பரிதாபமா ஒரு உசுரு போச்சே! கண்மூடித்தனமா கார் ஓட்னது அவரா! போலீஸ்காரங்களே ஜாமீன் குடுத்து அனுப்பி வெச்சுடாங்க!
இந்தியாவில் வாகன ஓட்டிகள் பலர் அலட்சியமாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் (Road Accidents) நடைபெற்று வருகின்றன. இதில் நிறைய பேர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர் என்பதுடன், பலர் படுகாயமடைகின்றனர். அரசு எவ்வளவுதான் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், சாலை விபத்துக்களின் எண்ணிக்கை இன்னும் சந்தோஷப்படும் வகையில் குறையவில்லை.
மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நடிகர், நடிகைகளும் கூட சில சமயங்களில் கண்மூடித்தனமாக வாகனங்களை ஓட்டுகின்றனர். இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் (Bangalore) பகுதியில் தற்போது நடைபெற்றுள்ளது. பிரபல நடிகர் ஒருவர் ஓட்டிய கார் மோதியதில், பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பெங்களூர் நகரின் வசந்தபுரா மெயின் ரோடு பகுதியில் இந்த சாலை விபத்து நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று அந்த பகுதியில் பிரேமா (48) என்ற பெண்ணும், கிருஷ்ணா (58) என்ற ஆணும் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கணவன், மனைவி ஆவர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று, அவர்கள் இருவர் மீதும் மோதியது.
இதில் பிரேமா உயிரிழந்தார். அதே நேரத்தில் அவரது கணவர் கிருஷ்ணாவிற்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. கன்னட நடிகரான நாகபூஷனாதான், விபத்திற்கு காரணமான காரை ஓட்டியுள்ளார். அலட்சியம் காரணமாக உயிரிழப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தற்போது அவர் மீது காவல் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் உடனடியாக அவர் கைதும் செய்யப்பட்டார். ஆனால் போலீஸ் ஸ்டேஷனிலேயே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. விபத்து நடைபெற்ற சமயத்தில் நாகபூஷனா மது அருந்தவில்லை என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் நாகபூஷனாவின் அலட்சியத்தால்தான் இந்த விபத்து நடைபெற்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் நடைபாதையில் இருந்து திடீரென சாலைக்கு வந்த காரணத்தால்தான், இந்த விபத்து நடைபெற்றது என நாகபூஷனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விபத்து நடைபெற்ற உடனேயே நாகபூஷனா அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் எனவும் அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் துரதிருஷ்டவசமாக பிரேமாவை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இந்த சாலை விபத்து சம்பவம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் வாகனங்களை இயக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காவல் துறை அதிகாரிகள் சொன்னதையேதான் நாங்களும் கூறுகிறோம். வாகனங்களை இயக்கும்போது நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஒரு நொடி அலட்சியம் ஏற்பட்டால் கூட, பயங்கரமான சாலை விபத்துக்கள் நிகழலாம் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்குதல், மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டுவதை தவிர்த்தல், போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றுதல் ஆகியவற்றின் மூலம் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை ஓரளவிற்கு குறைக்க முடியும். அதே நேரத்தில் பாதசாரிகளும் சாலையில் எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்வது சிறந்தது.


Click it and Unblock the Notifications