பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு செக் வைக்கும் கேரள அரசு... அதிர்ச்சியில் வாகன உரிமையாளர்கள்!!!
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு செக் வைக்கும் விதமாக கேரள அரசு, வாகன பதிவு காலத்தை குறைக்க திட்டமிட்டுள்ளது. கேரள அரசின் இந்த அறிவிப்பால் வாகன உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சுற்றுப்புறச்சூழல் மாசடைவது இந்தியாவில் தலையாய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதனைத் தவிர்க்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, நாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் வாகனங்களின் உபயோகத்தைக் குறைக்கவும் முயற்சி செய்து வருகிறது.

அதன்படி, பெட்ரோலால் இயங்கும் இரு சக்கர வாகனங்களுக்கு பசுமை வரி என்னும் புதிய வரி திட்டத்தை அமல்படுத்த அது முடிவுசெய்துள்ளது. இதன்மூலம் பெட்ரோல் பைக்குகளின் கணிசமாக குறையும் என எதிர்பார்க்ப்படுகிறது.

மேலும், ஜீரோ எமிஸ்ஸன் வாகனங்களான மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சில சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதைத்தொடர்ந்து மின்வாகன உற்பத்திக்கும் ஆதரவு அளித்து வருகிறது.

இந்தியாவில் மிக மோசமான, அதிகம் மாசடைந்த மாநிலமாக டெல்லி உருவாகி வருகிறது. இதற்கு, அங்கு பெருகி வரும் மக்கள் தொகையே முழுமையான காரணம். மேலும், அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் அதிகளவில் சுற்றுப்புற சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால், அங்கு காற்று மிகமோசமாக மாசுற்று, பனி படர்ந்திருப்பதைப்போல் காட்சியளிக்கின்றது.

இதுபோன்று, நிகழ்வுகளில் இருந்து தங்களது மாநிலத்தை தற்காத்துக்கொள்ளும் விதமாக, கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள அரசு, மோட்டார் வாகனங்கள் பதிவு காலத்தை பத்து ஆண்டுகளாக குறைக்க திட்டமிட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் பத்து வருடத்துக்கு ஒரு முறை பதிவு செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளன.

அதேசமயம், சுற்றுச்சூழலின் நண்பனான மின் வாகனங்களுக்கு பச்சை கம்பளம் விரிக்கும் விதமாக, வாழ்நாள் முழுவதும் ஒரு முறை பதிவு என்ற சலுகையை அறிமுகம் செய்ய கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், மக்கள் மின்வாகன பயன்பாட்டுக்கு செல்வார்கள் என நம்பப்படுகிறது.

மேலும், மாநிலத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாடு குறைக்கப்பட்டு, மாசுடைவது தவிர்க்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அம்மாநில போக்குவரத்துத்துறையின் முதன்மைச் செயலாளர் கே.ஆர். ஜோதிலால் கூறியதாவது,

"மின்வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மின்வாகனங்களை சார்ஜ் செய்ய அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் ஈ-மொபிலிட்டி என்னும் சார்ஜர் பாயிண்டுகளை நிறுவ அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டில் மின்வாகனங்களின் பயன்பாடு பன்மடங்கு உயர்த்தப்படும்" என்றார்.


Click it and Unblock the Notifications








