ரூ.14 லட்சத்தில் இந்தியன் ஸ்கவுட் வாங்கிய நடிகர் புனித் ராஜ்குமார்!
கன்னட சினிமா உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார் கார் மற்றும் பைக்குகள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். புதிது புதிதாக வரும் கார் மற்றும் பைக் மாடல்களை ஆர்வமுடன் அறிந்து கொள்வதுடன், அதில் பிடித்தமானவற்றை வாங்கி தனது கராஜில் சேர்த்து விடுவார்.
அந்த வகையில், புதிய லேண்ட்ரோவர் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியை சமீபத்தில் வாங்கிய அவர், அடுத்ததாக இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிளையும் வாங்கியிருக்கிறார். சமீபத்தில் அவரது இல்லத்திலேயே அந்த புதிய இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிள் டெலிவிரி கொடுக்கப்பட்டது. அப்போது, நண்பர்களுடன் கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

க்ரூஸர் மாடல்
நீண்ட தூர பயணங்களுக்கான சக்திவாய்ந்த க்ரூஸர் வகையை சேர்ந்தது. சொகுசு பைக் மார்க்கெட்டில் சரியான பட்ஜெட்டில் மிகச்சிறப்பான இந்தியன் நிறுவனத்தின் புதிய தயாரிப்புதான் இந்தியன் ஸ்கவுட்.

சிறப்பம்சம்
இதுபோன்ற சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள்களை முதல்முறையாக, ஓட்டுபவர்களுக்கும் ஏதுவான சிறப்பம்சங்களை கொண்டது. மேலும், இலகு எடை கொண்ட இதன் உறுதிமிக்க ஃப்ரேம் மிகச்சிறந்த கையாளுமையை வழங்கும். வளைவுகளில் கூட நம்பிக்கையான ஓட்டுதல் அனுபவத்தை தரும்.

இருக்கை
ஒரு இருக்கை மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இது டேன் லெதரிலான உயர்தரத்திலான இருக்கை. நீண்ட தூர பயணங்களுக்கு மிக சொகுசான, தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தை வழங்கும்.

எஞ்சின்
இந்த புதிய இந்தியன் ஸ்கவுட் பைக்கில் 100 எச்பி பவரையும், 97.7 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1,133சிசி லிக்யூடு கூல்டு வி- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.

செயல்திறன்
இந்த பைக்கின் சக்திவாய்ந்த எஞ்சின் 0- 100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் தொட்டுவிடும். அதிகபட்சமாக மணிக்கு 193 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

மைலேஜ்
இந்த பைக் நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 18 கிமீ வரையிலும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 21.2 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எடை
இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிளின் ஸ்டான்டர்டு மாடல் 253 கிலோ எடை கொண்டது. கஸ்டமைஸ் செய்தால், இதன் எடை கூடும்.

வண்ணம்
இந்த பைக் தண்டர் பிளாக், சில்வர் ஸ்மோக், தண்டர் பிளாக் ஸ்மோக், வைல்டுஃபயர் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இதில், சில்வர் ஸ்மோக் என்ற வண்ணத்தை புனித் ராஜ்குமார் தேர்வு செய்து வாங்கியிருக்கிறார்.

விலை
பெங்களூரில் ரூ.12.61 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை கொண்ட இந்த மோட்டார்சைக்கிள் ஆர்டிஓ., கட்டணம் மற்றும் வரிகள் சேர்த்து ரூ.14.25 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








