முதல்வராக இருந்தாலும் எல்லாருக்கும் சட்டம் ஒன்னு தான்!! AI ஏன் பெஸ்ட் என்று இப்போ தெரிஞ்சிருக்கும்!
கேரளாவில், முதலமைச்சர் என்று கூட பார்க்காமல் அவரது கியா கார்னிவல் காருக்கு சாலை விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யார் செய்த வேலை இது என்பதையும், முதல்வரின் காருக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பதையும் பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
சுருக்கமாக AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி ஆனது கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இத்தகைய நுண்ணறிவினால் எதிர்காலத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம் என ஒருபக்கம் நம்மை விஞ்ஞானிகள் பயமுறுத்திக் கொண்டு இருந்தாலும், மறுப்பக்கம் ஏஐ பயன்பாடு அசூர வளர்ச்சி அடைந்து வருகிறது.

குறிப்பாக, ஏஐ கேமராக்கள் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. போக்குவரத்தை சீரமைப்பதிலும் நிறைய நாடுகளில் ஏஐ கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏஐ கேமராக்களினால் விதிமீறல்களை கண்டறிய போலீஸார் சாலைக்கு வர வேண்டிய தேவை நீங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, வாகன ஓட்டிகளை எல்லா நேரங்களிலும் ஏஐ கேமராக்கள் தவறு செய்யாதவாறு ஒருவித பயத்திலேயே வைத்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரையில், கேரளாவில் ஏஐ கேமராக்கள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த பயன்படுகின்றன. இருப்பினும், அந்த மாநிலத்தில் ஏஐ கேமராக்களை உபயோகிப்பதில் சில பல பிரச்சனைகள் ஏற்படுவதை அவ்வப்போது செய்திகளில் பார்த்து வருகிறோம். ஏஐ கேமராக்கள் தவறுதலாக தனக்கு அபராத செல்லானை வழங்கி உள்ளதாக வாகன ஓட்டிகள் சிலர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஏஐ கேமராக்களை செயல்படுத்துவதற்கு கேரள அரசு முறையாக பணம் செலவழிப்பது இல்லை என்றும், இதனால் ஏஐ கேமராக்களின் பயன்பாடு படிப்படியாக நிறுத்திக் கொள்ளப்பட உள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனின் கியா கார்னிவல் காருக்கு சாலை விதிகளை மீறியதற்காக ஏஐ கேமரா அபராத செல்லானை அனுப்பி உள்ளது.
கேரள முதல்வர் பிரனாயி விஜயன் சமீபத்தில் இடுக்கி யாத்ராவில் கலந்துக் கொண்டார். அதற்காக அவர், பாதுகாப்பு வாகனங்கள் உடன் முண்டகாயம் குட்டிக்காணம் என்ற சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, முதல்வரின் கான்வேயில் இருந்த கியா கார்னிவல் காரில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி சீட்பெல்ட் அணிந்து இல்லாததற்காக அங்கிருந்த ஏஐ கேமரா அபராத இ-செல்லானை அந்த கியா கார்னிவல் காருடன் இணைக்கப்பட்ட இ-மெயிலுக்கு அனுப்பி உள்ளது.

இந்த கியா கார்னிவல் கார் ஆனது கேரள முதல்வரின் கான்வேயில் பயன்படுத்தக்கூடிய கார்களுள் ஒன்றாகும். சம்பவத்தின்போது, காரினுள் முன் இருக்கையில் சீட்பெல்ட் அணியாமல் சென்றவரின் விபரங்கள் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில், கேரள முதல்வர் பிரனாயி விஜயன் மற்றும் சில மாநில அமைச்சர்கள் பேருந்து ஒன்றில் பயணம் செய்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நடைபெற்றது 2023 டிசம்பர் 12ஆம் தேதி மாலை 4.17 மணியளவில் ஆகும். முன் இருக்கை பயணி சீட் பெல்ட் அணியாத குற்றத்திற்காக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அபராத செல்லானில், காரின் வாகன பதிவெண்ணாக KL 01 CV 6683 என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் காரின் படத்தையும் இ-செல்லானில் ஏஐ கேமரா படம்பிடித்து ஒட்டி அனுப்பி வைத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான விஷயங்களினால்தான் செயற்கை நுண்ணறிவை எங்களுக்கு பிடித்துள்ளது. பாமர மக்களுக்கும், மாநிலத்தின் முதல்வருக்கும் ஒரு நியதி. அபராதத்தை செலுத்துவார்களா? மாட்டார்களா? என்பது அடுத்தப்படியான விஷயம். ஆனால், இவ்வாறான கெட்ட பெயர்களுக்கு ஆளாகிவிட கூடாது என்பதற்காக முதல்வரின் கான்வேயில் செல்பவர்கள் அடுத்த முறை சீட்பெல்ட்களை ஒழுங்காக அணிந்துக் கொள்வர்.


Click it and Unblock the Notifications









