே இந்த திரைப்படத்தில் முற்றிலுமாக கற்பனையில் உருவாக்கப்பட்ட கார் ஒன்றை ஒரு கதாபாத்திரமாக வைத்து கதையை எழுதியுள்ளார்கள். இந்நிலையில் முற்றிலுமாக கற்பனையில் உருவாக்கப்பட்ட காரை உண்மையிலேயே தயார் செய்ய இந்த கதை குழு மஹிந்திரா குழுமத்தை அனுகியது.

இதையடுத்து சென்னையில் இயங்கி வரும் மஹிந்திரா குழுமத்தின் ஆய்வு மையமும் கோவையில் இயங்கி வரும் ஜெயெம் ஆட்டோமோட்டிவ் என்ற நிறுவனமும் இணைந்து கற்பனையில் இருந்த காரை நிஜ உலகில் பயன்படுத்தும் காராக முற்றிலுமாக உருவாக்கியுள்ளது. இந்த காருக்காக மஹிந்திரா நிறுவனம் தனது தொழில்நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி இந்த காரை உருவாக்கியுள்ளது.
படத்தின் டிரைலர் வெளியான நிலையில் அதில் இந்த கார் முக்கிய இடம் பெற்றுள்ளது. இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. திரைப்படத்தில் இந்த காருக்கு புஜ்ஜி என பெயர் வைத்துள்ளார்கள். இந்த கார் பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறது. இந்த காரின் முன்புறம் பெரிய இரண்டு வீல்கள் இருக்கும்படியும், பின்புறம் ஒரே பெரிய வீல் உருளையான தோற்றத்தில் இருக்கும் படியும் வடிவமைத்துள்ளார்கள்.

இந்த காரை பயன்படுத்த மஹிந்திரா நிறுவனம் தனது இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களை பயன்படுத்துகிறது. இது முற்றிலுமாக எலெக்ட்ரிக் பவரில் இயங்கும் காராக உருவாக்கப்பட்டுள்ளது இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 6075 மிமீ நீளமும், 3380 மிமீ அகலமும், 2186 மிமீ உயரமும் கொண்டதாக ஒரு ராட்சத உருவம் போல உருவாக்கப்பட்டுள்ளது. 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 6000 கிலோ ஆகும்.
இந்த காரின் சிறப்பு அம்சமே இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள டயர்கள் தான். இந்தக் காரில் உள்ள மோட்டார்கள் இரண்டும் சேர்ந்து இந்த காருக்கு 94 கிலோ வாட் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இந்த காரை உருவாக்கியுள்ளார்கள். இது மட்டுமல்லாமல் இந்த காரின் டார்க் திறன் தான் மிக வித்தியாசமான ஒரு விஷயமாகும். மொத்தம் 9800 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் காரை உருவாக்கவும் முயற்சியில் மிக முக்கிய பங்கை வகித்தது ஜெயம் ஆட்டோமொட்டிவ் நிறுவனம் தான். இந்நிறுவனம் ஏற்கனவே ஆட்டோமொபைல் துறையில் இன்ஜின், கியர் பாக்ஸ், சஸ்பென்ஷன் போன்ற முக்கியமான உதிரி பாகங்களை தயார் செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மோட்டார்ல பேட்டரி உள்ளிட்ட விஷயங்களையும் தயார் செய்கிறது.
இந்நிறுவனம் தான் டாடா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து நானோ என்ற காரை வடிவமைக்க உதவியிருந்தது. அதன் பின்பு மீண்டும் டாடா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து டியாகோ, டிகோர் ஆகிய கார்களின் ஜேடிபி வெர்ஷனையும் உருவாக்கியது. தற்போது இந்நிறுவனம் கல்கி 2898 ஏடி படத்திற்காக மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்த வித்தியாசமான காரையும் உருவாக்கியுள்ளது. கல்கி திரைப்படத்தில் இந்த காருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தான் குரல் கொடுத்துள்ளார்.
இந்த காரை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஊர்களில் உள்ள சாலைகளில் எடுத்து சென்று புரோமொஷன் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படியாக இந்த கார் சென்னையில் உள்ள சாலைகளில் வலம் வந்தது. இந்த காரை பார்த்தும் மக்கள் ஒரு நிமிடம் திகைத்து தான் போனார்கள் என சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு மக்கள் கவனத்தை ஈர்த்திருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாம் கற்பனையில் செய்யும் பல்வேறு விஷயங்களை நிஜ உலகில் செய்ய முடியாது. கற்பனையை நிஜமாக வேண்டும் என்றால் அதற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பு வேண்டும். கல்கி திரைப்படத்திற்காக எழுதப்பட்ட கற்பையான கார் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் செய்யாமல் நிஜ உலகில் இப்படியான காரை உருவாக்கியுள்ளார்கள். இதற்காக நிச்சயம் மஹிந்திரா நிறுவனத்திற்கு ஒரு சபாஷ் போடலாம்.


Click it and Unblock the Notifications









