3 இளம் உயிர்களை காவு வாங்கிய கேரள மினி கூப்பர் விபத்து: பெற்றோர்களுக்கு சொல்லும் பாடம்

பிள்ளைகளுக்கு விலை உயர்ந்த கார் வாங்கிக் கொடுப்பது பல பெற்றோர்களின் ஆசையாக மாறி இருக்கிறது. இது அந்தஸ்தையும், லைஃப்ஸ்டைலையும் அனைவருக்கும் தெரியப்படுத்தும் ஒரு ஆயுதமாகவும் பெற்றோர்களால் பார்க்கப்படுகிறது. பொருளாதாரம் இருந்தால் பிள்ளைகளுக்கு பரிசாக கார், பைக்குகளை வாங்கிக்கொடுப்பது தவறில்லை. ஆனால், அந்தக் காரை எப்படிப் பயன்படுத்த வேண்டும், சாலை விதிகளை ஏன் மதிக்க வேண்டும், மற்றவர்களின் உயிருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பது அவசியம் என்பதை கேரளாவில் நடந்த கோர விபத்து பெற்றோர்களுக்கு உணர்த்துகிறது.

கேரளாவில் 19 வயது இளைஞர் ஓட்டிச் சென்ற மினி கூப்பர் கார் விபத்தில் மூன்று இளம் வயதினர் உயிரிழந்த சம்பவம், பெற்றோர்கள் சிந்திக்க வேண்டிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கொச்சி விமான நிலையம் அருகே நெடும்பச்சேரியில் அவர் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் மோதி, ஸ்கூட்டரில் சென்ற இயாஸ் (21), தேவிகா (21), கோபிகா (22) ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.

Mini Cooter Accident In Kerala

இந்த கோர விபத்துக்குப் பிறகு, "என் அப்பா எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்" என்று கார் ஓட்டிச் சென்ற அந்த இளைஞர் கூறியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கூற்று மற்றும் விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பணத்தால் எல்லாப் பிரச்சினைகளையும் சரிசெய்துவிடலாம் என்ற எண்ணம் எவ்வளவு ஆபத்தானது என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

கிஃப்ட் பண்றது தவறா?

பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக பெற்றோர்கள் கார் வாங்கிக் கொடுப்பதில் தவறில்லை. ஆனால், காரின் விலை, பிராண்ட், எஞ்சின் திறன் ஆகியவற்றைவிட அதை ஓட்டுபவரின் பொறுப்புணர்வும் அனுபவமும் முக்கியம் என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, அதிக செயல்திறன் கொண்ட கார்களை ஓட்டும்போது வேகத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.

புதிய ஓட்டுனர்களுக்கு முறையான பயிற்சி, சாலை விதிகள் குறித்த தெளிவு, பாதுகாப்பான ஓட்டும் முறை உள்ளிட்டவற்றில் அவர்கள் கைதேர்ந்த பிறகே அவர்களிடம் வாகனத்தை ஒப்படைக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது பொருளாதார வசதியைப் பயன்படுத்தி பிள்ளைகளுக்கு வாகனம் வாங்கிக் கொடுக்கலாம். ஆனால், அந்த வாகனத்தைப் பயன்படுத்துவதற்கான மனப்பக்குவம் அவர்களிடம் இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

Also Read

ஆபத்தான மனநிலை

பிள்ளைகள் செய்யும் தவறுகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது பெரும்பாலான பெற்றோர்களின் இயல்பான எண்ணமாக இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு தவறையும் பணத்தால் சரிசெய்துவிடலாம் அல்லது பெற்றோர்கள் தலையிட்டு எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம் என்ற எண்ணம் உருவாக அனுமதிக்கக் கூடாது.

சாலை விதிகளை மீறுவது அபராதத்துடன் முடிந்துவிடும் விஷயமாக இருக்கலாம் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், பொறுப்பற்ற ஓட்டுனரின் நடத்தை ஒருவரின் உயிரையே பறிக்கக்கூடும். விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் துயரத்தை எந்தப் பணத்தாலும் ஈடுசெய்ய முடியாது.

பிள்ளைகள் தவறு செய்யும்போது அவர்களைக் கண்டிப்பதுடன், அந்தத் தவறின் விளைவுகளைப் புரிந்துகொள்ளவும் பெற்றோர்கள் உதவ வேண்டும். சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதையும், தவறு செய்தால் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதையும் சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும்.

Also Read

முழுமையான அனுபவம்

சட்டப்படி தேவையான வயதை அடைந்து ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது முக்கியம். இருப்பினும், உரிமம் கிடைத்துவிட்டதால் எல்லாச் சூழல்களிலும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் அனுபவம் கிடைத்துவிடாது. நெரிசலான சாலைகள், திடீர் பிரேக்கிங், மழைக்காலப் பயணம், இரவு நேர ஓட்டுதல் முறை போன்ற சூழல்களைச் சமாளிக்கப் பயிற்சியும் பொறுமையும் அவர்களுக்கு தேவை என்பதை பெற்றோரும், இளைஞர்களும் புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

நண்பர்களிடம் பெருமை காட்டுவதற்காக வேகமாக ஓட்டுவது, சாலையில் சாகசங்களில் ஈடுபடுவது, மற்ற வாகனங்களை முந்துவதற்காக ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்வது போன்றவற்றை இளம் ஓட்டுனர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். காரை ஓட்டும்போது செல்போனைப் பயன்படுத்துவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, வேக வரம்பை மீறுவது போன்ற செயல்கள் ஓட்டுனருக்கு மட்டுமல்லாமல் சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், பிள்ளைகள் தவறுசெய்யும்போது அதனை நியாப்படுத்துவதையும் தவிர்ப்பதும் அவசியமாகிறது.

Also Read

குற்றம் நிரூபிக்கப்பட்டால்?

கேரள விபத்தில் கார் ஓட்டிச் சென்ற அந்த இளைஞர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பிரிவு 105-ன் கீழ், கொலைக்குச் சமமாகாத குற்ற நோக்கத்துடன் உயிரிழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

1. BNS பிரிவு 105 சட்டப் பிரிவு

இந்தப் பிரிவில் இரண்டு விதமான சூழல்கள் குறிப்பிடப்படுகின்றன. மரணத்தை ஏற்படுத்தும் நோக்கம் அல்லது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய காயத்தை ஏற்படுத்தும் நோக்கம் இருந்தால், ஆயுள் சிறைத் தண்டனை அல்லது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். மரணம் ஏற்படக்கூடும் என்பதை அறிந்திருந்தும், மரணத்தை ஏற்படுத்தும் நோக்கம் இல்லாமல் செயல்பட்டிருந்தால், அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். எந்த வகை இந்த வழக்குக்குப் பொருந்தும் என்பதை விசாரணை ஆதாரங்கள் மற்றும் நீதிமன்றத்தின் முடிவே தீர்மானிக்கும்.

2. BNS பிரிவு 106(1) சட்டப் பிரிவு

விபத்து கவனக்குறைவால் ஏற்பட்டதாகவும், பிரிவு 105-க்குத் தேவையான நோக்கம் அல்லது அறிவு நிரூபிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் முடிவு செய்தால், சூழ்நிலையைப் பொறுத்து BNS பிரிவு 106(1) பொருந்தலாம். இந்தப் பிரிவின் கீழ் அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

3. மது போதை டிரைவிங்

மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் பிரிவு 185-ன்படி, சட்டத்தில் குறிப்பிடப்பட்ட அளவைவிட அதிகமாக ரத்தத்தில் ஆல்கஹால் அளவு இருப்பது அல்லது போதைப்பொருளின் தாக்கத்தால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்தது என்று குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதல்முறை குற்றத்திற்கு அதிகபட்சம் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அல்லது ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

அதேபோன்று, இரண்டாவது முறையாக முந்தைய குற்றம் நிகழ்ந்த மூன்று ஆண்டுகளுக்குள் மீண்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.15,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். எனினும், முழுமையான விசாரணைக்கு பிறகே நீதிமன்றம் இந்த வழக்குகளில் முடிவு எடுக்கும்.

பெற்றோருக்கும் பொறுப்பு

மகனுக்கு கார் வாங்கிக் கொடுத்தார் என்பதற்காக மட்டுமே பெற்றோரை விபத்துக்குக் குற்றவாளியாக்க முடியாது. இருப்பினும், உரிய ஓட்டுனர் உரிமம் இல்லாதவரிடம் வாகனத்தை ஒப்படைத்தல், சட்டத்தை மீறி வாகனம் ஓட்ட அனுமதித்தல் அல்லது அவர்களுக்கெனத் தனிப்பட்ட சட்டப் பொறுப்பு உருவாகும் வகையில் செயல்படுதல் போன்ற சூழல்களில் வாகன உரிமையாளருக்கும் சட்ட நடவடிக்கைகள் ஏற்படலாம்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 180-ன்படி, சட்டப்படி வாகனம் ஓட்டத் தகுதியற்ற அல்லது உரிய உரிமம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தை ஓட்ட அனுமதித்தால், வாகன உரிமையாளர் அல்லது அதனை ஒப்படைத்த நபருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இந்தப் பிரிவு பொருந்துகிறதா என்பது சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளைப் பொறுத்தது.

எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாகனம் வாங்கிக் கொடுப்பதுடன் நின்றுவிடாமல், அவர்கள் சட்டப்படி தகுதியுடையவர்களா, பொறுப்புடன் ஓட்டுகிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். ஏர்பேக், ஏபிஎஸ் உள்ளிட்ட நவீன பாதுகாப்பு வசதிகள் விபத்தின்போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உதவலாம். ஆனால், எந்தக் காரும் எல்லா விபத்துகளையும் தடுக்க முடியாது. பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும் கவனக்குறைவான ஓட்டுநர் நடத்தையின் ஆபத்து மறைந்துவிடாது.

கார் வாங்கும்போது அதன் விலை, வடிவமைப்பு, மைலேஜ், இன்ஜின் திறன் ஆகியவற்றுடன் பாதுகாப்பு வசதிகளையும் கவனிக்க வேண்டும். அதே அளவுக்கு, அந்தக் காரை ஓட்டுபவரின் மனப்பக்குவத்தையும் பொறுப்புணர்வையும் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, பிள்ளைகளுக்கு முதல் கார் வாங்கிக் கொடுக்கும்போது, வாகனத்தை எப்படிப் பாதுகாப்பாக ஓட்டுவது என்பதைப் பெற்றோர்கள் எடுத்துக்கூற வேண்டும். சாலை விதிகளை மீறுவதும், வேகமாக ஓட்டுவதும் பெருமைக்குரிய விஷயங்கள் அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும்.

பெற்றோர்களுக்கு சொல்லும் பாடம்

பிள்ளைகளுக்குச் சொத்து சேர்த்துக் கொடுப்பதும், அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதும் பெற்றோரின் அன்பின் வெளிப்பாடுகளாக இருக்கலாம். ஆனால், அந்தச் சொத்தையும், வசதியையும் எப்படிப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுப்பதே நீண்ட காலத்துக்கு உதவும்.

கேரள விபத்தில் குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டியிருந்தாலும், இந்தச் சம்பவம் நமக்கு நினைவூட்டும் அடிப்படை உண்மை மாறாது. சாலையில் வாகனம் ஓட்டுவது தனிப்பட்ட சுதந்திரம் மட்டுமல்ல; பிறரின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் ஆகும். மகனுக்கு கார் வாங்கிக் கொடுப்பதற்கு முன், பாதுகாப்பாக ஓட்டும் பழக்கத்தையும் பொறுப்புணர்வையும் அவருக்குக் கற்றுக்கொடுங்கள். ஏனெனில், ஒரு காரை மீண்டும் வாங்க முடியும்; ஆனால் இழந்த உயிரை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது.

Article Published On: Monday, October 12, 2026, 16:55 [IST]
English summary
Kerala mini cooper accident parents responsibility teenage driving penalties
மேலும்... #road safety #car accident #accident
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out