டொயோட்டா இன்னோவா காரை ஆளில்லாமல் ஓடும் காராக மாற்றிய கேரள இளைஞர்.. டெஸ்லாவே இதுக்கு முன்னாடி ஒன்னுமில்ல!
கேரளா இளைஞர் ஒருவர் வழக்கமான டொயோட்டா இன்னோவா காரை டிரைவரே இல்லாமல் இயங்கும் காராக மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காரின் சிறப்புகள் என்ன? ஆளில்லாமல் ஓடுவதற்காக அந்த காரில் அவர் செய்த மாற்றங்கள் என்ன? இதுபோன்ற முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியர்களின் ஃபேவரிட் டொயோட்டா கார் என்று இன்னோவா க்ரிஸ்டாவை கூறலாம். இது ஓர் எம்பிவி ரக கார் மாடல் ஆகும். குடும்பத்துடன் சேர்ந்து லாங் டிராவல் செய்ய உகந்த கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த காரையே கேராளவைச் சேர்ந்த ஓர் நபர் டிரைவரே இல்லாமல் இயங்கும் வாகனமாக மாற்றி இருக்கின்றார்.

இன்னும் இந்த வசதிக் கொண்ட கார்கள் இந்தியாவில் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், அமெரிக்கா போன்ற உலக நாடுகள் சிலவற்றில் இதுபோன்ற வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. வேமோ எனும் நிறுவனம் முழுக்க முழுக்க ஆளே இல்லாமல் இயங்கும் டாக்சிகளை இயக்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த மாதிரியான ஓர் காராகவே கேராளவைச் சேர்ந்த நபர் டொயோட்டா இன்னோவாவை மாற்றி இருக்கின்றார். பல ஆண்டுகளாக அவர் இந்த வேலையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போதே ஆளில்லாமல் இயங்கும் இன்னோவா கார் தயாராகி இருக்கின்றது. கேரளாவைச் சேர்ந்த தொழில்முனைவோரும், ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப நிபுணருமான ரோஷி ஜான் என்பவரே இந்த டிரைவர் தேவைப்படாத காரை உருவாக்கியவர் ஆவார்.

இவர் கேரளாவில் ரோஷாய் எனும் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். தனக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட ஓர் சம்பவமே அவரை இந்த ஆளில்லாமல் இயங்கும் காரை உருவாக்கத் தூண்டியிருக்கின்றது. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தென் கொரியாவிலிருந்து இந்தியா திரும்பி இருக்கின்றார். தென்கொரியா - பெங்களூரு வழித் தடத்தையே அவர் பயன்படுத்தி இருக்கின்றார்.
இந்த நிலையிலேயே அவர் பெங்களூருவில் இருந்து டாக்சியைப் பிடித்துக் கொண்டு வேறொரு இடத்திற்கு அவர் புறப்பட்டு இருக்கின்றார். அப்போது நேரம் அதிகாலை 2 மணி இருக்கும் என கூறப்படுகின்றது. அப்போது, ஓட்டுநர் சோர்வாகவும், தூக்கக் கலக்கத்திலும் இருந்திருக்கின்றார். இந்த நிலையிலேயே அவர் திடீரென மயங்கி விழுந்திருக்கின்றார்.

இதனால், கார் டிவைடரில் மோத நேரிட்டிருக்கின்றது. இந்த சம்பவமே ரோஷி ஜானை தானாக ஓடும் காரை உருவாக்கும் பணியில் இறங்கச் செய்திருக்கின்றது. நல்ல வேளையாக வாகனம் சற்று குறைவான வேகத்தில் சென்ற காரணத்தினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆகையால், டிரைவரை பயணி இருக்கையில் அமர செய்துவிட்டு, ரோஷி ஜான் காரை ஓட்டி சென்றிருக்கின்றார்.
இந்த சம்பவத்தை அடுத்தே ரோஷியும் அவரது குழுவினரும் இணைந்து செயற்கை நுண்ணறிவுக் கொண்ட தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் களமிறங்கினர். இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாகவே டொயோட்டா இன்னோவா டிரைவர் இல்லாமல் இயங்கும் திறனைப் பெற்றிருக்கின்றது. முதலில் இந்த தொழில்நுட்பத்தை டாடா நானோ காரிலேயே குழுவினர் செயல்படுத்தினர்.

அப்போது கிடைத்த வெற்றியைத் தொடர்ந்தே டொயோட்டா இன்னோவாவில் அவரகள் செயல்படுத்தத் தொடங்கினர். இதுவும் தற்போது மிக சிறப்பாக வேலைச் செய்ய தொடங்கி இருக்கின்றது. கொச்சியில் உளஅள இன்ஃபோபார்க் சாலைகளில் வைத்தே இந்த கார் சோதனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த காரில் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ரேடார்கள் மற்றும் காரைச் சுற்றிலும் சென்சார்கள் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன.
இவை மோதலைத் தடுக்க, சாலையைக் கண்கானிக்க மற்றும் பயணிகள் சென்று சேர வேண்டிய இடத்திற்கு பயணிக்க உதவுகின்றன. மேலும், சூழலுக்கு ஏற்ப மாறி இயங்குவதற்காக இந்த காரில் ஏஐ கோட்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இப்போது புரோட்டோடைப் மாடலாகவே இந்த இன்னோவா க்ரிஸ்டா தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
இந்தியாவில் இன்னும் இந்த மாதிரியான ஆளில்லாமல் இயங்கும் கார்களின் இயக்கத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கான ஒப்புதல் கிடைக்கும் எனில் விரைவில் இந்தியாவிலும் ஆளில்லாமல் இயங்கும் கார்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும். இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் டொயோட்டா இன்னோவாவும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆளில்லாமல் இயங்கும் கார்கள் இன்னும் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. அதேவேளையில், அடாஸ் அம்சம் இந்த குறையைத் தீர்த்து இருக்கின்றது என்று கூறலாம். இந்த அம்சம் மோதலைத் தவிர்த்தல், லேனுக்குள்ளே காரை இயக்குதல் மற்றும் அவசர காலத்தில் தானாகவே பிரேக்கை பிடித்தல் போன்றவற்றைச் செய்யும். ஆனால், ஏஐ கார்களைப் போல் அது செயல்படாது.


Click it and Unblock the Notifications









