மாருதி கார்களை அலட்சியமா நினைச்சிக்கிட்டு இருக்கோம்... இன்று ஒரு குடும்பம் உயிரோட இருக்க காரணமே அதுதான்!
கனமழையினால் கேரள மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். முக்கியமாக, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மக்களின் மனதில் நீங்காத வடுவாக மாறியுள்ளது. அதேபோல், கேரளாவின் பெரும்பாலான மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக, கேரளாவில் மக்கள் பலரது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக கனமழையினால், கேரளாவில் ஓடும் ஆறுகளில் நீர் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக, பல்வேறு தரைப்பாலங்கள் ஆற்றில் மூழ்கியுள்ளன. இதன் விளைவாக, அந்த தரைப்பாலங்களில் வாகனங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், கேரளாவில் ஆற்று நீரில் மூழ்கிய தரைப்பாலத்தை ஒருவர் தனது மாருதி சுஸுகி ஆல்டோ காரில் கடந்து சென்றுள்ளார். இது ஆபத்தானது என்றாலும், இதற்கான காரணத்தை கேட்டால் ஆச்சிரியப்படுவீர்கள். என்ன நடந்தது? வாருங்கள் அதை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

பொதுவாகவே, கேரள மக்கள் ஆட்டோமொபைல் வாகனங்களில் கூடுதல் ஆர்வமாக இருப்பார்கள் என்பதை பல்வேறு நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். சூழல் எதுவாக இருந்தாலும் சரி, அதில் சிறிதளவாவது ஆட்டோமொபைல் வாகனங்களின் டச் இருக்க வேண்டும் என கேரள மக்கள் நினைப்பர். சமீபத்தில்கூட, கேரளாவில் கனமழையினால் சிக்கி தவித்த மக்களை இளைஞர்கள் சிலர் மஹிந்திரா பொலேரோ காரில் மீட்டதை பற்றி பார்த்திருந்தோம்.
அந்த வகையில் இங்கு ஒருவர் ஆர்பரித்து ஓடும் ஆற்றை கடக்க மாருதி சுஸுகி ஆல்டோ காரை பயன்படுத்தி உள்ளார். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தில், கனமழையினால் வழக்கத்தை காட்டிலும் அதிக நீருடன் ஆர்பரித்து ஓடும் ஆறு அங்கிருந்த தரைப்பாலத்தை மூழ்கடித்துள்ளது.

ஆதலால், அந்த பாலத்தில் ஆற்றை கடக்க யவரொருவரும் தயாராக இல்லை. இருப்பினும், இந்த மாருதி சுஸுகி ஆல்டோ கார் ஓட்டி மட்டும் ஆபத்தையும் மீறி ஆற்றை கடந்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், எந்தவொரு தடுமாற்றமும் இல்லாமல், இடையில் எங்கேயும் காரை நிறுத்தாமல் இந்த நபர் ஆற்றை கடந்துள்ளார். இதனை சுற்றியிருந்து பார்த்தவர்கள் தங்களது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட, அது தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து நமக்கு கிடைக்க பெற்றுள்ள தகவலின்படி, இந்த கார் ஓட்டி ஜாலிக்காகவோ அல்லது பந்தயத்திற்காக இந்த செயலில் ஈடுப்படவில்லை. கர்ப்பிணியாக இருந்த தனது மனைவிக்கு திடீரென இடுப்பு வலி ஏற்பட்ட காரணத்தினால், அவசர மருத்துவ உதவிக்காக ஆபத்தையும் மறந்து இவ்வாறு காரை ஓட்டி சென்றுள்ளார். இதனை அறிந்த மக்கள், அவரை திட்டுவதற்கு பதிலாக பாராட்டி வருகின்றனர்.
மாருதி சுஸுகி ஆல்டோ போன்ற எடை குறைவான காரில் ஆக்ரோஷமாக ஓடும் ஆற்றை கடப்பது மிகவும் சவாலான காரியம் ஆகும். இருப்பினும், இந்த நபர் அதனை செய்து காட்டியுள்ளார். ஆகவே, கார் டிரைவிங்கில் இந்த நபர் நன்கு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். ஏனெனில், சில நிகழ்வுகளில் பெரிய, பெரிய டிராக்டர், பேருந்தை கூட ஆற்றின் வேகம் தடம்புரள செய்துள்ளதை பார்த்திருக்கிறோம்.
இவ்வாறான சவாலான பயணங்களுக்கு உங்களிடம் 4X4 டிரைவ் சிஸ்டத்தை கொண்ட கார் இருப்பது இன்னும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறான பயணங்களின்போது இடையில் தடுமாற்றத்தை கண்டாலும், அத்தகைய வாகனங்கள் நிலைமையை சமாளித்து அங்கிருந்து மீண்டு வந்துவிடும். ஆனால், ஆல்டோ கார்களில் 4x4 டிரைவ் சிஸ்டம் எதுவும் வழங்கப்படுவதில்லை. அதனை விட முக்கியமானது என்னவென்றால், ஆல்டோ ஆனது மிகவும் எடை குறைவான வாகனம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மனைவிக்காக இவ்வாறான செயலில் ஈடுப்பட்ட இந்த நபரின் டிரைவிங்கை நாம் பாராட்டினாலும், இது எப்படியிருந்தாலும் ஆபத்தான முடிவாகும். எங்களை கேட்டால், இதற்கு பதிலாக அந்த நபர் மாற்று முடிவை எடுத்திருக்க வேண்டும். ஏனெனில், ஒருவேளை கார் சிறிய தடுமாற்றம் கண்டிருந்தால் கூட நிலைமை மோசமானதாகி இருக்கும். அது, இவரது உயிருக்கு மட்டுமின்றி, காருக்குள் இருந்த அவரது மனைவி மற்றும் வயிற்றில் இருந்த குழந்தையின் உயிருக்கும் ஆபத்தாக முடிந்திருக்கலாம். ஆதலால், இவ்வாறான செயலில் யாரும் ஈடுப்பட வேண்டாம்.


Click it and Unblock the Notifications








