படத்தை தான் யாரும் பாக்கல, காரையாவது வந்து பாருங்கனு பெங்களூருக்கு புஜ்ஜிய கூட்டிட்டு வந்துட்டாங்க!
சமீபத்தில் வெளியான கல்கி 2898 ஏடி என்ற திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட கார் ஒன்று தற்போது பெங்களூருவில் உள்ள ஃபோரம் மால் பகுதியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த கார் அந்த திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமாகவே நடித்தது. உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்த காரை ரூபாய் 8 கோடி மதிப்பில் மஹிந்திரா நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நடிகர்கள் கமலஹாசன், பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, துல்கர் சல்மான், தீஷா பதாணி, உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நடித்த திரைப்படம் கல்கி 2898 ஏடி என்ற திரைப்படமாகும். இந்த திரைப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. மிகப்பெரிய பொருட் செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்ட நிலையில் பல மொழிகளில் இந்த படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வசூலை வாரி குவித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமாகவே ஒரு கார் நடித்துள்ளது. இந்த திரைப்படம் எதிர்காலத்தில் நடப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் எப்படியான வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற கற்பனையை அடிப்படையாகக் கொண்டு இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் தான் இந்த காரை கோவையில் இயங்கி வரும் ஜெயெம் ஆட்டோமோட்டிவ் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து திரைப்படத்தை உருவாக்கிய குழுவின் கற்பனை திறனுக்கு ஏற்ற காராக இதை வடிவமைத்துள்ளார்கள்.
இந்த காருக்கு திரைப்படத்தில் புஜ்ஜி என பெயர் வைத்துள்ளார்கள். நாம் தற்போது பயன்படுத்தும் காரை விட இந்த கார் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருக்கிறது. மொத்தம் மூன்று வீல்கள் கொண்ட காராக இது இருக்கிறது. ஒவ்வொரு வீல்களும் மிகப் பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளன. பின்பக்கம் உள்ள வீல் உருளையான வடிவில் இருக்கும்படி வடிவமைத்துள்ளது. இதனால் எந்த பக்கம் திரும்பினாலும் அசால்டாக இது திரும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரை தற்போது பெங்களூருவில் உள்ள ஃபோரம் மால் பகுதியில் பொதுமக்கள் பார்வைக்காக வைத்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை பார்த்த பலர் இந்த காரை எப்படியாவது நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பதால் மக்களுக்கு இந்த அனுபவத்தை வழங்குவதற்காக திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் மால் நிர்வாகமும் சேர்ந்து இந்த ஏற்பாடு செய்துள்ளது.
இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 6075மிமீ நீளமும், 3380 மிமீ அகலமும், 2186 மீமி உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இந்த காரில் இருக்கிறது. மொத்தம் இந்த கார் 6 டன் எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஏகப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் இருக்கிறது. இந்த கார் ஏற்கனவே இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் பயன்படுத்தப்பட்ட வீடியோக்கள் கூட சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

இந்த காரை உருவாக்க மொத்தம் ரூ8 கோடி செலவாகி உள்ளது. இது வடிவமைப்புக்காக பொம்மை காராக இல்லாமல் உண்மையிலேயே இயங்கும் வகையிலான காராக உருவாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் எலெக்ட்ரிக் காராக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் காரில் ஒரே நேரத்தில் இருவரும் பயணம் செய்ய முடியும். அதற்கான 2சீட்டிங் வசதிகள் இருக்கிறது. இந்த காரின் முகப்பு பக்க கண்ணாடியை பொறுத்தவரை பைட்டர் பைலட் போன்ற விமானங்களில் பயன்படுத்தப்படும் வடிவமைப்பில் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் மொத்தம் இரண்டு விதமான எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது காரின் பின்பக்க வீலில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டாரை இயக்குவதற்காக 47 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது 126 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும், 9800 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த மோட்டார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கார் அதிகபட்சம் 45 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது உள்ள பேட்டரி ஸ்வாப்பிங் டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பேட்டரி தீர்ந்து போனால் அந்த பேட்டரியை அகற்றிவிட்டு மற்றொரு பேட்டரியை பொறுத்து இந்த காரை தொடர்ந்து பயன்படுத்த முடியும். அதனால் இந்த காரை தனியாக நிறுத்தி சார்ஜ் போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. பேட்டரியை மட்டும் தனியாக சார்ஜ் போட்டு எடுத்து செல்ல முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கல்கி 2898 ஏடி படத்தில் வந்த புஜ்ஜி என்ற கார் தற்போது பெங்களூர் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. பலர் இதற்காகவே அந்த இடத்திற்கு வந்து இந்த காரை நேரில் பார்த்து அதனுடன் புகைப்படம் எடுத்து செல்கிறார்கள். இந்த கார் கொடுத்த உங்கள் கருத்துக்களை கமெண்ட் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









