எல்லா ஊரிலும் அரசு பேருந்துகள் படு மட்டமா இருக்கு... கடைசியா எப்போது சர்வீஸ் பண்ண வண்டியோ!!
சாலை விபத்துகள் நம் இந்தியாவிற்கு ஒன்றும் புதியது அல்ல. ஆனால், அரசு பேருந்துகள் விபத்தில் சிக்குவது கொஞ்சம் அரிதான விஷயம் தான். ஏனெனில், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு பேருந்துகளை முடிந்தவரையில் மெதுவாகவும், கவனமாகவும் தான் ஓட்டுகின்றனர். இருப்பினும், அதனையும் மீறி சில அரசு பேருந்துகள் விபத்தில் சிக்குகின்றன. அந்த வகையில், கேரளாவில் விபத்தில் சிக்கிய அரசு பேருந்தின் பின் சக்கரங்கள் தனியாக கழன்று விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு பேருந்துகளின் தரத்தை சந்தேகத்திற்கு உள்ளாக்கும் வகையில் அமைந்துள்ள இந்த விபத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
நம் இந்திய நாட்டில் சாலை விபத்துகள் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தினந்தோறும் செய்தியை திறந்தாலே குறைந்தது ஒரு சாலை விபத்து குறித்த செய்தியை ஆவது பார்க்க முடிகிறது. இதில் பல சாலை விபத்துகள் அதிவேக பயணத்தினாலும், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதினாலும் தான் ஏற்படுகின்றன.

அதேநேரம், தற்போது கேரளாவில் நடந்திருப்பதுபோல் ஒரு சில விபத்துகள் வாகனங்களின் குறைந்த தரத்தினால் ஏற்பட்டுள்ளன. தற்போது கேரளாவில் நடைபெற்றுள்ள இந்த விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. கேரளாவின் கொல்லம் பகுதிக்கு அருகே கொட்டாரக்கரை என்கிற இடத்தில் இந்த விபத்து நவம்பர் 14ஆம் தேதி காலை 7 மணியளவில் நடந்துள்ளது.
கொட்டாரக்கரையில் இருந்து புனலூருக்கு சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து ஒரு வளைவில் திரும்பும்போது எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்றினால் விபத்தில் சிக்கியுள்ளது. இதுதொடர்பான பரபரப்பு காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த விபத்தினால், அரசு பேருந்து பெரிய அளவில் சேதாரமாகி உள்ளது.

ஏற்கனவே கூறியதுபோல், இந்த விபத்துக்கு எதிரே வந்த எஸ்யூவி கார் தான் காரணமாகும். அதிவேகமாக வந்த அந்த வெள்ளை நிறத்திலான எஸ்யூவி காரினால், அரசு பேருந்து டிரைவர் பேருந்தின் வேகத்தை குறைக்க முற்பட்டபோது, பேருந்தின் பின்சக்கர அச்சு முழுவதுமாக தனியாக கழன்றுள்ளது. இதில், கண்ட்ரோலை இழந்த டிரைவர் பேருந்தை எப்படியோ ஒருவழியாக சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டார்.
அவர் நிறுத்தவில்லை என்றாலும், பேருந்து சென்றிருக்காது. ஏனெனில், சாலையின் ஓரத்தில் பேருந்து நிற்பதற்குள் பேருந்தின் பின் சக்கரங்கள் தனியாக கழன்றுவிட்டன. இதனால், பேருந்தின் பின்பகுதி நேரடியாக தரையில் விழுந்தது. கிட்டத்தட்ட 1 மீட்டர் உயரத்தில் இருந்து பேருந்தின் அடிப்பகுதி கீழே விழுந்ததால், உள்ளே இருந்த பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

அதேபோல், எதிரே வேகமாக வந்த கார் பேருந்து மீது மோதியிருப்பதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால், கார் பேருந்து மீது மோதியதா என்பது உறுதியாக தெரியவில்லை. நல்லவேளையாக இந்த விபததில் எவரொருவருக்கும் காயமில்லை. பேருந்து விபத்தில் சிக்கிய சமயத்தில் எதிரே வந்த பென்ஸ் காரை அதன் டிரைவர் இலாவகமாக ஓட்டி ஓரத்தில் கொண்டுப்போய் நிறுத்திவிட்டார்.
ஏதேனும் சாலை விபத்து நடக்கிறது என்றால் உடனடியாக இந்த பென்ஸ் கார் டிரைவர் போன்று வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த இடத்தில் இருந்து முடிந்தவரையில் வேகமாக விலகி செல்ல வேண்டும். இந்த விபத்தில் யாருக்கும் பெரியதாக காயமில்லை என்றாலும், அரசு பேருந்தின் பின் சக்கரங்கள் தனியாக கழன்று இருப்பது ஏற்கக்கூடியது அல்ல. ஏனெனில், வலுவானதாக பொருத்தப்படும் சக்கர அச்சு கழன்று வந்துள்ளது என்றால், இதில் இருந்து பேருந்தின் தரத்தை அறிய முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிராமங்களில், சிறு நகரங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் இவ்வாறான தரத்தில் இருப்பது கவலையளிக்கிறது. சிறிய விபத்துக்கே பேருந்தின் சக்கரங்கள் தனியாக கழன்றுள்ளன என்றால், அந்த அளவிற்கு இந்த அரசு பேருந்து நீண்ட வருடங்களாக பயன்பாட்டில் உள்ளது என்று அர்த்தம். இத்தகைய விபத்துகளை பார்த்த பின்னராவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கையை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









