மாநில வறட்சிக்கு நிதி கேட்க போகும்போது இதெல்லாம் தேவையா!! முதல்வரை ஆள் ஆளுக்கு கண்டப்படி பேசுறாங்க!
கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா வறட்சி நிதி உதவியை பெறுவதற்காக டெல்லிக்கு லக்சரி ஜெட் விமானத்தில் சென்றது இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், கர்நாடகா முதல்வரின் இந்த செயலுக்கு அந்த மாநில பாஜக கட்சியினர் சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முன்பு ஆட்சி செய்துக் கொண்டிருந்த பாரதிய ஜனதாவை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி இந்த 2023ஆம் ஆண்டில்தான் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடகா அமைச்சர் பி.இசட் ஸாமீர் கான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா உடன் இருக்கும் வீடியோ ஒன்றை சமீபத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகியது. ஏனெனில், இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டது ஓர் லக்சரி ஜெட் விமானத்தினுள் ஆகும். பாதுகாப்பு கருதி, மாநில முதல்வர்கள் பெரும்பாலான சமயங்களில் தனி ஜெட் விமானத்தில்தான் எங்கும் செல்வது வழக்கம். அப்படியிருக்க, கர்நாடகா முதல்வர் சென்றது தவறு ஒன்றும் இல்லையே என நீங்கள் கேட்பது புரிகிறது.
ஆனால், கர்நாடகா முதல்வரும், மாநில அமைச்சரும் எதற்காக அந்த பயணத்தை மேற்கொண்டனர் என்பதுதான் இதில் முக்கியமானது. ஏனெனில், இவர்கள் இருவரும் கர்நாடாக மாநிலத்தில் நிலவிவரும் வறட்சி சூழலை போக்க, மத்திய அரசாங்கத்திடம் நிதி கேட்க டெல்லிக்கு சென்றுள்ளனர். அவ்வாறான ஒரு பயணத்தின்போது, இவ்வாறு விமானத்தினுள் போட்டோஷூட் தேவையா என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது.

காங்கிரஸ் அமைச்சர் வெளியிட்ட இந்த வீடியோ, விமானத்தினுள் பல்வேறு பகுதிகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வீடியோவில், முதல்வர் சித்தராமையா தனியாக ஒரு இருக்கையில் அமர்ந்திருக்க, மாநில அமைச்சரும், மற்ற அதிகாரிகளும் மறுபுறத்தில் ஒன்றாக அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். விமானத்தின் உட்பக்க கேபின் வுட்டன் டிசைனிலான லெதரால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
முதல்வருடன் ஒன்றாக இணைந்து செல்வதை பின்னர் காலத்தில் நினைவுக்கூருவதற்காக புகைப்படம் எடுத்துக் கொள்வது ஒன்றும் தவறில்லை. ஆனால், அதனை மற்றவர்கள் பார்க்கும்படி இணையத்தில் பகிர்ந்துக் கொண்டதுதான் தவறாக அமைந்துவிட்டது. கர்நாடகா அமைச்சரின் இந்த சமூக வலைத்தள பதிவை மற்றவர்களை போல், மாநில எதிர்கட்சியான பாஜக-வை சேர்ந்தவர்களும் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து, கர்நாடகா பாஜக கட்சியின் முக்கிய பிரமுகர் ஷெசாத் பூனவல்லா டுவிட்டரில், "ஒருபுறம் கர்நாடகா வறட்சியில் தத்தளித்து கொண்டிருக்க, மாநில முதல்வர் மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதி கேட்கிறார்... கர்நாடக அரசின் அமைச்சர்கள் விவிஐபி விமானங்களிலும், ஜெட் விமானங்களிலும் போட்டோஷூட் செய்து முதலமைச்சர் உடன் வரிப்பணத்தில் உலா வருவதை பார்க்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.
மேலும், ஷெசாத் பூனவல்லாவின் டுவிட்டர் பதிவில், "இது கேவலமானது, வெட்கக் கேடானது, எந்த மாநிலத்தில் அதிகாரம் கிடைத்தாலும் அதை ஏடிஎம் ஆகப் பயன்படுத்துவதே காங்கிரஸின் மனநிலை என்பதையே இது காட்டுகிறது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் அதை செய்தார்கள். இப்போது அது கர்நாடகா, தெலுங்கானா என்று திரும்பியுள்ளது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தனி ஜெட் விமானத்தில் செல்வது ஒன்றும் தவறல்ல. ஏனெனில் பயணத்தை விரைவாக முடிக்க அதிவேக விமான பயணம் தேவையான ஒன்றே. அதனை படம் பிடித்து இணையத்தில் பதிவிடுவது கூட பெரியதாக தவறில்லை. ஆனால், எந்த காரியத்துக்காக செல்கிறோம்... இந்த நேரத்தில் இவ்வாறு படங்களை வெளியிடுவது சரிதானா என யோசிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









