இனி தெருவுக்கு தெருவெல்லாம் நின்னு பிடிக்க போறுது இல்ல.. யுட்யூபை பாத்தே பிடிக்க போறாங்க..
வேலைக்கு போய் சம்பாதித்து பெரிய ஆளா ஆனவர்களைக் காட்டிலும், யுட்யூபில் பணம் பார்த்து பெரிய ஆளானவர்களே இப்போது அதிகம். ஒருவர் மாசம் முழுக்க கடினமாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தை ஒரு சில யுட்யூபர்கள் ஒரே வாரத்தில் சம்பாதித்துவிடுகின்றனர். இது பலருக்கும் பொறாமை அளிக்கக் கூடியதாகவே இன்றளவும் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பயணங்கள் பற்றி பயணத்தின் போதே ளாக் (Vlog) செய்யும் யுட்யூபர்களுக்கு ஆப்பு வைக்கின்ற விதமான ஓர் நடவடிக்கைக்கு கேரள உயர் நீதிமன்றம் பச்சைக் கொடிக் காட்டி இருக்கின்றது.
எனவே, இனி மோட்டார் வாகன பிரிவை (Motor Vehicle Department)ச் சேர்ந்த காவலர்கள் யுட்யூபர்களைத் தேடி பிடித்து அபராதம் மற்றும் வாகனம் பறிமுதல் போன்ற கடுமையான நடவடிக்கையை எடுக்கப் போகின்றார்கள் என தெரிய வந்துள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நகர்ந்துக் கொண்டிருக்கும் வாகனத்தில் அமர்ந்தபடி வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிடும் யுட்யூபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேரள மோட்டார் வாகன துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால், இனி வரும் நாட்களில் கேரள மோட்டார் வாகன துறையைச் சேர்ந்த போலீஸார் கூடுதல் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவர் என்பது தெரிய வந்திருக்கின்றது.
சமீப காலமாக இந்திய இளைஞர்கள் மத்தியில் விளாக் செய்யும் கலாச்சாரம் மிகப் பெரிய அளவில் வளர்ந்துக் காணப்படுகின்றது. பலரும் வாகனத்தில் பயணித்தபடியே வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு சில முன்னணி ஊடகங்களே இதுமாதிரியான செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
காருக்குள் சென்றபடியே பேட்டி எடுப்பது, பிரபலங்களுடன் உரையாடுவது என பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னணி ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே நகரும் வாகனத்திற்குள் அமர்ந்தபடி வீடியோ எடுத்து அதை பதிவிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஏற்கனவே கேரளா மோட்டார் வாகன துறையைச் சேர்ந்த போலீஸார், சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும் போக்குவரத்து விதிமீறல் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு அபராதம் மற்றும் வாகன பறிமுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே போக்குவரத்து விதிமீறல்களில் பயணங்களின் விளாக் வீடியோக்களையும் இணைக்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர வாகன மாடிஃபிகேஷன் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத எல்இடி (LED) லைட்டுகளை பயன்படுத்துதல் மற்றும் அடையாளம் காண முடியாத அளவிற்கு வாகனங்களை மாற்றுதல் போன்றவற்றின் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கின்றது. சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி அனில் கே. நரேந்திரன் மற்றும் நீதிபதி ஹரிசங்கர் வி. மேனன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "அங்கீகரிக்கப்படாத மாற்றங்களைக் கொண்ட வாகனங்கள், அதாவது சந்தைக்குப்பிறகான எக்சாஸ்ட் பைப் (வெளியேற்ற அமைப்புகள்) மற்றும் விளக்குகளை பயன்படுத்துவது ஏஐஎஸ்-008 (AIS-008) பாதுகாப்புத் தரங்களை மீறுவதாகவும், மாசுபாட்டிற்கு பங்களிப்பதாகவும் இருப்பதாகக் கருத்து தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்த விதிகளை கட்டாயம் அனைவரும் கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறு போக்குவரத்து ஆணையர் மற்றும் மாநில காவல்துறை தலைவர் ஆகியோருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. விதிமீறல் வாதிகள் மீது மோட்டார் வாகனச் சட்டம், பிரிவு 190(2) இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
எனவே ஓட்டுநர் உரிமம் தகுதியிழப்பு செய்வதற்கான சூழல் மிகப் பெரிய அளவில் உருவாகி இருக்கின்றது. இதுதவிர, வாகனங்களில் அரசு சின்னங்கள் மற்றும் பெயர் பலகைகள் போன்றவற்றை தவறாக பயன்படுத்துவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறி இருக்கின்றது.
வாகனங்களில் மாநில மற்றும் தேசிய சின்னங்களைப் பயன்படுத்துவது இந்தியாவின் மாநிலச் சின்னம் (முறையற்ற பயன்பாட்டுத் தடை) சட்டம், 2005 மற்றும் 2007 விதிகளின் கீழ் கட்டுப்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட அதிகாரிகள் மட்டுமே இந்த சின்னங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இதை சில தனி நபர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
காவல்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனைகளைத் தவிர்ப்பதற்காக குறிப்பிட்ட சின்னங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர சுங்கச் சாவடி கட்டணங்களைத் தவிர்க்கவும் இதுமாதிரியாக தவறாக சின்னங்களை சிலர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய தனி நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேரளாவில் மோட்டார் வாகன துறை ஏற்கனவே மிக கடுமையான நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அவர்களுக்கு கூடுதல் பூஸ்ட் அளிக்கும் விதமாக உயர்நீதிமன்றம் கடுமையான நடவடிக்கையை எடுக்க உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக அதிகப்படியான மாற்றங்களைக் கொண்ட வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








