இவர்கிட்ட அப்படி எவ்வளவு பணம் கொட்டி கிடக்குது? கேரளாக்காரராக இருந்தாலும் கோவையில் புது கார் டெலிவிரி!!
லிட்மஸ்7 (Litmus7) தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான வேணு கோபாலகிருஷ்ணன், சமீப காலமாக கோடிக்கணக்கான மதிப்புள்ள சொகுசு கார்களை வாங்குவதன் மூலம் அவ்வப்போது செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி, இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II பிளாக் பேட்ஜ் மற்றும் தீபாவளி சமயத்தில் வாங்கிய கேரளாவின் முதல் லம்போர்கினி ரெவல்டோ (Lamborghini Revuelto) ஆகியவற்றைத் தொடர்ந்து, தற்போது தனது கார் சேகரிப்பில் புதிய பி.எம்.டபிள்யூ எம்4 சிஎஸ் (BMW M4 CS) என்கிற செயல்திறன் மிக்க செடான் காரை சேர்த்துள்ளார்.
இந்த எம்4 சிஎஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.89 கோடி ஆகும். வேணு தனது காரை டெலிவிரிப் பெறும் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. காரைப் பெற்ற உடனேயே, கோயம்புத்தூரின் செட்டிப்பாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் தனது புதிய எம்4 சிஎஸ் காரின் திறனை ஓட்டிப் பார்த்து சோதனை செய்துள்ளார்.

இன்னும் சொல்லப்போனால், கரி மோட்டார் ஸ்பீட்வேயில் வைத்துதான் வேணு கோபாலகிருஷ்ணன் தனது இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை டெலிவிரிப் பெற்றார். ட்ராக் வளாகத்திற்குள்ளேயே அவர் காரை டெலிவரி எடுக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. 'ரிவேரா ப்ளூ' (Riviera Blue) நிறத்தில் காரை இவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
எம்4 சிஎஸ் காரில் எம் புரூக்ளின் கிரே மெட்டாலிக், ஃப்ரோசன் ஐல் ஆஃப் மேன் கிரீன், பிளாக் சஃபையர் மெட்டாலிக் என மூன்று கலர் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. கொச்சியில் உள்ள பிஎம்டபிள்யூ இவிஎம் ஆட்டோகிராஃப்ட் லிமிடெட் டீலர் இந்த டெலிவரியை மேற்கொண்டுள்ளது. இந்த டீலர் குழு, இதுவரை விற்பனை செய்த ஏழாவது எம்4 சிஎஸ் கார் இது என்று தெரிவித்துள்ளது.

இதில் ஆச்சரியப்படும் விதமாக, 7 என்ற எண்ணுக்கு தனி விருப்பம் கொண்ட தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணனின் கார் கேரேஜை இந்த கார் சென்றடைந்துள்ளது. 7ஐ தனது கேரேஜின் அடையாளமாகக் கருதும் இவர், தனது லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) காருக்கான 'KL 07 DG 0007' என்ற ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்காக சுமார் ரூ.46 லட்சத்தை சில மாதங்களுக்கு முன் செலவு செய்ததை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
புதிய பிஎம்டபிள்யூ எம்4 சிஎஸ் காரின் சாவியைப் பெற்ற பிறகு, அதனுடன் வேணு தனது குடும்பத்துடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். உடனடியாக, கரி மோட்டார் ஸ்பீட்வேயில் காரின் உண்மையான திறனை அனுபவிக்க புறப்பட்டார். அங்கே, வேறு சில பிஎம்டபிள்யூ கார்களும் அவருடன் இணைந்து களமிறங்கின.

இந்த ட்ராக் நிகழ்வை பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்துக் கொடுத்ததா அல்லது சம்பந்தப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம் ஏற்பாடு செய்துக் கொடுத்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில், பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம், தனது செயல்திறன் மிக்க கார்கள் மற்றும் எஸ்யூவி-களின் திறனை வாங்குபவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் உணர்த்தும் வகையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய நிகழ்வுகளை அடிக்கடி நடத்துகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபரில் எம்4 சிஎஸ் காரை அறிமுகப்படுத்தியது. வழக்கமான எம்4 காரை விட எம்4 சிஎஸ் ஒருபடி மேலே நிற்கிறது. 'CS' என்பது 'காம்படீஷன் ஸ்போர்ட்' என்பதன் சுருக்கமாகும். இது சாதாரண எம்4 காரை விட சுமார் 36 லட்சம் ரூபாய் கூடுதல் விலையில் கிடைக்கிறது.

இந்த விலை வேறுபாட்டை காரின் மெக்கானிக்கல் மாற்றங்களும், மேம்படுத்தப்பட்ட செயல்திறனும் நியாயப்படுத்துகின்றன. இது இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் பிஎம்டபிள்யூ 'CS' கார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்4 சிஎஸ் காரின் பவர்டிரெய்ன், எம்4 காரில் உள்ள அதே 3.0 லிட்டர் ட்வின்-டர்போ ஸ்ட்ரெய்ட்-சிக்ஸ் என்ஜின் ஆகும். இருப்பினும், இந்த என்ஜின் அதிக ட்யூனிங் செய்யப்பட்டு, 550 hp (20 hp கூடுதல்) சக்தியையும், 650 Nm டார்க் திறனையும் (ஸ்டாண்டர்ட் எம்4 உடன் சமமான டார்க் திறன்) உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ எம்4 சிஎஸ் கார் ஆனது பந்தய களத்தில் ஓட்டுவதற்கு ஏற்ற காராகும். இதனாலேயே கேரள தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணன் இந்த காரை டெலிவிரி எடுத்ததே கோயம்புத்தூரில் உள்ள ரேஸ் டிராக்கில் வைத்து ஆகும். ஆதலால், இந்த ரேஸ் டிராக் பயணத்தை இவருக்கு சம்பந்தப்பட்ட பிஎம்டபிள்யூ டீலர்ஷிப் ஷோரூம் தான் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









