இந்தியாவில் ஒருவரிடம் இப்படியொரு பிரைவேட் ஜெட் இருக்கு என்றால் வேற லெவல்... அம்பானி, அதானி எல்லாம் கிடையாது!!
விமானத்தில் ஒருமுறையாவது பயணம் செய்து பார்த்துவிட வேண்டும் என்பதை வாழ்நாள் இலட்சியமாக கொண்டுள்ள மக்கள் பலர் இருக்கும் இதே இந்தியாவில்தான் பிரைவேட் ஜெட்களை பயன்படுத்தும் செல்வந்தர்களும் இருக்கின்றனர். அவ்வாறு, பிரைவேட் ஜெட்டை கார் போல பயன்படுத்திவரும் கேரள மல்டி மில்லியனர் ஒருவர் புதியதாக மேலும் ஒரு பிரைவேட் ஜெட்டை வாங்கி உள்ளார். யார் அந்த கேரள தொழிலதிபர் என்பதையும், அவர் வாங்கியுள்ள பிரைவேட் ஜெட்டை பற்றியும் சுவாரஸ்யமான விபரங்களை விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
கேரளாவை சேர்ந்த பெரும் தொழிலதிபர், யூசுப் அலி முசாலியம் விட்டில் அப்துல் காதர். இந்தியாவை தாண்டி உலகளவில் பல நாடுகளில் வணிகத்தை கொண்டுள்ள லுலு குழுமத்தை நிறுவியவரான யூசுப் அலிக்கு வயது 68. பொதுவாகவே, மல்டி மில்லியனர்களிடம் ஏகப்பட்ட சொகுசு கார்கள் இருக்கும் என்பதை சொல்லவே வேண்டாம். யூசுப் அலி ஒருபடி மேலே சென்று, பிரைவேட் ஜெட்களையும் சொந்தமாக வைத்துள்ளார்.

தொழிலதிபர் அதிபர் யூசுப் அலியிடம் லீகசி 650 என்கிற பிரைவேட் ஜெட் ஒன்று உள்ளது. 2016ஆம் ஆண்டில் புதியதாக கல்ஃப்ஸ்ட்ரீம் 550 என்கிற பிரைவேட் ஜெட்டை இவர் வாங்கினார். இந்த கல்ஃப்ஸ்ட்ரீம் 550 தனி விமானத்தை விற்கும் முடிவில் யூசுப் அலி உள்ளார். இதற்கு காரணம், கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி600 (Gulfstream G600) என்கிற பிரைவேட் ஜெட்டை புதியதாக யூசுப் அலி வாங்கினார்.
2016இல் ரூ.350 கோடியில் கல்ஃப்ஸ்ட்ரீம் 550 விமானத்தை வாங்கிய யூசுப் அலி, புதிய கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி600 விமானத்தை அதனை காட்டிலும் ரூ.133 கோடி அதிகமாக சுமார் ரூ.483 கோடியில் வாங்கியுள்ளார். இந்த இரு பிரைவேட் ஜெட்களையும் அமெரிக்காவை சேர்ந்த கல்ஃப் ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கியது. அமெரிக்காவின் விர்ஜினியாவை சேர்ந்த ஜெனரல் டைனாமிக்ஸ் என்கிற நிறுவனத்தின் கீழ் கல்ஃப் ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் செயல்படுகிறது.

தொழிலதிபர் யூசுப் அலி புதியதாக வாங்கியுள்ள கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி600 விமானத்தை கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் கல்ஃப்ஸ்ட்ரீம் நிறுவனம் உருவாக்கியது. இந்த பிரைவேட் ஜெட்டை அதிகப்பட்சமாக 6600 நாட்டிக்கல் மைல் தொலைவிற்கு இடையில் எங்கும் நிறுத்தாமல் இயக்க முடியும். ஒருமுறை எரிபொருள் டேங்கை முழுவதுமாக நிரப்பினால் அதிக தொலைவிற்கு செல்லக்கூடிய பிரைவேட் ஜெட் விமானமாக இது கருதப்படுகிறது.
ஆதலால், நியூயார்க்கில் இருந்து துபாய், லண்டனில் இருந்து சீன தலைநகர் பீஜிங், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சாங்காய் போன்ற மிக தொலைத்தூர பயணங்களையும் இந்த லக்சரியான விமானத்தில் மேற்கொள்ள முடியும். யூசுப் அலியின் புதிய கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி600 விமானத்தில் 19 பயணிகள் வரை சவுகரியமாக அமர்ந்து பயணிக்கலாம். இந்த விமானத்தில் ப்ராட் & வொயிட்னி 815 ஜிஏ என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விமானத்தின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 925கிமீ ஆகும். அதாவது, சென்னையில் இருந்து டெல்லிக்கு வெறும் 2இல் இருந்து 2.5 மணிநேரங்களில் சென்றுவிடலாம். கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி600 தனி விமானம் முதன்முதலாக 2014ஆம் ஆண்டில் பொது பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இந்த விமானத்தை முதல் கஸ்டமர் 2019இல் வாங்கினார். தற்போதுவரையில் 100க்கும் அதிகமான கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி600 விமானங்கள் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த விமானத்தை டேக்-ஆஃப் செய்ய 5700 அடி நீளத்திலும், லேண்டிங் செய்ய 3100 அடி நீளத்திலும் ஓடுத்தள பாதை போதுமானது. ஓடுத்தள பாதை தெளிவாக தெரியாவிட்டாலும், இந்த விமானத்தை லேண்டிங் செய்ய முடியும் என கூறப்படுகிறது. இந்த விமானத்தினுள் என்ஜினின் இரைச்சல் கேட்காதவாறு அமைதியான மற்றும் லக்சரியான கேபினை வடிவமைத்துள்ளனர். 96.1 அடி நீளம் கொண்ட இந்த பிரைவேட் ஜெட்டின் உயரம் 25.3 அடி ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழிலதிபர் யூசுப் அலி முன்பு வைத்திருந்த கல்ஃப்ஸ்ட்ரீம் 550 விமானமும் லக்சரி தரத்திலானது தான் என்றாலும், அதனை 8 வருடங்களாக பயன்படுத்திய காரணத்தினாலும், புதியதாக கல்ஃப் ஸ்ட்ரீம் ஜி600 விமானத்தை வாங்கிய காரணத்தினாலும் பழைய கல்ஃப்ஸ்ட்ரீம் 550 ஜெட்டை அவர் விற்க முன்வந்துள்ளார். புதிய கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி600 விமானத்தை பற்றி இதுவரை நாம் பார்த்ததில், பழைய விமானத்தின் ஞாபகம் நிச்சயமாக யூசுப் அலிக்கு ஏற்படாது.


Click it and Unblock the Notifications









