TA 912 வழங்கியதால் தான் ரயில் விபத்தில் சிக்கியது! வெளியானது புதிய தகவல்! இது என்ன தெரியுமா?
மேற்குவங்க மாநிலத்தில் நேற்று கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் பின்பகுதியில் சரக்கு ரயில் வந்து மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தபோது முதற்கட்டமாக சரக்கு ரயில் ஓட்டி வந்த டிரைவர் சிக்னலை மீறி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மேற்குவங்க மாநிலத்தில் நேற்று அசாமில் இருந்து கிளம்பிய கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் கொல்கத்தா நோக்கி வந்து கொண்டிருந்தபோது, இந்த ரயிலுக்கு பின்னே வந்த சரக்கு ரயில் இந்த ரயிலின் பின்பகுதியில் மோதியதால் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு அதிலிருந்து பயணிகள் படுகாயம் அடைந்தார்கள் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ரயில் விபத்து குறித்து நடந்த முதற்கட்ட விசாரணையில் விபத்து நடந்த பகுதி ஆட்டோமெட்டிக் சிக்னல் சிஸ்டம் கொண்ட பகுதியாக இருக்கிறது. இதனால் ஒரு ரயில் சென்று கொண்டிருக்கும்போது மற்றொரு ரயிலுக்கு சிவப்பு சிக்னல் தான் இருந்திருக்கும். அதையும் மீறி சரக்கு ரயிலின் ஓட்டுனர் ரயிலை செலுத்தி இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது.
ஆனால் இந்த விபத்து குறித்து மேலும் விரிவாக விசாரணை நடத்திய போது சரக்கு ரயில் கடைசியாக நின்று சென்ற ராணிபத்ரா ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் ஓட்டுநருக்கு TA 912 என்ற ஆவணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதை பயன்படுத்தி அவர் ராணிபத்ரா ரயில் நிலையத்திலிருந்து கேட்ட ஹட் ஜங்ஷன் வரை சிக்னல் சிவப்பில் இருந்தாலும், பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

அது என்ன TA 912 என்ற ஆவணம் என்ற கேள்வி நமக்கு எழலாம். இந்த ஆவணத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ரயில் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும். பொதுவான ஆவணங்கள் குறித்த விரிவான விபரத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ரயில் செல்லும் பாதையில் எச்சரிக்கை பலகை இல்லாத அல்லது சிக்னல் கோளாறு ஏற்படும் பட்சத்தில், ரயில் போக்குவரத்து பாதிக்க கூடாது என்பதற்காக இப்படியான ஆவணங்கள் வழங்கப்படும்.
உதாரணமாக ஒரு ஸ்டேஷனில் இருந்து கிளம்பும் ரயில் அடுத்த ஸ்டேஷனுக்கு செல்லும் இடத்தில் சிக்னல் சரியாக வேலை செய்யாத பிரச்சனை இருந்தால் இப்படியான ஆவணங்கள் வழங்கப்படும். இப்படியான ஆவணங்களை ஓட்டுநர் பெற்றுவிட்டால் அவர் சிக்னலை கவனிக்க வேண்டிய தேவை இல்லை. சிக்னல் சிவப்பில் இருந்தாலும் ரயிலை தொடர்ந்து எடுத்துச் செல்லலாம்.

சில நேரம் தண்டவாள பணிகள் நடந்து கொண்டிருந்தால் குறிப்பிட்ட இடத்தில் செல்லும்போது, குறிப்பிட்ட வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள், இதுபோன்ற ஆவணங்கள் மூலம் ரயில் ஓட்டுநருக்கு தெரிவிக்கப்படும். அதன்படி அவர் குறிப்பிட்ட இடத்தில் வேகத்தை குறைப்பதற்கான சிக்னல் இல்லை என்றாலும் நோட்டீஸில் உள்ள தகவலின் படி வேகத்தை குறைத்து செல்ல வேண்டும்.
இப்படியாக தற்காலிகமாக ஏற்படும் பிரச்சனைகளை ஓட்டுனருக்கு தெரியப்படுத்த ஆவணங்களை பயன்படுத்துகிறார்கள். இப்படியாக ஒவ்வொரு விதமான எச்சரிக்கைக்கு ஒவ்வொரு விதமான ஆவணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அப்படியாக தான் ஆட்டோமெட்டிக் மற்றும் செமி ஆட்டோமெட்டிக் சிக்னல் உள்ள செக்ஷன்களில் சிக்னல் கோளாறு ஏற்பட்டால் இந்த TA 912 என்ற ஆவணம் வழங்கப்படும். இந்த ஆவணத்தை பெற்று விட்டால் சிக்னலை கவனிக்க வேண்டிய தேவையில்லை.
ஓட்டுநர் சிவப்பு சிக்னல் இருந்தாலும் தொடர்ந்து சரக்கு ரயிலை இயக்கிச்செல்ல அனுமதி பெறப்பட்ட பின்பே அதன் ஓட்டுனர் சரக்கு ரயில் குறிப்பிட்ட தண்டவாளத்தில் செலுத்தியுள்ளார் என்பது தெரிகிறது. விபத்தில் அவர் உயிரிழந்து விட்டதால் அவரிடம் விசாரணை நடத்த முடியாது. ஏற்கனவே கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருக்கும் தண்டவாளத்தில் சரக்கு ரயிலுக்கு எப்படி சிக்னலை மீறி பயணிக்க ஆவணம் வழங்கப்பட்டது என்ற விசாரணை நடந்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக ரயில்வே போக்குவரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படும் பட்சத்தில், தற்காலிகமாக பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இப்படியான நோட்டீஸ்கள் வழங்கப்படுவது சாதாரண விஷயம் தான். அதை எப்படியான சூழ்நிலையில் வழங்க வேண்டும் என ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு முழுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கும். அதையும் மீறி இந்த விபத்து எப்படி நடந்தது என்பதை விசாரணைக்கு பிறகு தான் நாம் தெரிந்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications









