Kerala போலீஸின் ஷார்ப்பான மூளை... திருட்டு காரை சில மணிநேரத்தில் கைபற்றி அசத்தல்!!
கேரளாவில் திருடப்பட்ட டாடா ஹெரியர் காரை போலி வாகன பதிவு எண்ணுடன் மோட்டார் வாகன போக்குவரத்து போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதன்பின் அவர்கள் செய்த காரியம் என்ன? இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியா உலகின் மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தை. நம் நாட்டில் எந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் கார்கள் விற்பனை செய்யப்படுகிறதோ அதே அளவிற்கு கார் திருட்டு வழக்குகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகி வருகின்றன. இதில் நம்மை பயமுறுத்தும் விஷயம் என்னவென்றால், திருடப்படும் கார்களில் பெரும்பாலானவற்றை போலீஸார் கண்டு பிடிக்க முடிவதில்லை என்பது ஆகும். ஏனெனில் திருடப்பட்ட கார் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு கொண்டிருந்தால் கண்டுப்பிடித்துவிடலாம்.

இதற்காகவே நகரத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸார் சிசிடிவி கேமிராக்களை பொருத்தி வைத்துள்ளனர். வாகன பதிவு வைத்தே அந்த கார் எங்கெங்கு பயணித்துள்ளது என்பதை கண்டறியும் தொழிற்நுட்பமும் உள்ளது. ஆனால் திருடர்கள் திருடிய காரை அடுத்த சில மணிநேரத்தில் பார்ட் பார்டாக கழற்றி கள்ள சந்தையிலோ அல்லது உதிரி பாக சந்தையிலோ விற்றுவிட்டால் அந்த காரை கண்டுப்பிடிப்பது மிகவும் சவாலான காரியம் ஆகும்.
இருப்பினும் திருடப்பட்ட கார்கள் பலவற்றை போலீஸார் திருடர்களிடம் இருந்து கைப்பற்றிய சம்பவங்களை இதற்குமுன் நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அதில் மற்றொரு சம்பவமாக கேரள மோட்டார் வாகன துறையினர் (MVD) திருடப்பட்ட டாடா ஹெரியர் கார் ஒன்றை போலி வாகன பதிவு எண்ணுடன் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவை கீழே காணலாம்.
சம்பந்தப்பட்ட மோட்டார் வாகன துறை போலீஸார் வழக்கம்போல் தங்களது ரோந்து பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது கர்நாடகா மாநில வாகன பதிவு எண்ணுடன் டாடா ஹெரியர் எஸ்யூவி கார் ஒன்றை கண்டுள்ளனர். இந்த காரின் வாகன பதிவெண் அதி-பாதுகாப்புமிக்கது கிடையாது என அறிந்த போலீஸார், உடனே அந்த காரை நிறுத்தி உள்ளே இருந்தவர்களிடம் ஆவணங்களை சரிப்பார்த்தனர். அதன்பின் அவர்களிடம் வாகன பதிவெண் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதில் அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் கூற, மேலும் சந்தேகம் அடைந்த போலீஸார் காரின் நம்பர் பிளேட்டில் இருந்த வாகன பதிவெண்ணை வைத்து அதன் உரிமையாளரை கண்டறிந்து, அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டனர். போனை எடுத்த நபர் இந்த வாகன பதிவெண் கொண்ட தனது கார் திருவனந்தபுரத்தில் இருப்பதாக கூற, இதில் ஏதோ தில்லுமுல்லு இருக்கிறது என்பதை போலீஸார் உறுதி செய்து கொண்டனர்,

அதன்பின் வாகனத்தின் விண்ட்ஷீல்டு கண்ணாடியில் பதிவெண் டேப்பால் மறைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்த போலீஸார், அதனை நீக்கிய போது காரின் உண்மையான வாகன பதிவெண் வெளிச்சத்திற்கு வந்தது. இதில் சம்பந்தப்பட்ட டாடா ஹெரியர் கார் உண்மையில் கேரளாவில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, காரில் பொருத்தப்பட்டுள்ள போலி நம்பர் பிளேட்டில் இருப்பது KA 03 NF 9977, ஆனால் காரின் உண்மையான பதிவெண் KL 01 CT 5758 ஆகும். உண்மையான நம்பர் பிளேட்டை கார் டிக்கியில் இருந்து போலீஸார் வெளியே எடுத்தனர்.
காரின் சேசிஸ் எண்ணையும் ஆராய்ந்த போலீஸார், அதனுடன் காரின் டிக்கியில் இருந்து எடுக்கப்பட்ட வாகன பதிவெண் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தி கொண்டனர். இதன்பின், இது திருட்டு கார் என்ற முடிவுக்கு வந்த போலீஸார் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இதுகுறித்து தெரிவித்துவிட்டு, அவர்களிடம் காரை ஒப்படைந்தனர். மற்றப்படி, இந்த குற்ற செயலில் ஈடுப்பட்டவர்கள் யார் யார்? அவர்களுக்கு போலீஸார் விதித்த தண்டனைகள் என்னென்ன என்பது பற்றிய விபரங்கள் கிடைக்க பெறவில்லை.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: திருடியவர்கள் காரை அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்திற்கு கொண்டு செல்ல நினைத்திருக்கலாம். அவ்வாறு கொண்டு செல்லும் வழியில்தான் கேரளாவிலேயே அவர்கள் போலீஸாரிடம் சிக்கி கொண்டு இருந்திருக்க வேண்டும். கர்நாடகாவை அடைந்த பின் உண்மையான கேரள நம்பர் பிளேட் உடன் காரை பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டு இருக்கலாம். ஆனால் நல்லவேளையாக, அதற்குள்ளாகவே போலீஸாரின் புத்தி கூர்மையில் சிக்கி கொண்டனர்.


Click it and Unblock the Notifications








