ஒரு உயிரை ஆவது காப்பாற்ற துடிக்கும் இளைஞர்!! ஊருக்கு ஒருத்தர் இவரை போல தேவை!
வாகனம் ஓட்டும்போது சாலைகளின் ஓரத்தில் பொருத்தப்பட்டுள்ள சிக்னல் போர்டுகள் நிறைய விபத்துகளை தடுத்துள்ளன. இந்த போர்டுகளில் குறிப்பிடப்பட்ட சிக்னல்கள் பலருக்கு புரிவதில்லை என்பது வேறு கதை. இருப்பினும், சிக்னல் போர்டு குறியீடுகளை பற்றி அறிந்து, அவற்றை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். கூகுள் மேப் வந்த பிறகு சிக்னல் போர்டுகளின் தேவை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதற்கேற்ப, சாலைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிக்னல் போர்டுகளில் பெரும்பாலானவை முறையாக பராமரிப்பு இன்றி இருப்பதை காண முடிகிறது. இதனையடுத்து, இளைஞர் ஒருவர் தானாக முன்வந்து சாலையின் ஓரத்தில் இருக்கும் சிக்னல் போர்டுகளை துடைத்து, சுத்தம் செய்து பயன்படுத்தும் நிலைக்கு மாற்றி வருகிறார்.
உண்மையில் இது அசாத்தியமான செயல் ஆகும். யார் இந்த அதிசய மனிதர் என்பதை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். கூகுள் மேப் உள்ளிட்ட நவீன தொழிற்நுட்பங்கள் வந்துவிட்டாலும், வாகனம் ஓட்டும்போது நமக்கு எல்லா நேரங்களிலும் கை கொடுப்பது சிக்னல் போர்டுகள் ஆகும். ஏனெனில், சில நேரங்களில், சில இடங்களில் நெட்வொர்க் பிரச்சனையினால் வரைப்படத்தை பயன்படுத்த முடியாமல் போகலாம்.

சில நேரங்களில், டெக்னிக்கல் பிரச்சனை காரணமாக வரைப்படம் தவறான தகவல்களை காட்டக்கூடும். மேப் பார்த்து சென்று விபத்தில் சிக்கியவர்கள் ஏராளம். குறிப்பாக, மலைப்பிரதேச சாலைகளில் சிக்னல் போர்டுகளின் தேவை மிக முக்கியமானதாக உள்ளது. ஏனெனில், மலைப்பிரதேச பகுதிகளில் தான் நெட்வொர்க் சிக்னலும் முறையாக கிடைக்காது.
மலைப்பிரதேச பகுதியில் வசிப்பதால் தான் சிக்னல் போர்டுகளின் அவசியத்தை உணர்ந்து அவற்றை சுத்தம் செய்ய முன்வந்ததாக இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகும் இளைஞரும் தெரிவிக்கிறார். கேரளாவின் கண்ணூரில் மலைகளுக்கும், அடர்ந்த காடுகளுக்கும் நடுவே ஒரு கிராமத்தில் வசிப்பவர் விவேகானந்தன். சிக்னல் போர்டுகளை சுத்தம் செய்வதை ஒரு சேவையாக செய்வதாக கூறும் விவேகானந்தன் இன்ஸ்டாகிராமிலும், யுடியூப்பிலும் அவரது இந்த செயலினால் பிரபலமானவராக விளங்குகிறார்.

இதன் மூலமாக கணிசமான வருவாயும் கிடைக்கிறது. ஆனால் உண்மையில், இந்த வருவாயை எதிர்பார்த்து விவேகானந்தன் இந்த சேவையில் இறங்கவில்லை. தான் வசிப்பது மலைப்பிரதேச பகுதி என்பதால், சாலைகள் வளைந்து, வளைந்து நிறைய யு-டர்ன்கள் உடன் இருக்கும் என்பதால் சிக்னல் போர்டுகளின் அவசியத்தை ஒரு கட்டத்தில் விவேகானந்தன் உணர ஆரம்பித்துள்ளார்.
ஆனால், அவரது கிராமத்தில் மற்றும் அதற்கு அருகே இருக்கும் நிறைய சிக்னல் போர்டுகள் வாகன ஓட்டிகளால் பார்க்க முடியாத அளவுக்கு மண் படிந்தும், இலை, செடி, கொடிகளால் மூடப்பட்ட நிலையிலும் இருந்துள்ளன. இதனை கவனித்தவர் ஒருநாள் அவற்றை சுத்தம் செய்யும் பணிகளில் இறங்கியுள்ளார். பின்னர் நண்பர் ஒருவர் கொடுத்த ஐடியாவில் சிக்னல் போர்டுகளை சுத்தம் செய்வதை வீடியோ காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட விவேகானந்தன் முடிவு செய்தார்.

இவரது வீடியோக்கள் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்று வருகின்றன. விவேகானந்தனை இவ்வாறான சேவையில் தள்ளியது அவரது வேலை ஆகும். விவேகானந்தன், ஆட்டோமொபைல் வாகனங்களை ஓட்ட கற்றுக் கொடுக்கும் ஒரு பயிற்றுவிப்பாளர் ஆவார். பயிற்சி பெறுபவர்களுக்கு சாலையை பார்த்து வாகனம் ஓட்ட கற்றுக் கொடுக்கும் போது சாலையின் ஓரத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த சிக்னல் போர்டுகள் விவேகானந்தனின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதனையடுத்து, பயிற்சிவிப்பாளாராக வேலை பார்த்த நேரம் போக ஓய்வு நேரங்களில் சிக்னல் போர்டுகளை சுத்தம் சேவையில் விவேகானந்தன் ஈடுப்பட்டு வருகிறார். சிக்னல் போர்டுகளை சுத்தம் செய்வதுடன், சிக்னல் விளக்குகள் முறையாக செயல்படுகின்றன என்பதையும் ஆராய்ந்து செயல்படாதவற்றை சரி செய்யும் பணியிலும் விவேகானந்தன் ஈடுப்பட்டு வருகிறார். தன்னுடைய இந்த செயலால் ஒருவரது உயிராவது காப்பாற்றப்பட்டால் அது தனக்கு மகிழ்ச்சி என்றப்படி குழந்தைபோல் சிரிக்கிறார் விவேகானந்தன்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலைகளின் ஓரத்தில் சிக்னல் போர்டுகள் பார்க்க முடியாத அளவிற்கு இருப்பதை நம்மில் நிறைய பேர் பார்த்திருக்கிறோம். ஆனால், எவரொருவருக்கும் வாகனத்தில் இருந்து இறங்கி அவற்றை சுத்தம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுவதில்லை. ஆகையால், விவேகானந்தன் மிகவும் உன்னதமான ஒரு சேவையை செய்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற தன்னார்வலர்களை ஊக்கப்படுத்துவதோடு, பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் சிக்னல் போர்டுகள், டிராஃபிக் சிக்னல் விளக்குகளை அரசாங்கம் பராமரிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









