இனி விலாசம் ஓர் தடையல்ல.. புது வண்டியை ரெஜிஸ்டர் செய்ய எந்த ஆர்டிஓ-வுக்கு வேணாலும் போகலாம்..
புதிதாக வாகனம் வாங்கினால் அதை நம்முடைய சொந்த ஊர் அல்லது வசிக்கும் இடத்திற்கு உண்டான ஆர்டிஓ (RTO)-வில் வைத்து மட்டுமே பதிவு செய்ய முடியும். உதாரணமாக, நீங்கள் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் வசிக்கின்றீர்கள் என்றால், இந்த பகுதிக்கு என தனியாக அமைக்கப்பட்டு இருக்கும் கேகே நகர் ஆர்டிஓ-வில் (டிஎன் 09) வைத்தே உங்களுடைய வாகனத்தை பதிவு செய்துக் கொள்ள முடியும். இந்த நிலையையே தற்போது முற்றிலுமாக மாற்றியிருக்கின்றனர். உங்கள் புதிய வாகனத்தை நீங்கள் விரும்பும் எந்த ஆர்டிஓ-வில் வேண்டுமானாலும் வைத்து பதிவு செய்துக் கொள்ளலாம் எனும் திட்டத்தையே தொடங்கி வைத்திருக்கின்றனர்.
கேரளாவிலேயே முன்னோடி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. கேரள மோட்டார் வாகனத்துறை சார்பாக எடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான ஓர் நடவடிக்கையாக இது கருதப்படுகின்றது. மேலும், இந்த நடவடிக்கையால் தற்போது கேரள மக்கள் தங்கள் வாகனங்களை மாநிலத்தில் உள்ள எந்த போக்குவரத்து வட்டார அலுவலகத்தில் வைத்து வேண்டுமானாலும் பதிவு செய்துக் கொள்ள முடியும்.

பதிவு செய்யும் ஆர்டிஓ-க்கு உட்பட்ட இடத்தில்தான் வசிக்க வேண்டும் என்கின்ற அவசியம் தேவை இல்லை. பணி மற்றும் தொழில் ரீதியாக தொடர்ச்சியாக இடம் பெயர்வோர்கள், எளிதாக தங்களுடைய வாகனங்களை பதிவு செய்துக் கொள்ளும் பொருட்டே இந்த திட்டத்தை கேரளா அரசாங்கம் அறிமுகம் செய்திருக்கின்றது.
அரசின் இந்த நடவடிக்கை கேரள வாசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கின்றது. இப்போதும், தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்களில் புதிதாக வாகனங்களை வாங்குவோர், அதனை பதிவு செய்ய தங்களின் நிரந்தர முகவரிக்கு என ஒதுக்கப்பட்ட ஆர்டிஓ-வில் வைத்து மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்கிற சூழல் உள்ளது.
ஆகையால், தொழில் காரணமாக சென்னை போன்ற மாநிலத்தின் பிற பகுதியில் வசிக்கும் தொழிலதிபர்கள் தாங்கள் ஒவ்வொரு முறையும் புதிதாக வாகனத்தை வாங்கும்போது சொந்த மாவட்டத்திற்கு எடுத்துச் சென்று பதிவு செய்ய வேண்டும் என்கிற சூழலே இருந்து வருகின்றது. இந்த இன்னலை குறைக்கும் ஓர் முயற்சியாகவே கேரளா தன்னுடைய புதிய விதியை மாநிலம் முழுவதற்கும் அறிமுகம் செய்திருக்கின்றது.
இதனால், வாகனம் பதிவு முறை இன்னும் பலமடங்கு எளிதாக மாறியிருக்கின்றது. மேலும், தங்களுக்கு பிடித்த ஆர்டிஓ-வை தேடி சென்று கேரள மக்கள் தங்களின் புதிய வாகனங்களை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, பலருக்கு பிடித்த எண்ணாக இருக்கும் 01 மற்றும் 09 போன்றவை இருக்கின்றன.
ஆகையால், இந்த எண்களைக் கொண்ட ஆர்டிஓ-க்களில் வழக்கத்தைவிட அதிகமாக புதிய வாகன பதிவுகள் அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், தங்களின் ராசிக்கு ஏற்ற எண்ணைக் கொண்டிருக்கும் ஆர்டிஓ-வை தேடிச் சென்றும் கேரள மக்கள் தங்களின் வாகனங்களை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேரள அரசாங்கம் நடைமுறைப்படுத்தி இருக்கும் இந்த திட்டத்தை தமிழகம் போன்ற பிற மாநிலங்களும் நடைமுறைக்குக் கொண்டு வரும் எனில், அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்களும் மிகுந்த மகிழ்ச்சியை அடைவார்கள். குறிப்பாக, தங்களின் தேவைக்கு ஏற்ப மற்றும் பிடித்தமான பதிவெண்ணைக் கொண்டிருக்கும் ஆர்டிஓ-வில் சுதந்திரமாக தங்களுடைய புதிய வாகனங்களை அவர்கள் பதிவு செய்துக் கொள்வார்கள்.
முக்கியமாக ராசிபலன் எண், பிறந்த தேதியை குறிக்கும் எண் மற்றும் பிடித்த எண் என விதவிதமாக தேடிச் சென்று தங்களுடைய வாகனங்களை பதிவு செய்துக் கொள்ள இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கும். மேலும், சிலர் பிடித்த ஆர்டிஓ எண்ணை பெற்றுக் கொள்ள முடியும் என்பதற்காக புதிய வாகனங்களை வாங்குவதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஆகையால், வருவாயும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








