வளர்த்திட்டா என்ன வேணா பண்ணுவீங்களா? நாயை படாதபாடுபடுத்திய உரிமையாளர்... வைரல் வீடியோ!!
வளர்ப்பு நாயை படாதபாடுபடுத்திய உரிமையாளரின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் வாகன ஓட்டிகள் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள்தான் சாலை விபத்துக்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாததே முக்கியமான காரணமாக உள்ளது. இதுதவிர ஒரு சில விபரீதமான சம்பவங்களையும் இரு சக்கர வாகன ஓட்டிகள் செய்து வருகின்றனர். சமீபத்தில் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் தனது டூவீலரில் நாயை அழைத்து செல்லும் வீடியோ வெளியாகி வைரலாக பரவியது.

ஆனால் அவர் தனது நாய்க்கு ஹெல்மெட் அணிவித்திருந்தார். இந்த சம்பவம் சென்னையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதற்குள்ளாக மற்றொரு வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவ தொடங்கியுள்ளது. இம்முறையும் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் தனது நாயை டூவீலரில் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் அவரும் ஹெல்மெட் அணியவில்லை. நாய்க்கும் ஹெல்மெட் அணிவிக்கப்படவில்லை. சமூக வலை தளங்களில் தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆனால் வீடியோ வைரல் ஆனதால், அந்த டூவீலரின் உரிமையாளருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆம், மோட்டார் வாகன துறை அதிகாரிகள் அதிரடியாக அபராதம் விதித்துள்ளனர்.

இந்த வினோத சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது. இணையத்தில் வீடியோ வைரல் ஆன பிறகு, டூவீலர் உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அந்த டூவீலரின் உரிமையாளரை அதிகாரிகள் ட்ரேஸ் செய்து அதன்பின் அபராத ரசீதை அனுப்பியுள்ளனர். இரு காரணங்களுக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனத்தை ஓட்டும்போது ஹெல்மெட் அணியவில்லை என்பது முதல் காரணம். பில்லியன் சீட்டில் நாயை அழைத்து சென்று, நாய்க்கும், மற்றவர்களுக்கு அபாயத்தை உண்டாக்கியது இரண்டாவது காரணம். மோட்டார் வாகன துறை அதிகாரிகள் அனுப்பிய நோட்டீஸில் இந்த இரண்டு காரணங்களும்தான் குறிப்பிடப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட இரு சக்கர வாகன உரிமையாளருக்கு 2,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறுவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாக நாய்கள் பில்லியன் சீட்டில் பயணிக்கும் பல வீடியோக்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இது அபாயகரமானது. இதன் காரணமாக சாலை விபத்துக்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

விலங்குகள் எப்போது என்ன செய்யும்? என்பதை கணிக்கவே முடியாது. விலங்குகளின் சிறு அசைவு கூட சில சமயங்களில் விபத்திற்கு காரணமாகி விடும். அதுவும் டூவீலர் என்றால் நிலைமை இன்னும் மோசமாகி விடும். அத்துடன் இதுபோன்ற நிகழ்வுகள், சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடித்து விபத்துக்களுக்கு வழி வகுத்து விடும்.

ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை மிக எளிதாக ஈர்த்து விடுகிறது. எனவே வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலாகி விடுகிறது. வைரல் வீடியோவிற்காகவும் கூட ஒரு சிலர் இவ்வாறு செய்கின்றனர். அவர்கள் இதன் அபாயத்தை உணர வேண்டிய நேரமிது. ஏற்கனவே இந்தியாவில் சாலை விபத்துக்களால் பலர் உயிரிழக்கின்றனர்.
போதாக்குறைக்கு இதுபோன்ற சேட்டைகளும் சேர்ந்து கொண்டால், நிலைமை இன்னும் சிக்கலாகி விடும் என்பதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும். டூவீலர்களில் நாய் போன்ற செல்ல பிராணிகளை அழைத்து செல்வதில் இருக்கும் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது.


Click it and Unblock the Notifications








