பார்க்கும் இடங்களில் எல்லாம் ‘தாமரை பூ’!! புதிய விமான நிலையத்துக்கும் கூடவா... மலர்ந்தது புதிய ஏர்போர்ட்!
கர்நாடகா மாநிலத்தில் புதியதொரு உள்நாட்டு விமான நிலையம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் எந்த பகுதியில் இந்த புதிய விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பதையும், இந்த விமான நிலையத்தின் சிறப்பம்சங்களை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
கர்நாடகா மாநிலம், சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பிப்ரவரி 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புதியதொரு உள்நாட்டு விமான நிலையத்திற்கான திட்டத்தை அறிமுகம் செய்தார். பிரபல கன்னட கவிஞரும், எழுத்தாளருமான கூவெம்புவின் நினைவாக இந்த விமான நிலையத்திற்கு கூவெம்பு உள்நாட்டு விமான நிலையம் என பெயர் சூட்டப்படுவதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில், அனைத்து கட்டமைப்பு பணிகளும் நிறைவடைந்து கூவெம்பு உள்நாட்டு விமான நிலையம் வெற்றிக்கரமாக இன்று (ஆகஸ்ட் 31) பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு உள்ளது. சிவமொக்கா மாவட்டத்தின் முதல் விமான நிலையமாக விளங்கும் கூவெம்பு உள்நாட்டு விமான நிலையத்தில் முதல் விமானம் உள்ளூர் நேரப்படி காலை 10.45 மணியளவில் தரையிறக்கப்பட்டது.
பெங்களூரில் இருந்து வந்த இந்த முதல் விமானத்தை வரவேற்கும் விதமாக ஓடுத்தள பாதையின் இருபுறங்களில் இருந்தும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இந்த முதல் விமானத்தில் கர்நாடக மாநில முன்னாள் முதல் அமைச்சர் பி.எஸ் எடியூரப்பா, கர்நாடக மாநில உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சர் எம்.பி பட்டீல், சிவமொக்கா மக்களவை உறுப்பினர் பி.ஒய். ராகவேந்திரா, சிவமொக்கா மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பல்வேறு காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அலுவலக பொறுப்பாளர்களும் பயணம் செய்து சிறப்பித்தனர்.

அத்துடன், சிவமொக்கா கூவெம்பு விமான நிலையத்திற்கு வந்த முதல் விமானத்தில் சில பயணிகளும் பயணித்தனர். மொத்தமாக 74 பேர் பெங்களூருவில் இருந்து வந்த இந்த முதல் விமானத்தில் பயணம் செய்தனர். பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 9.47 மணியளவில் புறப்பட்ட இந்த விமானம் 1 மணிநேரத்திற்கு உள்ளாகவே புதிய கூவெம்பு விமான நிலையத்தை வந்தடைந்து உள்ளது.
இந்த விமான நிலையத்தை கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி திறக்க முன்னதாக திட்டமிட்டனர். ஆனால், DGCA-விடம் இருந்து மறுப்பு-இல்லை சான்றிதழ் கிடைக்காததால் இந்த விமான நிலைய திறப்பு நிகழ்ச்சி தாமதமாகியது. கூவெம்பு விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் விமானம் மீண்டும் பெங்களூருக்கு முற்பகல் 11.25 மணியளவில் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சற்று தாமதமாக மதியம் 12 மணியளவிலேயே அந்த விமானம் புறப்பட்டு சென்றது.

கர்நாடகா மாநிலம், சிவமொக்கா மாவட்டத்தின் மைய பகுதியில் இருந்து தெற்கே 8.8 கிமீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூவெம்பு உள்நாட்டு விமான நிலையத்தில் பெயருக்கேற்ப உள்நாட்டு விமானங்கள் மட்டுமே வந்து செல்லும். சர்வதேச விமானங்கள் தரையிறங்காது. இந்த புதிய விமான நிலையத்தின் டிசைன் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏனெனில், கூவெம்பு விமான நிலையம் தாமரை பூவின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சிவமொக்கா மக்களின் கனவு இந்த கூவெம்பு விமான நிலையம் என எடியூரப்பா கூறினாலும், இந்த விமான நிலையத்திற்கு நிலங்களை வழங்கியது தொடர்பாக விமான நிலையத்தை சுற்றியுள்ள மக்கள் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். குறிப்பாக, நிலங்களை வழங்கிய விவசாயிகள், தங்களை விமான நிலைய திறப்பு நிகழ்ச்சியில் சொன்னப்படி அழைத்து பாராட்டவில்லை என போர் கொடி தூக்கி உள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம், மக்கள் பலரின் பிரதான போக்குவரத்தாக விமான போக்குவரத்து மாறி வருவதே ஆகும். புதிய கூவெம்பு உள்நாட்டு விமான நிலையத்தினால் மத்திய கர்நாடகாவில் மக்கள் விமான போக்குவரத்தை பயன்படுத்துவது நிச்சயமாக அதிகரிக்கும். இருப்பினும், இந்த விமான நிலையத்தை தாமரை பூவின் டிசைனில் வடிவமைத்து இருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









