குண்டும் குழியுமாக மோசமான சாலை... அரசாங்க கவனத்தை ஈர்க்க ஃபோட்டோஷூட் நடத்திய இளம் தம்பதி!
மோசமான சாலை குறித்து அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க இளம் தம்பதியர் வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்தனர். இந்த முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பாராட்டுகளை பெற்றுள்ளது.

விபத்துக்களுக்கு போக்குவரத்து மீறல் என்ற ஒற்றை காரணத்தை கூறிவிட முடியாது. மோசமான சாலைகளும் இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சில இடங்களில் மோசமான சாலைகளால் மக்கள் படும் அவஸ்தைகள் ஒருபுறம் சொல்லி மாளாது. மறுபுறத்தில் உயிர்களை காவு வாங்கும் வகையிலும் சாலைகள் நிலை மோசமாக இருந்து வருகிறது.

மோசமான சாலைகளை செப்பனிடுவதற்கு அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டுவது வழக்கமாக விஷயமாக உள்ளது. எனவே, அதிகாரிகள் இதுபோன்ற சாலைகளில் கவனம் செலுத்தவும், உடனடி நடவடிக்கை எடுக்கும் விதத்திலும் சிலர் வித்தியாசமான முயற்சிகளில் இறங்குவதுண்டு.

அண்மையில் பெங்களூரில் மோசமான சாலையின் அவல நிலையை எடுத்துக் காட்ட வேற்று கிரகத்தில் இருப்பது போன்று விண்வெளி உடை அணிந்த வீரர் ஒருவர் நடத்திய ஃபோட்டோஷூட் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. மறுநாள் காலையிலேயே அவசரமாக அந்த சாலை செப்பனிடப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகாவை சேர்ந்த இளம் தம்பதியர் மோசமான சாலை நிலையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதத்தில் வித்தியாசமான முயற்சியில் இறங்கினர். ஆம், அவர்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் குண்டு குழியுமாக இருந்த சாலையின் அவல நிலையை எடுத்துரைக்கும் விதமாக இந்த ஃபோட்டோஷூட் நடத்தப்பட்டுள்ளது.

அதாவது, அந்த குண்டு குழியுமாக இருந்த சாலையிலே அமர்ந்து அவர்கள் விதவிதமான படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிரந்துள்ளனர். இந்த படங்கள் பல்வேறு சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.

எனினும், அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பதை குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், இவர்களது பதிவை பார்த்த பலரும், தங்கள் பகுதியிலும் இவ்வாறுதான் சாலைகள் மோசமாக உள்ளன. இது எல்லா இடத்திற்கும் பொருந்தும் என்று கமென்ட் அடித்து வருகின்றனர்.

இந்த பதிவை குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு சென்று இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், இந்த சாலை சரிசெய்யப்பட்டதா என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை. உயிரிழப்புகள் உள்ளிட்டவை நிகழ்ந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பது என்பது அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் வழக்கமாகி விட்டது.
Image Courtesy:Roshan Zameer/Facebook


Click it and Unblock the Notifications








