காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் புது ரேஞ்ச் ரோவர் கார்!! விலையை மட்டும் பார்த்துடாதீங்க... சட்டசபைக்கு இனி இதில்தான்!
ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆட்டோபயோகிராபி (Range Rover Sport Autobiography) என்ற விலையுயர்ந்த காரை கேரளாவில் எம்.எல்.ஏ ஒருவர் வாங்கி உள்ளார். வீட்டிற்கே வந்து டெலிவிரி செய்யப்பட்ட இந்த ரேஞ்ச் ரோவர் கார் உடன் அந்த எம்.எல்.ஏ நிற்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி, வைரலாகி உள்ளன.
கேரள காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்வர் ஒம்மன் சாண்டிக்கு அடுத்து மக்கள் பலருக்கு நன்கு பரீட்சைமான நபர் பிகே.குன்ஹலிகுட்டி. இன்னும் சொல்லப்போனால், ஒம்மன் சாண்டி கூட தற்போது அரசியலில் இருந்து கொஞ்சம் ஒதுங்கிவிட்டார். ஆனால், பிகே.குன்ஹலிகுட்டி கேரளாவில் தற்போதைய டிரெண்டில் உள்ளார்.

குறிப்பாக, இவர் பேசும் ஸ்டைல் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனாலேயே, வாரத்திற்கு ஒருமுறையாவது இவரை பற்றிய ஏதேனும் ஒரு செய்தி வெளிவந்துவிடுகிறது. இவ்வளவு பிரபலமானவராக இருக்கும் பிகே.குன்ஹலிகுட்டி கேரளாவின் வெங்காரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அரசியலில் ஈடுப்படும் அதே சமயத்தில், ஆட்டோமொபைல் வாகனங்கள் மீது ஈடுப்பாடு கொண்டவராகவும் குன்ஹலிகுட்டி உள்ளார்.
இந்த நிலையில், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆட்டோபயோகிராபி என்கிற விலையுயர்ந்த காரை புதியதாக எம்.எல்.ஏ குன்ஹலிகுட்டி வாங்கி உள்ளார். இந்த காரை கொச்சியில் உள்ள லேண்ட் ரோவர் டீலரான முத்தூட் மோட்டார்ஸ் மூலமாக இவர் வாங்கியுள்ளார். காரை இவரது வீட்டிற்கே வந்து டீலர்ஷிப் அதிகாரிகள் டெலிவிரி கொடுத்துள்ளனர்.

காருடன் பிகே குன்ஹலிகுட்டி நிற்கும் படங்கள் கேரளாவில் இணையத்தில் வைரலாகி உள்ளன. பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான ரேஞ்ச் ரோவர் சமீப காலமாக இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யும் கார்களுள் ஒன்றாக ஸ்போர்ட் ஆட்டோபயோகிராபி விளங்குகிறது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.82 கோடியாக தற்சமயம் உள்ளது.
ஆன்-ரோடு விலை இன்னும் ரூ.50 இலட்சம் அளவில் அதிகமாக இருக்கும். விலை இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு காரணம், இந்த ரேஞ்ச் ரோவர் கார் முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. நம் நாட்டு சந்தையில் இந்த லக்சரி எஸ்யூவி கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

எம்.எல்.ஏ குன்ஹலிகுட்டி டீசல் என்ஜின் உடன் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆட்டோபயோகிராபி காரை வாங்கி உள்ளார். இந்த காரில் 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 346 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது.
இது ஓர் மைல்ட்-ஹைப்ரீட் கார் ஆகும். அதாவது, காரின் என்ஜின் உடன் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்படுகிறது. கியர்களை மாற்ற, 8-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்ஜின் உடன் இணைக்கப்படுகிறது. அத்துடன், இது 4-வீல்-டிரைவ் சிஸ்டத்தை கொண்ட கார் ஆகும். அதாவது, என்ஜினின் இயக்க ஆற்றல் ஒரே நேரத்தில் காரின் 4 சக்கரங்களுக்கும் செல்லும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் விலை ஏறக்குறைய ரூ.2.5 கோடியாக இருந்தாலும், ஒரு மாநில சட்டமன்ற உறுப்பினர் இப்படிப்பட்ட காரை வாங்குவது ஒன்றும் ஆச்சிரியமில்லை. பிகே குன்ஹலிகுட்டி ஏற்கனவே தனது அலுவலக பயன்பாட்டிற்காக டொயொட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை பயன்படுத்தி வந்தார். இனி இந்த ரேஞ்ச் ரோவர் காரில்தான் சட்டசபைக்கு செல்வார் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications









