டிடிஎஃப் வாசனை விட பயங்கரமான ஆளா இருக்காரே!! ஒரேயொரு வீடியோ தான்... கார் பறிமுதல், டிரைவிங் லைசன்ஸ் ரத்து!
திரைப்படங்கள் எந்த காலத்திலும் இளைஞர்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதை பலமுறை பல சம்பவங்களில் பார்த்துள்ளோம். பிடித்தமான நடிகரின் ஹேர் ஸ்டைலில் முடியை வெட்டிக் கொள்வதில் ஆரம்பித்த இந்த பழக்கம், பிடித்தமான திரைப்பட காட்சியை ரீ-க்ரியேட் செய்வது வரையில் தற்போது நீண்டுள்ளது. அந்த வகையில், திரைப்படம் ஒன்றை பார்த்து அதில் வருவதுபோல் காருக்குள் நீச்சல் குளத்தை உருவாக்கியவர்கள் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளனர். யார் இவர்கள்? என்ன நடந்தது? என்பதை பற்றி வாருங்கள் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மலையாளத்தில் வெளியான ஆவேஷம் திரைப்படத்தை உங்களில் நிறைய பேர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த படத்தில், ஒரு காட்சியில் அம்பன் என பெயர் கொண்ட கதாபாத்திரம் காருக்குள் நீச்சல் குளத்தை உருவாக்கி அதனை பயன்படுத்துவது போன்று காட்டப்பட்டிருக்கும். இந்த காட்சியினால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் சிலர் அதேபோன்று தங்களது காரிலும் நீச்சல் குளத்தை உருவாக்கி ஜாலியாக குளித்துக் கொண்டே பயணம் செய்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ சில தினங்களுக்கு முன் இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் வைரலாகியது. ஓடும் காரில் இவ்வாறு செய்வது மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பானது என அப்போதே நமது செய்தித்தளத்தில் தெரிவித்து இருந்தோம். அதன்படி, போலீசார் தற்போது சம்பந்தப்பட்ட இளைஞர்களின் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது, கேரளாவில் ஆகும். கேரளாவில் பிரபலமான யூடியூப்பரான சஞ்சு டெச்சி, டாடா சஃபாரி கார் ஒன்றில் தார்பாய்கள் மூலமாக தற்காலிக நீச்சல் குளம் ஒன்றை உருவாக்கி, அதில் சிறுவர்களுடன் ஜாலியாக அமர்ந்துக் கொண்டே பயணம் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

காரினுள் தார்பாயை விரித்து நீரை நிரப்புவதை யூடியூப்பில் நேரலையாக சஞ்சு டெச்சி காண்பித்து இருந்தார். பின்னர், கேரளாவின் அம்பாலாபுழா தேசிய நெடுஞ்சாலையில், நீச்சல் குளத்துடன் காரை ஓட்டி சென்றனர். ஆனால், ஒரு கட்டத்தில் காரில் இருந்து நீர் சாலையில் கசிய ஆரம்பித்தது. காரின் என்ஜினுக்குள் நீர் புகுந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், நீர் குலுங்கியதால் காரின் சைடு ஏர்பேக் வெளியே வந்துள்ளது.
இதனால், கொஞ்சம் அதிர்ச்சியடைந்த சஞ்சு மற்றும் அவரது குழுவினர் நீரை பாதி வழியிலேயே சாலையில் கொட்டிவிட்டனர். சஞ்சு டெச்சி கேரளாவில் கொஞ்சம் பிரபலமானவர் என்பதாலும், அடிக்கிற வெயிலுக்கு இவ்வாறான வீடியோக்கள் மக்கள் மத்தியில் கவனத்தை பெறும் என்பதாலும் இந்த வீடியோ எதிர்பார்த்ததை காட்டிலும் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகியது.

யூடியூப்பில் 16 இலட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள சஞ்சு டெச்சியின் இந்த சமீபத்திய வீடியோவை இதுவரையில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர் மற்றும் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை கண்ட கேரள மோட்டார் வாகன துறையினர் சஞ்சு டெச்சிக்கு எதிராக தங்களது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி முதற்கட்டமாக, இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட டாடா சஃபாரி காரின் ஆர்டிஓ பதிவை ரத்து செய்ததோடு, காரை கேரள மோட்டார் வாகன துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன், இந்த செயலில் ஈடுப்பட்ட யூடியூப்பர் சஞ்சு மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது காரை ஓட்டியவர் மற்றும் காரின் உரிமையாளரின் வாகன ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேரள யூடியூப்பர் சஞ்சு டெச்சியை போன்றே வேறு சில இளைஞர்களும் தங்களது 3 சக்கர வாகனத்தில் நீச்சல் குளத்தை உருவாக்கி ஜாலியாக குளித்தனர். அந்த வீடியோவையும் உங்களில் சிலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆனால், அவர்கள் அந்த 3-சக்கர வாகனத்தை சாலையில் ஓட்டவில்லை. ஆதலால், சஞ்சு டெச்சி தற்போது சிக்கியிருப்பதற்கு முக்கிய காரணம், நீச்சல் குளத்துடன் காரை சாலையில், அதுவும் ஹைவேயில் ஓட்டியதுதான்.


Click it and Unblock the Notifications









