தீபாவளிக்கு நிறைய பேர் டிரெஸ் எடுத்துட்டாங்க போல... பிரபல துணி கடை ஓனரின் புது லம்போர்கினி!
கல்யாண் சில்க்ஸ் (Kalyan Silks) நிறுவனத்தின் தலைவர் டி.எஸ். பட்டாபிராமன், புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி லாங்-வீல்பேஸ் காரை ஒரு வாரத்திற்கு முன் வாங்கியது செய்திக்களில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, மற்றுமொரு சொகுசு காராக கறுப்பு நிறத்தில் புதிய லம்போர்கினி ஹுராகன் டெக்னிகா எல்பி640-2 காரை தனது வாகன சேகரிப்பில் இணைத்துள்ளார்.
இந்த 640 குதிரைத்திறன் கொண்ட சூப்பர் லம்போர்கினி காரை கல்யாண் சில்க்ஸ் தலைவர் டெலிவிரி பெறும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. லம்போர்கினி ஹுராகன் டெக்னிகா கார் ஒரு வாகனத்தில் இருந்து டி.எஸ் பட்டாபிராமனின் வீட்டில் இறக்கப்பட்டுள்ளது. இது நெரோ நாக்டிஸ் என்கிற கருப்பு நிறத்தில், ஜியாலோ நிற வேலைப்பாடுகளுடன் உள்ளது.

இதன் ஸ்போர்ட்டியான பின்புற உடல் அமைப்பில் இரட்டை சைலன்சர்கள் மற்றும் பெரிய, நிலையான ஸ்பாய்லர் ஆகியவை தெளிவாகக் காணப்படுகின்றன. கேரளாவின் திருச்சூரில் உள்ள டி.எஸ் பட்டாபிராமனின் இல்லத்தில் கார் வாகனத்தில் இருந்து கவனமாக கீழே இறக்கப்பட்டுள்ளது. பின்னர், குடும்பத்தினர் அனைவரும் இந்த வி10 சூப்பர் காரின் அருகே சென்று, திரையை விலக்கி காரை வெளிப்படுத்த, பட்டாபிராமன் காரின் சாவிகளைப் பெற்றுக் கொண்டார்.
இந்தக் காரில் உள்ள 5.2 லிட்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் V10 என்ஜினின் திறன் எப்படி உள்ளது என்பதை அறிய உரிமையாளர் பின்னர் காரை ஓட்டிப் பார்த்துள்ளார். இந்தியாவில் இந்த லம்போர்கினி கார் தற்சமயம் விற்பனையில் இல்லை. கடைசியாக விற்பனையில் இருந்த சமயத்தில், ஹுராகன் டெக்னிகாவின் இறுதிப் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.04 கோடி ஆகும்.

கேரளாவில் இதன் ஆன்-ரோடு விலை ரூ.4.7 கோடியைத் தாண்டும். ஹுராகன் டெக்னிகா 2022-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கூபே ரக காராக மட்டுமே இந்தியாவில் கிடைத்தது. இத்தாலிய கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினியின் இந்திய ஹுராகன் கார் வரிசையில், ஹுராகன் எவோ மற்றும் ஹுராகன் எஸ்டிஓ-விற்கு இடையில் ஹுராகன் டெக்னிகா அமர்த்தப்பட்டது.
விலையுயர்ந்த எஸ்டிஓ-வின் கடுமையான செயல்திறனையும், எவோவின் சாலைக்கு ஏற்ற அம்சங்களையும் டெக்னிகா வழங்கியது. இந்தியாவில், விற்பனையில் இது போர்ஷே 911 ஜிடி3 ஆர்எஸ், மெக்லாரன் 720எஸ் மற்றும் ஃபெராரி எஃப்8 ட்ரிபியூட்டோ போன்ற கார்களுடன் போட்டியிட்டது. இந்தக் காரின் உடல் அமைப்பில் லம்போர்கினி சியான் காரின் வடிவமைப்பின் தாக்கம் தெளிவாகத் தெரிந்தது.

வழக்கமான ஹுராகன் உடன் ஒப்பிடுகையில் இதன் ஒட்டுமொத்த உடல் அமைப்பு கூர்மையாக இருந்தது. முக்கிய Y-வடிவ எலிமெண்ட்கள் டெக்னிகாவின் தோற்றப் பொலிவை அதிகரித்தன. மாற்றியமைக்கப்பட்ட முன் ஸ்ப்ளிட்டர், கார்பன் ஃபைபர் பொனட், மேம்பட்ட பின்புற டிஃப்யூசர் மற்றும் நிலையான பின்புற ஸ்பாய்லர் (இது 35% அதிக டவுன்ஃபோர்ஸ் வழங்கியதாகக் கூறப்படுகிறது) ஆகியவை ஹுராகன் டெக்னிகாவின் மற்ற முக்கிய வடிவமைப்பு அம்சங்களாகும்.
ஹுராகன் எவோவை விட டெக்னிகா கூடுதல் நீளமாக இருந்தது. இது காரின் ஒட்டுமொத்த தோற்றத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. மேலும், டெக்னிகாவின் ஏரோடைனமிக்ஸ் அமைப்பிலும் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும், இப்போது இந்தியாவில் லம்போர்கினி ஹுராகன் கார் எதுவும் விற்பனை செய்யப்படாததால், டெக்னிகாவும் விற்பனையில் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லம்போர்கினி கார் ஒன்றை நேரில் பார்ப்பதே நம்மில் பலருக்கு கனவாக இருக்கும் நிலையில், கல்யாண் சில்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் போன்ற செல்வந்தர்கள் ரேஞ்ச் ரோவர் காரை வாங்கிய ஒரே வாரத்தில் லம்போர்கினி ஹுராகன் காரை அசால்ட்டாக வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications









