ஃபேன்சி நம்பர் பிளேட்டை வாங்கியது யார்னு தெரியாம தலையை பிச்சிக்கிட்டு இருந்தோம்! ஒருவழியா ஆள் யாருனு தெரிந்தது
ஒரு சிலர் வாகன பதிவு எண்ணிற்காக பல இலட்ச ரூபாய்கள் மற்றும் கோடி ரூபாய்களை கூட செலவு செய்துள்ளதை பார்த்துள்ளோம். குறிப்பாக, இந்த விஷயத்தில் துபாய், அபுதாபி போன்ற அரேபிய நகர மக்கள் அதிக தொகையை செலவு செய்கின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் '0007' என்கிற வாகன பதிவு எண்ணிற்காக சுமார் ரூ.46 இலட்சம் செலவு செய்யப்பட்ட செய்தி இணையத்தில் வைரலாகியது. நமது டிரைவ்ஸ்பார்க் செய்தி தளத்தில் கூட அதனை பற்றி பதிவிட்டு இருந்தோம். இந்த சம்பவம் வெளிநாடுகளில் நடைபெற்றது கிடையாது; நம் இந்தியாவில் கேரளாவில் நடந்திருப்பது ஆகும்.
கேரள மக்கள் பொதுவாகவே ஆட்டோமொபைல் வாகனங்களின் மீது கூடுதல் ஆர்வம் கொண்டவர்கள் என்பதை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். இருப்பினும், நம்பர் பிளேட்டிற்காக கேரளாவை சேர்ந்த ஒருவர் ரூ.46 இலட்சம் வரையில் செலவு செய்திருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பத்தில், கேரளாவில் இவ்வளவு விலை கொடுத்து ஒருவர் நம்பர் பிளேட்டை வாங்கி உள்ளார் என்கிற தகவல் மட்டுமே கிடைத்தது.

மற்றப்படி, யார் அந்த ஃபேன்சி (Fancy) நம்பர் பிளேட்டை வாங்கினார். எந்த வாகனத்திற்காக இந்த நம்பர் பிளேட் வாங்கப்பட்டுள்ளது என்கிற விபரங்கள் கிடைக்காமல் இருந்துவந்த நிலையில், தற்போது அந்த விபரங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவர துவங்கியுள்ளன. ரூ.46 லட்சம் செலவு செய்து நம்பர் பிளேட்டை வாங்கி இருப்பவரின் பெயர் வேணு கோபாலகிருஷ்ணன் (Venu Gopalakrishnan) ஆகும்.
கேரளாவின் கொச்சி (Kochi)-ஐ சேர்ந்தவரான இவர் லைட்மஸ்7 (Litmus7) என்கிற பெயரில் ஒரு ஐடி கம்பெனி (IT Company)-ஐ நடத்தி வருகிறார். இதன் மூலமாக செல்வ செழிப்பாக வாழ்க்கையை வாழ்ந்துவரும் வேணு கோபாலகிருஷ்ணன் தனது விலையுயர்ந்த லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) என்கிற லக்சரியான எஸ்யூவி காருக்காக இந்த ஃபேன்சி நம்பர் பிளேட்டை வாங்கி உள்ளார்.

ரூ.46 லட்சம் செலவு செய்து வேணு கோபாலகிருஷ்ணன் வாங்கி இருப்பது 'KL 07 DG 0007' என்கிற கேரள வாகன பதிவெண்ணை ஆகும். இதனை இவர் எளிதாக ஒன்றும் பெற்றுவிடவில்லை. கொச்சிக்கு அருகே எர்ணாகுளம் பிராந்திய போக்குவரத்து அலுவலகத்தில் இந்த ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்கான ஏலம் நடத்தப்பட்டது.
இந்த ஏலத்தில், வேணு கோபாலகிருஷ்ணனை போன்று பலர் கலந்துக் கொண்டனர். இறுதியாக, வேணு கோபாலகிருஷ்ணன் ரூ.46 லட்சத்தில் இந்த ஃபேன்சி எண்ணை கேட்டு '0007' எண்ணை சொந்தமாக்கி உள்ளார். ஆனால், இந்த வாகன பதிவெண்ணிற்கான ஆரம்ப ஏல விலை வெறும் ரூ.25,000 மட்டுமே என சொன்னால் நம்ப முடிகிறதா.

ரூ.25,000ஐ செலுத்தி '0007' எண்ணை பெற வேணு கோபாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் தயாராக இருந்தனர். ஆனால் யாரும் விட்டுக் கொடுக்காததால் ஏலம் நடத்தப்பட்டு கடைசியாக வேணு கோபாலகிருஷ்ணனின் கைக்கு இந்த நம்பர் பிளேட் சென்றுள்ளது. கேரளா மாநிலத்தில் மிக அதிக விலையில் பெறப்பட்ட வாகன பதிவெண் இதுவாகும்.
இதற்கு முன்ப வரையில் ரூ.31 லட்சத்தில் வாங்கப்பட்ட வாகன பதிவெண் தான் கேரளாவில் மிகவும் காஸ்ட்லீயான ஃபேன்சி நம்பர் பிளேட் ஆக இருந்தது. இந்த ஃபேன்சி வாகன பதிவெண்ணை தனது லம்போர்கினி உருஸ் காருக்காக வேணு கோபாலகிருஷ்ணன் வாங்கியுள்ளார் என ஏற்கனவே கூறினோம் அல்லவா. இவரிடம் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்கள் கலந்த கலவையில் பளிச்சிடும் நிறத்தில் உருஸ் கார் உள்ளது.
மேலும், தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணனிடம் இருப்பது லம்போர்கினி உருஸ் காரின் பெர்ஃபார்மண்டே (Performante) வேரியண்ட் ஆகும். உருஸ் காரின் வேரியண்ட்களிலேயே விலையுயர்ந்ததாக விளங்கும் இதனை கேரளாவில் வாங்கிய முதல் ஆள் வேணு கோபாலகிருஷ்ணனாக இருக்கவே வாய்ப்புள்ளது. இந்தியாவில் உருஸ் பெர்ஃபார்மண்டே கார் 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்சமயம் லம்போர்கினி உருஸ் கார் விற்பனையில் இல்லை. உருஸ் எஸ்.இ என்கிற அதன் கிராஸ்ஓவர் வெர்சன் (Crossover Version) மட்டுமே விற்பனையில் உள்ளது. உருஸ் பெர்ஃபார்மண்டே போன்ற விலையுயர்ந்த மற்றும் பவர்ஃபுல்லான காரை வாங்கியவருக்கு இவ்வாறு ரூ.46 லட்சம் செலவு செய்து ஃபேன்சி நம்பர் பிளேட்டை வாங்குவது எல்லாம் பெரிய விஷயமாகவே இருக்காது.


Click it and Unblock the Notifications









