காவல்துறைக்காக நிறுத்தப்பட்டுள்ள இந்த காரோட மதிப்பு தெரியுமா? மக்கள் கண்டுக்கொள்ளாத மாருதி வாகனம்!!
மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) இந்தியாவில் மஹிந்திரா தாருக்கு போட்டியாக கொண்டுவரப்பட்ட ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம். ஆனால், தாருக்கு இணையான எண்ணிக்கையில் ஜிம்னி விற்பனையாகுகிறதா? என கேட்டால், இல்லை என்பதுதான் பதில். இந்த நிலையில், இந்தியாவில் முதல்முறையாக ஒரு மாநில போலீசாரின் பயன்பாட்டிற்காக மாருதி சுஸுகி ஜிம்னி வாகனம் வாங்கப்பட்டுள்ளது. எந்த மாநிலம் அது? என்பதையும், போலீசாரின் பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் அளவிற்கு ஜிம்னியில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஜப்பானில் விற்பனையில் இருந்த ஜிம்னி வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் வாகனத்திற்கான புக்கிங்குகள் துவங்கப்பட்டு, டெலிவிரிகள் ஏப்ரலில் இருந்து துவங்கின.

பிரபலமான மாருதி சுஸுகி ஜிப்ஸி வாகனத்தின் அடுத்த தலைமுறை வாகனமாக களமிறக்கப்பட்டதன் காரணமாகவே, ஜிம்னி மீது பலரது கவனம் விழுந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் ஜிம்னி பூர்த்தி செய்யவில்லை. குறிப்பாக, வாகனத்தினுள் இடவசதி போதிய அளவிற்கு வழங்கப்படுவதில்லை. 3 கதவுகள் உடன் மட்டுமே மஹிந்திரா தார் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்த சமயத்திலேயே 5 கதவுகளுடன் ஜிம்னி அறிமுகம் செய்யப்பட்டது.
இருப்பினும், 3-கதவு தார் வாகனத்தை காட்டிலும் ஜிம்னி அளவில் சிறியதாக உள்ளது. ஜிம்னியின் இந்த காம்பெக்ட்டான தோற்றம் பலருக்கு ஏமாற்றமாக இருந்தது. இதன் விளைவாக, சமீப காலத்தில் மிக பெரிய தோல்வி கண்ட மாருதி சுஸுகி வாகனங்களுள் ஒன்றாக ஜிம்னியை சொல்லலாம். இப்படிப்பட்ட வாகனம் தற்போது இந்தியாவில் ஒரு மாநிலத்தில் போலீசாரின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டுள்ளது.

அது வேறெந்த மாநிலமும் கிடையாது, நம் அண்டை மாநிலமான கேரளா ஆகும். கேரளாவின் மூணாருக்கு அருகே உள்ள ராஜக்கட் போலீஸ் நிலையத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாருதி சுஸுகி ஜிம்னி வாகனத்தின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த படங்களில், கிரானைட் கிரே நிறத்தில் ஜிம்னி காட்சியளிக்கிறது.
இது, ஜிம்னியின் விலைமிக்க ஆல்பா வேரியண்ட் ஆகும். போலீசாரின் பயன்பாட்டிற்காக வாகனத்தில் சிறு, சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, வாகனத்தின் மேற்கூரையில் சிவப்பு மற்றும் நீல நிறத்தில் ஒளிரக்கூடிய பெக்கான் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. காவல்துறை வாகனம் என்பதை குறிக்கும் வகையில், இந்த ஜிம்னி வாகனத்தின் முன் விண்ட்ஷீல்டில் 'போலீஸ்' என்கிற எழுத்துகள் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் ஸ்டிக்கர்களாக ஒட்டப்பட்டுள்ளன.

வாகனத்தின் உட்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் எதுவும் வெளியாகாததால், போலீசாருக்காக வாகனத்தினுள் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய முடியவில்லை. மாருதி சுஸுகி ஜிம்னி வாகனத்தின் தோல்விக்கு அதன் அதிகப்படியான விலையும் ஒரு காரணம் என சொல்லலாம். ஜிம்னி வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.12.74 லட்சத்தில் இருந்து ரூ.14.95 லட்சம் வரையில் உள்ளன.
1.5 லிட்டர், 4-சிலிண்டர் கே15பி பெட்ரோல் என்ஜின் உடன் ஜிம்னி கிடைக்கிறது. டீசல் என்ஜின் ஆப்ஷன் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. அதிகப்பட்சமாக 103 பிஎச்பி மற்றும் 134 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் அல்லது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேரளாவில் நிறைய பாதைகள் ஏற்றம், இறக்கமுமாய் உள்ளன. அத்தகைய சாலைகளில் செல்வதற்கு மாருதி சுஸுகி ஜிம்னி ஏற்ற வாகனமாகும். இதற்கேற்ப வாகனமும் மிகவும் சிறியதாக கணக்கச்சிதமாக வடிவமைக்கப்படுகிறது. இவ்வாறு, போலீசாருக்கு வழங்கப்படுவதன் மூலமாக ஜிம்னி வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









