இந்தியாவிலேயே முதல் ஆளாக சொகுசு ஹெலிகாப்டரை வாங்கிய கேரள தொழிலதிபர்.. அம்பானி கிட்ட கூட இந்த ஹெலிகாப்டர் இல்ல!
இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவரான ரவி பிள்ளை நாட்டிலேயே முதல் ஆளாக ஏர்பஸ் எச் 145 ஹெலிகாப்டரை (Airbus H 145 helicopter) வாங்கியிருக்கின்றார். இதன் விலை மற்றும் சிறப்பு வசதிகள் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நமது அண்டை மாநிலமான கேரளாவைச் சேர்ந்தவர் ரவி பிள்ளை. ஆர்பி குரூப்ஸின் சேர்மேனான இவர் புதிய சொகுசு ரக ஹெலிகாப்டரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஏர்பஸ் எச் 145 ரக ஹெலிகாப்டரையே வாங்கியிருக்கின்றார். இந்த ஹெலிகாப்டரை வாங்கும் முதல் இந்தியர் இவரே ஆவார்.

ஒட்டுமொத்தமாக 1,500 யூனிட் எச் 145 ஹெலிகாப்டர்கள் மட்டுமே தற்போது உலகளவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒன்று தற்போது இந்தியருக்கு சொந்தமாகியிருக்கின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 100 கோடிகள் கொடுத்து இந்த ஹெலிகாப்டர் வாங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொள்முதலைத் தொடர்ந்து தற்போது ஏர்பஸ் நிறுவனம் சொகுசு ஹெலிகாப்டரை ரவி பிள்ளையிடம் டெலிவரி கொடுத்திருக்கின்றது. இதனை டெலிவரி பெற்ற பின்னர் கோவளம் தொடங்கி அஸ்டமுடியில் உள்ள தி ரவிஸுக்கு ஹெலிகாப்டர் தனது முதல் பயணத்தை தொடங்கியது.

நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து ரவிஸ் ஹோட்டல்களிலும் ஹெலிபேட்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. எதிர்காலத்தில் தங்கள் உணவக விருந்தாளிகளை மகிழ்விக்கும் வகையில் இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட இருப்பதாக ரவிஸ் ஹோட்டல்ஸின் வணிக மேம்பாட்டு துணை மேலாளர் எம் எஸ் ஷரத் தெரிவித்தார்.

ஆகையால், லக்சூரி சுற்றுலாவை ஏர்பஸ் எச்145 ஹெலிகாப்டர் ரவிஸ் ஹோட்டல்ஸின் விருந்தாளிகளுக்கு வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. மலபார், அஸ்தமுடி மற்றும் அரபிக் கடல் ஆகியவற்றின் எழில் கொஞ்சும் அழகை இந்த ஹெலிகாப்டர் வாயிலாக சுற்றுலா வழங்கப்பட இருக்கின்றது.

தற்போது ரவிஸ் ஹோட்டல்கள் கோழிக்கோடு, அஸ்டமுடியில் உள்ள கொள்ளம், திருவனந்தபுரத்தின் கோவலம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில் ஏழு விருந்தாளிகளால் பயணிக்க முடியும். இது 20 ஆயிரம் அடிக்கும் அதிகமான உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது.

பாதுகாப்பு, சொகுசு அம்சம் என பலவற்றை இந்த ஹெலிகாப்டரில் பெற்றுக் கொள்ள முடியும். விபத்து நேரங்களில் அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் ஹெலிகாப்டரின் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்துடன், ஃப்யூவல் லீக்கேஜ் என்பதே ஏற்படாத ஓர் ஹெலிகாப்டராகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, அட்வான்ஸ்ட் ஒயர்லெஸ் கம்யூனிகேஷன் சிஸ்டம் இந்த சாப்பரில் கொடுக்கப்பட்டுள்ளது. எச்145 ஹெலிகாப்டர் ஓர் ஐந்து பிளேட் அமைப்பு கொண்ட ஹெலிகாப்டர் ஆகும். இதில், 4 டன் கிளாஸ் ட்வின் எஞ்ஜின் ரோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூப்பரான சொகுசு ஹெலிகாப்டரையே இந்தியாவிலேயே முதல் ஆளாக ரவி பிள்ளை வாங்கியிருக்கின்றார்.

ரவி பிள்ளை 68 வயதான இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார். இவர் சொத்து மதிப்பு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இவரின் நிறுவனத்தின்கீழ் சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணி புரிந்து வருகின்றனர். ஆகையால், இந்தியாவின் மாபெரும் செல்வந்தராக இவர் காட்சியளிக்கின்றார்.


Click it and Unblock the Notifications








