அடேங்கப்பா டயருக்கே இத்தனை லட்சமா.. 2 வருடத்திற்குள் 34 டயர்களை மாற்றிய அமைச்சர்.. அசத்தலான பதில்!
மின்சாரத்துறை அமைச்சர், தனது காருக்கான டயர்களை வெறும் 2 ஆண்டுகளில் 34 முறை மாற்றியிருப்பதாக ஆர்டிஐ தகவல் மூலம் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதற்கான செலவு மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சாலையில் இயங்கக்கூடிய ஒவ்வொரு வாகனங்களிலும் இன்றியமையாத ஓர் பாகமாக டயர்கள் காட்சியளிக்கின்றன. இவை, இல்லையெனில் அது வாகனமாகவே கருதப்படாது. அந்தளவிற்கு வாகனங்களில் ஓர் முக்கிய அங்கமாக அவை செயல்படுகின்றன.
இதன்காரணமாக, சிறந்த பயணத்தை விரும்புவர்களை அவ்வப்போது டயர்களை மாற்றியும், முறையாக பராமரிக்கவும் வாகனத்துறை வல்லுநர்கள் அறிவுருத்துகின்றனர்.

டயர்கள், பயணத்தை சிறப்பாக அமையச் செய்வது மட்டுமின்றி அதிக மைலேஜ் மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கும் வழி வகைச் செய்கின்றன.
காரின் எஞ்ஜின் ஆயிலை எப்படி குறிப்பிட்ட கிமீட்டருக்கு ஒரு முறை மாற்ற வேண்டுமோ, அதேபோன்றுதான் டயர்களையும் 35 ஆயிரம் கிமீட்டருக்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும். இது சில கார்களில் பயன்பாட்டைப் பொருத்து மாறுபடலாம். ஆகையால், குறிப்பிட்ட கிமீ தூரம் பயணித்த கார்களின் டயர்களை மாற்றுவது காட்டாயமாக கருதப்படுகின்றது.

இந்நிலையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சர், அவரது காருக்கு இதுவரை 34 டயர்களை மாற்றியிருப்பதாக ஆர்டிஐ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதுவும், வெறும் இரண்டு ஆண்டுகளில் மட்டுமே இத்தனை டயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
கேரள மாநிலத்தின் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் எம்.எம். மணி. இவர்தான் கடந்த 2 வருடங்களில் 34 முறை டயர்களை மாற்றியுள்ளார்.

எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், ஆர்டிஐ மூலம், கேரளாவில் உள்ள அமைச்சர்களின் கார் டயர்களை மாற்றுவதற்காக மாநில அரசு கருவூலத்தில் இருந்து எவ்வளவு செலவிடப்பட்டு இருந்தது கேள்வியை முன் வைத்திருந்தார்.
இந்த ஆர்டிஐ தகவலின்படி, எம்.எம். மணியனின் டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா காருக்கு அதிகபட்சமாக செலவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து, வனத்துறை அமைச்சரான கே. ராஜு 19 முறை டயர்களை மாற்றியிருப்பதாக அதில் தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம், அம்மாநில முதலமைச்சரான பினராயி விஜயன் காருக்கு இதுவரை 11 டயர்கள் மாற்றப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு, அமைச்சர்களுடைய கார்களின் டயர்களை மாற்றுவதற்காக மட்டும் ரூ. 3.4 லட்சம் வரை செலவு செய்யப்பட்டிருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு டயருக்கும் ரூ. 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டிருப்பது தெரியவருகின்றது.
அமைச்சர்களின் இந்த முற்போக்கான செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. மேலும், இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்டிஐ-யின் அதிர்ச்சியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், அமைச்சர் மணியன், அவரது பேஸ்புக் பக்கத்தில் ஓர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "தனது கார் பெரும்பாலும் கரடுமுரடான மலை பகுதியில் சென்றதன் காரணமாகவே, டயர்கள் இத்தனை மாற்றப்பட்டன. அவை, அதிகம் சேதமடைந்ததும் ஓர் காரணம். மேலும், 1.24 லட்சம் கிமீ அவை பயணித்திருந்தன. இதனாலயே அவை இத்தனை முறை மாற்றப்பட்டது" என்ற விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

மேலும், இதுகுறித்த அமைச்சர் மணி கூறியதாவது, "கார்களுக்கு டயர் மாற்றியதில் எனக்கும், எனக்கு பணியாளர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கு சுற்றுலாத்துறையே பொறுப்பு. கார்களில் டயர்களை மாற்றுவதில் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. எங்கள்மீது தவறான அவதூறு கருத்துக்கள் பரப்பட்டு வருகின்றன. அவை ஆதாரபூர்வமற்றவை" என தெரிவித்தார்.

டயர் பராமரிப்பு:
டயர் பராமரிப்பு பற்றிய விழிப்பு உணர்வு தற்போது மக்கள் மத்தியில் போதுமான அளவிலேயே இருக்கின்றது. வீல் அலைன்மென்ட், வீல் பேலன்ஸிங், டயர் ரொட்டேஷன் போன்ற அம்சங்களை பலர் முக்கியத்துவம் கொடுப்பதை நம்மால் காண முடிகின்றது.

மோசமான வீல் அலைன்மென்ட் அல்லது பேலன்ஸிங், முதலில் காரின் சஸ்பென்ஷனையும் ஸ்டீயரிங்கையும் பதம் பார்க்கும். ஸ்டீயரிங்கை நேராக வைத்தாலும் கார் தொடர்ந்து நேர்கோட்டில் செல்லாமல், இடது அல்லது வலது பக்கவாட்டு பகுதியில் இழுத்துக் கொண்டே செல்லும். இது, டயரின் அலைன்மென்ட்டில் கோளாறு ஏற்பட்டாலே இவ்வாறு நடைபெறும்.

நீங்கள், உங்களுடைய காரில் இதுபோன்ற பிரச்னையை உணர்ந்தால், உடனடியாக நல்ல மெக்கானிக்கை அணுகுங்கள். அதுவே, உங்களின் பாதுகாப்பான பயணத்திற்கு வழி வகைச் செய்யும்.
அடுத்தாக வீல் பேலன்ஸிங். எந்தவொரு காரிலும் நூறு சதவீதம் சரியான பேலன்ஸிங் இருக்காது. நாம், என்னதான் வீல்களை சரியான பேலன்ஸிங்கில் செட் செய்தாலும், அது சாலையில் ஓட ஆரம்பித்த பின்பு, அந்த பேலன்ஸ் மாற தொடங்கிவிடும்.

இதனால்தான், அடிக்கடி வீல் பேலன்ஸிங்கை கவனிக்க வேண்டும் என மெக்கானிக்குகள் வலியுறுத்துகின்றனர். இதை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், வீல் பேரிங்கை அது கடுமையாக பாதிக்கும். அதனால், அலைன்மென்ட் செய்யும்போதே, வீல் பேலன்ஸிங் செய்து மிகச்சிறந்தது.

கடைசியாக டயர் ரொட்டேஷன், காரின் அனைத்து டயர்களும் (ஸ்டெப்னியும் சேர்த்து) சமமான அளவில் தேய்மானம் அடைந்திருக்க வேண்டும். முன்பக்க வீல் டிரைவ், ரியர் வீல் டிரைவ் மற்றும் 4-வீல் டிரைவ் ஆகிய சிறப்பு வசதிகளைக் கொண்ட கார்களுக்கு ஏற்ப ரொட்டேஷன் முறை மாறுபடுகின்றது.

ஆகையால், காரில் புது டயர்களைப் பொருத்தினால், குறைந்தது 500 கிமீ வரையாவது, வாகனத்தை மிதமான வேகத்தில் செலுத்த வேண்டும். அப்போதுதான், சீரான உராய்வைப் பெற்று, நல்ல கிரிப்பினைப் பெறும்.


Click it and Unblock the Notifications








