ஆட்டோ டிரைவராக ஆரம்பித்த வாழ்க்கை, திரும்பி பார்க்க கூட நேரம் இல்லாமல் உழைத்தவர்! அதற்கான பலனை அனுபவிக்கிறார்
ஆட்டோ டிரைவர் (Auto Driver) ஆக ஆரம்பித்த வாழ்க்கை பெரிய குளிர்பான கம்பெனி (Cool Drinks Company) மூலமாக தற்போது விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார் உடன் சென்றுக் கொண்டிருக்கிறது. யாரை பற்றி பேசுகிறேன் என்றுதானே கேட்கிறீர்கள். பிந்து ஃபிஸ் ஜீரா மசாலா சோடா (Bindu Fizz Jeera Masala Soda) கம்பெனியை நடத்திவரும் தொழிலதிபர் சத்யா சங்கர் (Sathya Shankar)-ஐ பற்றியது ஆகும். கர்நாடகா (Karnataka) மாநிலத்தின் மங்களூர் (Mangaluru)-வுக்கு அருகில் உள்ள புத்தூர் (Puttur) என்கிற கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர், சத்யா சங்கர்.
நினைத்த உடனே தொழில் துவங்குவதற்கு பரம்பரை சொத்து எதுவும் இவரிடம் இல்லை. தனது கடின உழைப்பால் தான் முன்னுக்கு வந்தார். சினிமாவில் திரைப்படம் எடுக்கும் அளவிற்கு இந்தியாவின் பெரும் செல்வந்தரராக உருவெடுத்த திருபாய் அம்பானியின் வாழ்க்கை வரலாற்றில் மிகவும் கவரப்பட்ட சத்யா சங்கர், தனது இளம் வயதில் இருந்தே எந்த வேலையாக இருந்தாலும் பார்க்க ஆரம்பித்தார்.

இன்னும் சொல்லப்போனால், இன்று ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ள சத்யா சங்கர் ஆரம்பத்தில் ஆட்டோ டிரைவராக பணியாற்றினார் என சொன்னால் நம்ப முடிகிறதா? இவர் ஓட்டிய சமயத்தில், கர்நாடகா அரசு சுயதொழில்களை மிகவும் ஊக்கப்படுத்தி கொண்டிருந்த காலம். சுயதொழில்களை துவங்குவதற்கு மாநில அரசாங்கம் சார்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
இப்போதும், கர்நாடகாவில் இவ்வாறான சில கடனுதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தின் முயற்சி உடன் வாழ்க்கையில் தூக்கிவிடப்பட்ட சத்யா சங்கர், அதன்பின் திரும்பி பார்க்க கூட நேரம் இல்லாத அளவிற்கு தொழிலில் வேகமாக வளர்ச்சி காண ஆரம்பித்தார். 3-சக்கர ஆட்டோ ரிக்ஷா ஆனது அம்பாசிடர் கார் (Ambassador Car) ஆக மாறியது.

சில வருடங்களிலேயே சொந்தமாக டயர் டீலர்ஷிப் ஷோரூமை ஆரம்பித்து இந்திய ஆட்டோமொபைல் (Automobile) துறைக்குள் தனது காலடி தடத்தை பதித்தார். ஆனால், சத்யா சங்கருக்கு மிக பெரிய வெற்றி கொடுத்தது அவரது குளிர்பான நிறுவனம் ஆகும். வழக்கமான குளிர்பானங்கள் போல் இல்லாமல், சத்யா சங்கர் நிறுவிய பிந்து ஃபிஸ் ஜீரா மசாலா குளிர்பானத்தின் சுவை வித்தியாசமாக இருந்தது.
இதனால், உடனடியாக மக்கள் மத்தியில் பிரபலமாகிய இந்த குளிர்பான வணிகத்தின் மூலம் கோடி கோடியாய் பணத்தை பார்க்க ஆரம்பித்த சத்யா சங்கரின் வாழ்க்கை அதன்பின் மொத்தமாக மாறிவிட்டது. அதன் வெளிப்பாடே தற்போது புத்தம்-புதிய ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஆகும். தொழிலதிபர் சத்யா சங்கர் புதியதாக வாங்கியிருப்பது, ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் பாண்டோ (Phantom) கார் ஆகும்.

வீட்டிற்கே வந்து டெலிவிரி செய்யப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் காரை மனைவி உடன் சத்யா சங்கர் டெலிவிரி பெறும் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இன்றி மிகவும் சிம்பிளான முறையில் காரை டெலிவிரி பெற்றுள்ளார். கோல்டன் நிறத்தில் புதிய பாண்டோம் காரை தொழிலதிபர் சத்யா சங்கர் வாங்கி உள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரிட்டிஷ் கார் நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸ் இந்தியாவில் விற்பனை செய்யும் 3 கார்களுள் ஒன்று, பாண்டோம் ஆகும். பெட்ரோல் என்ஜின் உடன் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த அல்ட்ரா-லக்சரி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.9.50 கோடியாக உள்ளது.

இது காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில கோடி ரூபாய்கள் அதிகமாக வரும். அதுமட்டுமின்றி, இவ்வாறான ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்குபவர்கள் அதனை சில கோடி ரூபாய்கள் செலவு செய்து தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வர். தொழிலதிபர் சத்யா சங்கர் அவ்வாறு என்னென்ன மாற்றங்களை தனது புதிய பாண்டோம் காரில் கொண்டுவந்துள்ளார் என்கிற விபரங்கள் கிடைக்க பெறவில்லை.
தற்சமயம் விற்பனையில் இருப்பது 8ஆம் தலைமுறை ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் கார் ஆகும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பாண்டோம் காரில் பொருத்தப்படும் 6.8 லிட்டர், வி12 என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 650 பிஎச்பி மற்றும் 900 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.


Click it and Unblock the Notifications









