மகனுக்காக மினி ராயல் என்பீல்டு பைக்கை உருவாக்கிய சூப்பர் அப்பா... காரணம் தெரிஞ்சா அசந்து போயிருவீங்க
மகனுக்காக மினி ராயல் என்பீல்டு பைக்கை உருவாக்கி தந்தை ஒருவர் அசத்தியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகின் மிக பழமையான மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களில் ராயல் என்பீல்டும் ஒன்று. இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்க வேண்டும், அதனை ஓட்ட வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் நிச்சயமாக இருக்கும்.

குறிப்பாக ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்கள் மீதான ஆர்வம் ஒரு சிலருக்கு மிக இளம் வயதிலேயே தொடங்கி விடுகிறது. எனினும் மிக இளம் வயதில் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களை ஓட்டுவது என்பது நடைமுறையில் சாத்தியமல்ல. ஆனால் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு அந்த பாக்கியம் கிடைத்துள்ளது.

அந்த சிறுவன் தற்போது மினி ராயல் என்பீல்டு புல்லட் மோட்டார்சைக்கிளை ஜாலியாக ஓட்டி வருகிறார். இது அவரது தந்தையால், வீட்டிலேயே உருவாக்கப்பட்டது என்பதுதான் அந்த பைக்கின் சிறப்பம்சம். இது பார்ப்பதற்கு அச்சு அசலாக ஃபுல்-சைஸ் ராயல் என்பீல்டு புல்லட் மோட்டார்சைக்கிளை போன்றே காட்சியளிக்கிறது.

இதற்காக சிறுவனின் தந்தை கடினமாக உழைத்திருக்கிறார் என்பது இதில் இருந்தே தெரிகிறது. இந்த பைக் ஃபைபரால் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து பாகங்களும் வீட்டிலேயே அசெம்பிள் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக் பேட்டரி மூலம் இயங்க கூடியது. எலெக்ட்ரிக் பைக் என்பதால், சுற்றுச்சூழலையும் இது மாசுபடுத்தாது.

உண்மையான ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை போன்றே, ஹெட்லேம்ப், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவற்றையும் இந்த பைக் பெற்றுள்ளது. அத்துடன் இதன் எரிபொருள் டேங்க்கில், ராயல் என்பீல்டு பெயரும் இடம்பெற்றுள்ளது. மேலும் சஸ்பென்ஸன், இன்டிகேட்டர்கள், மிரர்கள், லெக் கார்டு போன்ற வசதிகளும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் எலெக்ட்ரிக் மோட்டார் அல்லது பேட்டரியின் திறன் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. எனினும் சிறிய திறன் கொண்ட பேட்டரிதான் வழங்கப்பட்டிருக்கும் என கருதப்படுகிறது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், தோராயமாக 30 நிமிடங்கள் வரை பயன்படுத்த கூடிய திறன் பெற்ற பேட்டரியாக இது இருக்கலாம்.

தந்தையிடம் இருந்து மினி ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை பரிசாக பெற்றுள்ள சிறுவனுக்கு 5-7 வயதுதான் இருக்கும். ஆனால் அந்த சிறுவனுக்கு தற்போதே ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருப்பதாக தெரிகிறது. எனவே மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மிக சரியான தீர்வை கண்டுபிடித்ததுடன், அதனை அருமையாக செயல்படுத்தியும் உள்ளார் அந்த தந்தை.

தனது கனவை நிறைவேற்ற உதவும் மிகச்சிறந்த தந்தையை அந்த சிறுவன் பெற்றிருப்பதாக நெட்டிசன்கள் தற்போது பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தந்தை பரிசளித்த மினி ராயல் என்பீல்டு புல்லட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அந்த சிறுவன் ஓட்டும் வீடியோ காட்சியும் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இதனிடையே ராயல் என்பீல்டு நிறுவனமும் முழுமையான எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை உருவாக்குவது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் வரும் ஆண்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








