கவரைப்பேட்டை இரயில் விபத்துக்கான உண்மையான காரணத்தை மறைக்கிறார்களா? இரயில் ஏன் அந்த பக்கம் சென்றது?
கவரைப்பேட்டை (Kavaraipettai) இரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் இல்லை என்பதுதான் ஒரே நல்ல செய்தி. இந்தியாவில் கடந்த சில வருடங்களாக இரயில் விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதுபோல் தோன்றுகிறது. புள்ளி விபரங்களை எடுத்து பார்த்தால், 2018ஆம் ஆண்டில் இருந்து கடந்த 6 வருடங்களில் 5 இரயில் விபத்துகள் நடந்துள்ளன. இரயில் விபத்துகளுக்கு பொதுவாகவே இரு காரணங்கள் தான் பெரும்பாலும் கூறப்படுகின்றன. அவை என்ன என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம்.
விமான போக்குவரத்துக்கு அடுத்து, விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைவாக நிகழும் போக்குவரத்தாக இரயில் போக்குவரத்து உள்ளது. ஏனெனில், அந்த அளவிற்கு இந்தியன் இரயில்வே நெட்வொர்க் மிகவும் வலுவாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், அதனையும் தாண்டி நடக்கக்கூடிய இரயில் விபத்துகளை சமீப காலமாக அடிக்கடி பார்த்து வருகிறோம்.

தொழிற்நுட்ப ரீதியாக பார்த்தால், இரயில் விபத்துகளுக்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் இருந்து கொஞ்சம் வெளியே வந்து பார்த்தால், பெரும்பாலான இரயில் விபத்துகளுக்கு காரணமாக இருப்பது இரயில்வே நெட்வொர்க் ஓய்வில்லாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதாகும். இந்தியன் இரயில்வே உலகளவில் மிக பெரிய மற்றும் பிசியான இரயில்வே நெட்வொர்க் ஆகும். தினந்தோறும் இலட்சக்கணக்கிலான மக்கள் இரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.
ஒரு சில வழித்தடங்களில் 24 மணிநேரமும் இரயில்கள் சென்றுக் கொண்டும், சிக்னல்கள் மாற்றப்பட்டு கொண்டும் இருக்கின்றன. மனிதனாக இருந்தாலும் சரி, தொழிற்நுட்பங்களாக இருந்தாலும் சரி ஒரு கட்டம் வரையில் தான் சீராக இயங்கும். அதன்பின் அதனை மாற்ற/ பழுதுப்பார்க்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால், இங்கு தான் பிரச்சனையே. மிக பெரிய இந்தியன் இரயில்வேயில் அனைத்தையும் சரியான நேரத்தில் தினந்தோறும் சரிப்பார்ப்பது பெரிய சவாலாக இருக்கிறது.
தற்போது கவரைப்பேட்டையில் நடந்துள்ள இரயில் விபத்திற்கும் சிக்னல் கோளாறு தான் காரணம் என கூறப்படுகிறது. மெயின் லைனில் செல்ல வேண்டிய மைசூர்- தார்பாங்கா விரைவு இரயில் லூப் லைனில் நுழைந்தது தான் இந்த விபத்திற்கு காரணம் ஆகும். ஏனெனில், லூப் (Loop) லைனில் ஏற்கனவே சரக்கு இரயில் ஒன்று நின்றுக் கொண்டிருந்துள்ளது. பொதுவாகவே, விரைவு இரயில்கள் லூப் லைனிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

சிவப்பு சிக்னல் காட்டப்பட்டால் கூட மெயின் லைனில் விரைவு இரயில் நிற்கலாம். இதன் காரணமாகவே, இந்த இரயில் விபத்திற்கு சிக்னல் கோளாறு தான் உண்மையான காரணமா அல்லது இரயில் இண்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏதேனும் பிரச்சனையா என்கிற சந்தேகம் எழுகிறது. சிக்னல்கள், பாயிண்ட்கள் மற்றும் தண்டவாள கட்டமைப்புகள் என்கிற சிஸ்டத்தை உள்ளடக்கியது இரயில் இண்டர்லாக்கிங் சிஸ்டம் ஆகும். ஆதலால், இது விபத்திற்கு காரணம் என்றால் இதுகுறித்து உடனடியாக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
ஏனெனில், ஒரு இண்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இரயில் வழித்தடங்கள் ஒன்றிணைக்கப்படுகின்றன. இண்டர்லாக்கிங் சிஸ்டம் அனுமதித்தால் மட்டுமே இரயில்களால் ஒரு தண்டவாளத்தில் இருந்து இன்னும் தண்டவாளத்திற்கு மாற முடியும். மிகவும் அவசர கால சூழல்களில் மட்டுமே விரைவு இரயிலை லூப் லைனிற்கு கொண்டு செல்வர். பெரும்பாலும் லூப் லைன் சரக்கு இரயில்களுக்கும், லோக்கல் இரயில்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுவதுதான் வழக்கம்.
சிக்னல் கோளாறுகளும் சில நேரங்களில் இரயில் விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன. சிக்னல் கோளாறுகளுக்கு மின்தடை காரணமாகிறது. மின் விநியோகம் தடைப்படும் போது சிக்னல் கோளாறுகள் நடக்கின்றன. இதை தவிர்க்க முக்கியமான வழித்தடங்களில் யுபிஎஸ் எனப்படும் தடையற்ற பவர் சப்ளை பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், சில விபத்துகளில் பாயிண்ட்கள் எனப்படும் இரயில் தண்டவாளம் மாற பயன்படுத்தப்படும் மெக்கானிசத்திலும் தவறுகள் ஏற்படுகின்றன.

தற்போது கவரைப்பேட்டை இரயில் விபத்தை விசாரித்த என்ஐஏ அதிகாரிகள், தண்டவாளத்தில் போல்டுகள் கழற்றப்பட்டு உள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளதாகவும் கூறி அதிர வைத்துள்ளனர். இதன் காரணமாக சிக்னல் மாறி விழுந்து இருக்கலாம் என கூறும் அதிகாரிகள், இது சதி வேலையா என்கிற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான இரயில் விபத்துகளை தவிர்க்க வேண்டுமெனில், அதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். சிக்னல் கோளாறுகளை தவிர்க்க அனைத்து வழித்தடங்களிலும் யுபிஎஸ் -ஐ பயன்படுத்த வேண்டும். யுஎஸ்பி -ஐ பயன்படுத்த முடியாத பகுதிகளில் சேதமடைந்த வயர்களை அவ்வப்போது சோதனை செய்து மாற்ற வேண்டும். அதேபோல், தண்டவாள பாயிண்ட் மெஷின்களையும் முறையாக பராமரிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









