நடிகருக்காக ஆனந்த் மஹிந்திரா உருவாக்கி கொடுத்த வாகனத்தை பற்றி தெரியுமா? ஒரு திரைப்படத்துக்காக இவ்வளவு செலவா!!
பிரபாஸ் (Prabhas) நடிப்பில் கல்கி 2898 AD என்கிற திரைப்படம் உருவாகி வருவதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். சமீபத்தில் கூட நடிகர் பிரபாஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில், புதிய குடும்ப உறுப்பினரை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறி எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தார். இந்த பதிவும் கல்கி 2898 AD திரைப்படத்திற்கானது தான்.
யார் அந்த புதிய குடும்ப உறுப்பினர் என்று தானே கேட்கிறீர்கள்? அதுதான் 'புஜ்ஜி' ஆகும். இந்த பெயரில் ஓர் அட்வான்ஸ்டு ரோபோட் வாகனத்தை இந்த திரைப்படத்திற்காக உருவாக்கி உள்ளனர். இந்த வாகனத்தை பற்றி பார்ப்பதற்கு முன்னர், கல்கி 2898 AD திரைப்படத்தை பற்றி பார்ப்போம். இந்த திரைப்படத்தின் பெயரில் உள்ள AD என்பது அட்டோ டோமினி என்பதை குறிக்கிறது.

இலத்தீன் மொழியில் உள்ள அட்டோ டோமினி என்பது 'கிறித்து பிறப்பிற்கு பின்' என்பதன் அர்த்தம் ஆகும். நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஆண்டை 2024 AD என சொல்லலாம். இந்த வகையில் பார்த்தால், நடிகர் பிரபாஸின் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் இந்த திரைப்படம் 2898ஆம் ஆண்டில் நடப்பதை கதைகளமாக கொண்டிருக்கலாம். அதாவது, எதிர்கால திரைக்கதையில் கல்கி 2898 AD திரைப்படம் உருவாகிறது.
இது எங்களது யூகிப்பே. டீசர், டிரைலர் எல்லாம் வெளிவந்தால் தான் இதில் நாம் ஒரு முடிவை எடுக்க முடியும். புஜ்ஜி வாகனத்தையும், அதன் தோற்றத்தையும் பார்த்தால் கல்கி 2898 AD ஒரு எதிர்கால கதைக்கள திரைப்படமாகவே இருக்கும். அமிதாப் பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோனே என முன்னணி நட்சத்திர பட்டாளத்துடன் மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் உருவாகுகிறது. படத்திற்காகவே ஒரு பிரத்யேக வாகனத்தை உருவாக்கியுள்ளனர் என்பதில் இருந்து இந்த திரைப்படத்தின் பிரம்மாண்டத்தை உணரலாம்.

மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் குழு மற்றும் கோயம்புத்தூரை சேர்ந்த ஜெயம் மோட்டார்ஸ் இணைந்து இந்த வாகனத்தை உருவாக்கி உள்ளனர். புஜ்ஜி வாகனத்தின் வெளியீட்டை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃப்லிம் சிட்டியில் ஒரு சிறிய நிகழ்ச்சி போல் நடத்தினர்.
மேலும், பைரவா X புஜ்ஜி என்கிற பெயரில் ஒரு டீசர் வீடியோவும் யுடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் புஜ்ஜி வாகனத்தை நடிகர் பிரபாஸ் ஓட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அளவில் பெரியதாக இருப்பினும், இந்த புஜ்ஜி வாகனத்தினுள் ஒருவர் பின்னால் ஒருவர் என இருவர் மட்டுமே அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மற்றப்படி, இந்த வாகனத்தின் பாகங்கள் பற்றிய விபரங்கள் இல்லை.

புஜ்ஜி வாகனத்தில் எல்லாமே வித்தியாசமாக உள்ளது. வாகனத்தினுள் நுழைவதற்கு கண்ணாடி கதவு ஒன்று மேல் நோக்கி திறக்கக்கூடியதாக உள்ளது. சக்கரங்கள் மற்றும் அவற்றில் பொருத்தப்பட்டுள்ள டயர்கள் என இந்த வாகனத்தின் பாகங்கள் புதுமையானவைகளாகவும், விசித்திரமானவைகளாகவும் உள்ளன. திரைப்படத்தின் கதை எதிர்காலத்தில் நடப்பது போல் எழுதப்பட்டுள்ளதால், அதற்கேற்றவாறு இந்த வாகனத்தை உருவாக்கியுள்ளனர்.
கல்கி 2898AD திரைப்படத்தின் இயக்குனர் நாக் அஷ்வின் புஜ்ஜி வாகனத்தை பற்றி கூறுகையில், "கல்கி 2898 AD ஒரு கடினமான படம். எனக்கு பொறியியல் பின்னணி இல்லை. நான் ஆனந்த் மஹிந்திராவிடம் உதவிக்காக ட்விட் செய்து ஒரு குழுவை திரட்டினேன். கோயம்புத்தூரில் உள்ள ஜெயம் மோட்டார்ஸ் என்ற ரேஸ் கார்களை உருவாக்கும் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள அவர்கள் எங்களுக்கு உதவினார்கள்" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கல்கி 2898 AD ஆனது இந்தியாவில் முதல்முறையாக உருவாகும் ஒரு அறிவியல் கற்பனையான திரைப்படம் என சொல்லலாம். இருப்பினும், இந்த திரைப்படத்துக்கு தெலுங்கு சினிமா வட்டாரத்தை தாண்டி பெரியதாக எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்துவந்தது. ஆனால் தற்போது, ஒரு திரைப்படத்திற்காக ஒரு வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது எனும்போது, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


Click it and Unblock the Notifications









