ஹெல்மெட் அணியாமல் டூ-வீலரில் போனதால் பிரிந்த குடும்பம்.. தரமான வேலையை பார்த்த போக்குவரத்து காவல்துறை!
இந்தியாவில் போக்குவரத்து விதிமீறல்கள் பெரும் தலை வலியாக மாறி இருக்கின்றது. நாளுக்கு நாள் அது அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களால் சக வாகன ஓட்டிகள் பெரும் சிரமமங்களைச் சந்தித்து வருகின்றனர். இதுமட்டுமில்லைங்க, போக்குவரத்து விதிமீறல்களே நாட்டில் விபத்துகள் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுவதற்கும் மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது.
டிராஃபிக் ரூல்ஸை வாகன ஓட்டிகள் முறையான வகையில் கடைபிடித்தால் பெருமளவில் விபத்துகளை குறைக்க முடியும். ஆனால், வாகன ஓட்டிகள் அதை கண்டுக் கொள்வதே இல்லை. இதன் விளைவு ஒவ்வொரு ஆண்டும் விபத்துகளும், விபத்தால் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. சென்ற 2022ஆம் ஆண்டில்கூட 1,55,622 பேர் சாலை விபத்தால் இறந்திருக்கின்றனர்.

இது அந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளால் இறந்தோரின் எண்ணிக்கை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் அதைக் குறைக்கும் பொருட்டு போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் முயற்சியில் ஒவ்வொரு மாநில அரசும் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது.
அந்தவகையில், நமது அண்டை மாநிலமான கேரளாவில், முக்கிய சாலைகளில் நவீன சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளைக் கண்டுபிடித்து களையெடுக்க இந்த கேமிராக்கள் பெரும் உதவியாக இருக்கின்றன. இத்தகைய ஓர் கேமிராவே ஒரு குடும்பம் பிரிவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர் இடுக்கியைச் சேர்ந்தவர் ஆவார். அவர் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று மாநிலத்தின் தலைநகரில் இளம் பெண் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சுற்றி வந்திருக்கின்றார். அப்போது அந்த நபர் தலையில் கவசம் (ஹெல்மெட்) அணியவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த காட்சிகள் உயர் தொழில்நுட்ப வசதிக் கொண்ட டிராஃபிக் சிசிடிவி கேமிராக்களில் பதிவாகவே, காவல்துறை அந்த புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு விதிமீறலில் ஈடுபட்ட நபருக்கு அபராத செல்லாணை போட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தது. இதில், ஓர் ட்விஸ்ட் என்னவென்றால், பதிவு சான்றின்படி இருசக்கர வாகனம் அந்த நபரின் மனைவியின் பெயரில் இருந்திருக்கின்றது.

ஆகையால், அவருக்கே அபராத செல்லாணை கேரளா போலீஸ் அனுப்பி வைத்தது. அந்த செல்லாணை பிரித்து பார்த்த அந்த பெண்ணுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதிர்ச்சி அபராதத்தால் அல்ல, தன்னுடைய கணவரும், வேறு ஒரு பெண்ணும் ஸ்கூட்டரில் பயணித்ததே அவரின் அதிர்ச்சிக்கு காரணம்.
அபராத செல்லாணில் போக்குவரத்து விதிமீறல் குறித்த புகைப்படம் இடம் பெறும். அந்தவகையில், அனுப்பி வைக்கப்பட்ட படத்திலேயே ஓர் இளம் பெண்ணுடன் கணவர் சென்றது மனைவிக்கு தெரிய வந்தது. இதை அடுத்து அந்த பெண் யார் என கணவரிடம் விசாரிக்க, அவரோ முன்னுக்கு பின் முரணாக பதிலை கூறி இருக்கின்றார்.

தன்னுடன் வந்த பெண்ணுக்கு தான் லிஃப்ட் கொடுத்ததாகவும், அவர் யார் என்றே தனக்கு தெரியாது என்றும் அவர் கூறி இருக்கின்றார். மேலும், அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி இருக்கின்றார். இருப்பினும், அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் முற்றி இருக்கின்றது.
இந்த நிலையில் தன்னை தாக்கியதாகக் கூறி அந்த பெண் கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். தன்னை மட்டுமின்றி தன்னுடைய மூன்று வயது குழந்தையையும் அவர் கொடுமைப்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதுகுறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் தற்போது கணவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.
ஐபிசி 321 பிறரை காயப்படுத்துதல், ஐபிசி 341 தவறான கட்டுப்பாடு மற்றும் ஐபிசி 294 குழந்தையை தாக்குதல் ஆகிய குற்றப் பிரிவுகளின்கீழே வழக்கு பதியப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். ஒரே ஒரு விதிமீறல் செல்லாணால் ஒரு குடும்பமே கேரளாவில் பிரிந்திருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாதுகாப்பான கேரளா எனும் திட்டத்தின்கீழே அரசு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாகவே சாலை போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் பொருட்டு அதிநவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர, காவலர்களையும் தீவிர கண்கானிப்பில் அரசு ஈடுபடுத்தி வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே நவீன கேமிராக்களால் சர்ச்சையான சம்பவம் அம்மாநிலத்தில் அரங்கேறி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications
