அமைச்சர் பதவி கூட இப்போ இல்ல!! பாஜக தலைவரின் விலையுயர்ந்த புது பிஎம்டபிள்யூ கார்!
கர்நாடகா (Karnataka) மாநிலத்தில் பாஜக கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ ஹைப்ரீட் காரை வாங்கி உள்ளார். யார் அந்த கர்நாடக பாஜக தலைவர்? என்பதை பற்றியும், அவர் வாங்கியுள்ள புதிய பிஎம்டபிள்யூ காரை பற்றியும் இனி இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம், வாங்க.
சினிமா பிரபலங்களும், அரசியல்வாதிகளும் அவ்வப்போது புது, புது கார்களை வாங்குவர் என்பது நமக்கு தெரியும். குறிப்பாக, சினிமா நட்சத்திரங்கள் விளம்பரத்திற்காகவே புதியதாக சொகுசு கார்களை அடிக்கடி வாங்குகின்றனர். ஆனால், கர்நாடகாவில் முன்னாள் அமைச்சர் ஒருவர் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ ஹைப்ரீட் கார் ஒன்றை வாங்கி, அதனுடன் நிற்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு, லைக்ஸை தேடியுள்ளார்.

இந்த கர்நாடக அரசியல்வாதியின் பெயர் எம்.டி.பி நாகராஜ். 72 வயதான இவர் பெங்களூரில் பிறந்தவர். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவரான இவர் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் சிறு குறு தொழில் அமைச்சர் ஆவார். அமைச்சர் பதவியை இழந்த போதிலும், இன்னமும் கர்நாடக மாநில பாஜக கட்சியில் முக்கிய பதவியை வகித்துவரும் எம்டிபி நாகராஜ், புதியதாக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரை வாங்கியுள்ளார்.
எம்டிபி நாகராஜ் வாங்கி இருப்பது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்.எம் என்ற ஹைப்ரீட் கார் ஆகும். எலக்ட்ரிக் ஆற்றலின் மூலமாகவும் இயங்குவதால், ஹைப்ரீட் கார்களில் பொதுவாகவே அதிக மைலேஜ் கிடைக்கும். பிஎம்டபிள்யூ எக்ஸ்.எம் காரில் சற்று கூடுதலாகவே கிட்டத்தட்ட 60kmpl வரையிலான மைலேஜ் கிடைக்கிறது.

எம்டிபி நாகராஜ், ஓர் அரசியல்வாதி என்பதுடன் ஓர் செல்வந்தரும் ஆவார். ஆதலால், இவரிடம் ஏற்கனவே பல லக்சரி கார்கள் உள்ளன. இதில் ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஒன்றும் அடங்குகிறது. ஏற்கனவே கூறியதுபோல், முன்னாள் கர்நாடக மாநில அமைச்சராக இருந்த எம்டிபி நாகராஜ் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற பிறகு அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி உள்ளார்.
இருப்பினும், கர்நாடகாவில் இப்போதைக்கு முக்கிய பாஜக தலைவர்கள் என்று எடுத்து பார்த்தால், அதில் எம்டிபி நாகராஜும் ஒருவர் ஆவார். 2023 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது இவர் தாக்கல் செய்த சொத்து மதிப்பு சுமார் ரூ.1,607 கோடி ஆகும். தேர்தலுக்கு பிறகு இவரது சொத்து மதிப்பு எவ்வளவு குறைந்தது என்பது தெரியவில்லை.

இருப்பினும், பிஎம்டபிள்யூ எக்ஸ்.எம் போன்ற ஓர் விலையுயர்ந்த காரை வாங்கும் அளவிற்கு இவரிடம் பணம் இல்லாமல் போக வாய்ப்பில்லை. இந்த பிஎம்டபிள்யூ ஹைப்ரீட் காரின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.2.60 கோடியாக உள்ளது. ஆர்டிஓ கட்டணம், இன்ஸ்சூரன்ஸ், சாலை வரி உள்ளிட்டவை அனைத்தும் சேர்த்தால், காரின் ஆன்-ரோடு விலை ரூ.3.5 கோடி வந்துவிடும்.
இந்த விலையுயர்ந்த ஹைப்ரீட் காரில் பெட்ரோல் டேங்கை நிரப்பும் பகுதி மற்றும் மோட்டார்களை சார்ஜ் ஏற்றும் சார்ஜிங் பகுதி இரண்டும் தனித்தனியாக உள்ளன. இந்த காரில் வழங்கப்படும் மிகவும் அட்வான்ஸ்டு தொழிற்நுட்பம் என்று பார்த்தால், ஹைப்ரீட் சிஸ்டத்தை சொல்லலாம். இந்த பிஎம்டபிள்யூ காரில் 4.4 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.1,607 கோடியில் சொத்து மதிப்பை கொண்டிருக்கும் ஒருவரால் ரூ.3.5 கோடியில் ஒரு காரை வாங்குவது பெரிய விஷயமல்ல. ஆனால், எம்டிபி நாகராஜ் வழக்கமான லக்சரி காரை வாங்காமல், ஹைப்ரீட் காரை வாங்கி இருப்பது புத்திசாலித்தனமான, நல்ல முடிவு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இதன் மூலமாக அதிக மைலேஜ் கிடைக்கும் என்பது மட்டுமின்றி, பசுமையான சுற்றுச்சூழலும் காக்கப்படும்.


Click it and Unblock the Notifications









