டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் பணிக்கு வரும் தூய்மைப் பணியாளர்: கர்நாடகாவில் வைரலாகும் சம்பவம்!

பொதுவாகச் சாலைகளைப் பெருக்கும் தூய்மைப் பணியாளர்கள் எளிமையான வாழ்க்கையை வாழ்பவர்களாகவும், சைக்கிள் அல்லது நடந்து பணிக்கு வருபவர்களாகவுமே நாம் பார்த்திருப்போம். ஆனால், கர்நாடக மாநிலத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் பல லட்சம் மதிப்பிலான சொகுசு காரில் தினமும் பணிக்கு வரும் சம்பவம் தற்போது இந்தியா முழுதும் இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பந்த்வால் நகராட்சியில் பிசி ரோடு பகுதியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருபவர் சேஷப்பண்ணா (சேஷப்பா). இவர் தினமும் விடியற்காலையில் தனது வெள்ளை நிற டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரில் பணிக்கு வந்து இறங்குகிறார். காரை ஓரமாக நிறுத்திவிட்டு, பணியாளர்களுக்கான சீருடையை அணிந்துகொண்டு தெருக்களைக் கூட்டிப் பெருக்கும் பணியில் ஈடுபடுகிறார். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Sessappa Toyota Fortuner

சுமார் 30 ஆண்டுகளாகத் தூய்மைப் பணியை மேற்கொண்டு வரும் இவரது இந்த வளர்ச்சி, ஒரே நாளில் கிடைத்தது அல்ல. இதன் பின்னணியில் எண்ணற்ற இன்னல்களும், கடின உழைப்பும் நிரம்பியுள்ளன. நாவூர் கிராமத்தைச் சேர்ந்த சேஷப்பண்ணா, 1996ஆம் ஆண்டு பந்த்வால் நகராட்சியில் வெறும் 50 ரூபாய் தினக்கூலிக்குத் தூய்மைப் பணியாளராகச் சேர்ந்தார். மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவருக்கு ஆரம்பகால வாழ்க்கை மிகவும் சவாலானதாக இருந்தது. ஒருவேளை உணவிற்கே கஷ்டப்பட்ட காலங்களும் உண்டு. அத்துடன் மதுப்பழக்கத்திற்கும் அடிமையானதால் நிதி நெருக்கடி மேலும் அதிகரித்தது.

கடந்த 2005ம் ஆண்டு இவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அப்போது பந்த்வால் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்த பெள்ளியப்பா (தற்போது உடுப்பியில் டிஎஸ்பி) கொடுத்த அறிவுரையை ஏற்று, மதுப்பழக்கத்தைக் கைவிட்டார். அதன்பின் தனது குடும்பத்தையும் வேலையிலும் கவனம் செலுத்த தொடங்கினார்.

நாளடைவில் அவரது நகராட்சிப் பணி நிரந்தரமானது. அதிகாலை 5 மணி முதல் மதியம் வரை பிசி ரோடு பகுதியில் தூய்மைப் பணி செய்வதும், நகராட்சியின் குப்பை வண்டியை ஓட்டுவதும் இவரது வழக்கமானது. மதியத்திற்குப் பிறகு சொந்தமாக இருக்கும் நிலத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு (பால் பண்ணை) என கூடுதல் தொழில்களையும் தீவிரமாகச் செய்து வந்தார். இதனால், வருமானம் அதிகரித்தது.

அதேபோன்று வாகனங்கள் மீது மிகுந்த விருப்பம் கொண்ட சேஷப்பண்ணா, தனது வருமானத்தைச் சேமித்து முதலில் மாருதி 800 காரை வாங்கினார். பின்னர் ஓம்னி, ஆல்டோ, ரிட்ஸ் மற்றும் ஸ்கார்பியோ எனப் பல கார்களைப் பயன்படுத்தி வந்தார். ஒவ்வொரு முறையும் பழைய காரை விற்றும், சிறிய அளவில் கடன் பெற்றும் அடுத்த கட்டத்திற்கு உயர்ந்தார்.

சமீபத்தில் தனது ஆல்டோ மற்றும் ஸ்கார்பியோ கார்களை விற்று, சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைக் கொண்டு ஒரு செகண்ட் ஹேண்ட் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரைச் சொந்தமாக வாங்கினார். தந்தை இறந்தபோது அடக்கம் செய்யக்கூட பணமில்லாமல் தவித்த நிலையை நினைவில் வைத்து உழைத்த இவருக்கு, இந்த கார் அவரது உழைப்பிற்கு கிடைத்த வெகுமதியாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் என்பது மிகப்பெரிய அந்தஸ்தைக் குறிக்கும் எஸ்யூவி ஆகும். சக்திவாய்ந்த டீசல் என்ஜின், கரடுமுரடான சாலைகளையும் சுலபமாகக் கடக்கும் திறன் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை காரணமாக இதன் புதிய மாடலின் விலை ரூ.45 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை இருக்கும். சேஷப்பண்ணா வாங்கியது பழைய கார் என்றாலும், அதன் பராமரிப்பும் கம்பீரமும் இன்றும் அப்படியே உள்ளது.

தொழில் எதுவாக இருந்தாலும் நேர்மையான உழைப்பும், ஒழுக்கமும் இருந்தால் வாழ்க்கையில் எத்தகைய உயரத்தையும் அடைய முடியும் என்பதை சேஷப்பண்ணாவின் வாழ்க்கை நிரூபித்துள்ளது. ஃபார்ச்சூனர் காரில் வந்து இறங்கினாலும், தன் கையிலிருக்கும் துடைப்பத்தையும் செய்யும் வேலையையும் அவர் இன்றும் பெருமையுடன் நேசிக்கிறார்.

பொதுவாக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பயன்படுத்தும் இந்த சொகுசு காரை, ஒரு தூய்மைப் பணியாளர் வாங்கி ஓட்டுவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்த ஒரு வேலையும் தாழ்ந்தது அல்ல என்பதை உணர்த்தும் வகையிலும், உழைப்பும் சரியான திட்டமிடலும் இருந்தால் யார் வேண்டுமானாலும் தங்கள் கனவுகளை அடைய முடியும் என்பதற்கும் சேஷப்பாவின் வாழ்க்கை ஒரு மிகச்சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. காரில் வந்தாலும் தனது கடமையை மறக்காமல் தெருக்களைத் தூய்மைப்படுத்தும் அவரின் எளிமையை நெட்டிசன்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Source: DaijiworldTV

Article Published On: Saturday, August 29, 2026, 16:22 [IST]
English summary
Karnataka sanitation worker toyota fortuner viral story
மேலும்... #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out