வெறும் 25,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட கார்... மீட்டு கொண்டுவந்தது யார் தெரியுமா? மொத்த குடும்பமும் ஹாப்பி!!
நாம் நமது வாழ்வில் எத்தனை புதிய கார்களை வாங்கினாலும், பெற்றோர்களின் வாகனங்களை பயன்படுத்துவது எப்போதுமே கொஞ்சம் ஸ்பெஷலானது. வழக்கமாக இது சாதாரண மக்களுக்கு ஏற்படும் உணர்வு என்று பார்த்தால், ஒரு அரசியல் கட்சியின் தலைவர் கூட தனது தந்தை பயன்படுத்திய பழமையான காரை வேறொருவரிடம் இருந்து மீட்டு கொண்டுவந்து இப்போதும் பயன்படுத்தி வருகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இந்த அரசியல்வாதியின் பெயர், முனாவர் அலி ஷிஹாப் தாங்கல் ஆகும். இவரை பற்றியும், இவரது தந்தை பயன்படுத்திய பழமையான காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய அரசியலில் முஸ்லீம் கட்சிகள் மிக முக்கியமான ஓட்டு வங்கியை கொண்டுள்ளன என்பதில் சந்தேகமே இல்லை. நம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் இல்லையென்றாலும், நமது அண்டை மாநிலமான கேரளாவில் சில முஸ்லீம் கட்சிகள் நன்கு வலுவாக காலூன்றி உள்ளன. அவ்வாறு, இந்தியாவின் முக்கியமான அரசியல் கட்சிகளுள் ஒன்றாகவும், கேரள மாநிலத்தில் கணிசமான ஓட்டு சதவீதத்தையும் கொண்டுள்ள கட்சியாகவும் இருப்பது, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகும்.

நம் தமிழ்நாட்டிலும் செயல்படும் இந்த முஸ்லீம் சமூக கட்சியை கேரளாவில் சுமார் 35 ஆண்டுகளாக மெல்ல, மெல்ல வளர்தெடுத்து இன்று அந்த மாநிலத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு பெரிய கட்சியாக வளர்த்தெடுத்தவர், முகமது அலி ஷிஹாப் தங்கல் ஆவார். கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தின் பனக்காடு பகுதியை சேர்ந்தவர் முகமது அலி ஷிஹாப் தங்கல் ஆவார்.
இன்னும் சொல்லப்போனால், கடந்த 40 வருடங்களாக பனக்காட்டை முகமது அலியின் குடும்பத்தினர் தான் ஆட்சி செய்து வருகின்றனர். இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் என்கிற தேசிய அளவிலான கட்சியின் கேரள மாநில தலைவராக சுமார் 35 வருடங்கள் இருந்த முகமது அலி ஷிஹாப் தங்கல் கடந்த 2022ஆம் ஆண்டில் மரணமடைந்தார். அதன்பின், அவரது இடத்தை அவரது மகன் முனாவர் அலி ஷிஹாப் தங்கல் கவனித்து வருகிறார்.

கட்சி மற்றும் குடும்பத்தை மட்டுமின்றி, முகமது அலி ஷிஹாப் தங்கல் பயன்படுத்திய பச்சை நிறத்திலான அம்பாசிடர் (Ambassador) காரையும் இவரது மகன் முனாவர் அலி ஷிஹாப் தங்கல் கவனித்து வருகிறார். 1977ஆம் ஆண்டில் தனது அன்றாட கட்சி வேலைகளுக்காக முகமது அலி இந்த அம்பாசிடர் காரை வாங்கினார். இது, அம்பாசிடர் நிறுவனம் உருவாக்கிய மார்க் 3 கார் ஆகும்.
இந்த காரை 1977இல் வாங்கிய பிறகு 5 வருடங்களுக்கும் மேல் பயன்படுத்திய முகமது அலி பின்னர் அதனை விற்றுவிட்டார். தனது நண்பர் ஒருவருக்கே 25 ஆயிரம் ரூபாய்க்கு முகமது அலி இந்த காரை விற்றார். தற்போது அதனை முனாவர் அலி ஷிஹாப் தங்கல் தனது மகனுக்காக மீட்டு கொண்டுவந்துள்ளார். இதனை படங்களுடன் முனாவர் அலி ஷிஹாப் தங்கல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த படங்களில், முனாவர் அலி காரை ஓட்ட அவரது மகன் பின் இருக்கையில் அமர்ந்தப்படி போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை காணலாம். முகமது அலியிடம் இருந்து இந்த அம்பாசிடர் காரை பெற்ற அவரது நண்பரும் தற்போது உயிருடன் இல்லை. இருப்பினும், அவரது உறவினர்கள் இந்த காரை மிகவும் சிறப்பாகவே பராமரித்து வந்துள்ளனர். பனக்காடு பகுதியின் ஷிஹாப் தங்கல் குடும்பத்தின் முதல் கார், இந்த அம்பாசிடர் மார்க் 3 ஆகும்.
இதனால், இந்த காரை மீண்டும் முனாவர் அலி வீட்டிற்கு கொண்டுவந்ததை பார்த்ததும் குடும்பத்தினர் அனைவரும் பெரிதும் சந்தோஷமடைந்துள்ளனர். இந்த அம்பாசிடர் காரில் '2233' என்கிற ஃபேன்சி நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு உள்ளதை பார்க்கலாம். அம்பாசிடர் மார்க் 3 ஆனது மிகவும் பிரபலமான அம்பாசிடர் கார் என்று சொல்ல முடியாது. ஏனெனில், வெறும் 4 வருடங்கள் மட்டுமே மார்க் 3 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 4 வருடங்கள் என்பது மற்ற அம்பாசிடர் கார்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். இதனால், மார்க் 3 காரை தோல்வியுற்ற காராகவே நாம் கருத வேண்டும். ஒருவேளை இதனால்தான் என்னவோ 5 வருடங்களில் இந்த காரை விற்க முகமது அலி ஷிஹாப் தங்கல் முடிவு செய்துள்ளார். ஆனால், தற்போது இந்த காரை முனாவர் அலி மீட்டு கொண்டுவந்திருப்பது காரின் தரத்திற்காக அல்ல... அவரது தந்தையின் நினைவாக ஆகும்.


Click it and Unblock the Notifications









