Kia Carens தலைகீழா கவிழ்ந்தும் யாருக்கும் ஒன்னும் ஆகலயா! எல்லாரும் காயமே இல்லாம எப்படி தப்பிச்சாங்க தெரியுமா?
சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை டாடா கார்கள் (Tata Cars) காப்பாற்றியது தொடர்பான செய்திகளை நீங்கள் பலமுறை படித்திருக்க கூடும். டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் டாடா டியாகோ (Tata Tiago) போன்ற கார்கள் உண்மையிலேயே சாலை விபத்துக்களில் பலமுறை பயணிகளின் உயிர்களை காப்பாற்றியுள்ளன.
இதில், டாடா நெக்ஸான் கார் குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (Safety Rating) வாங்கிய கார் ஆகும். மறுபக்கம் டாடா டியாகோ கார், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

இவை தவிர டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) ஆகிய கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியுள்ளன. எனவேதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன.
இந்த சூழலில் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் பெரிதாக சோபிக்காத கியா கேரன்ஸ் (Kia Carens) கார், கொடூரமான ஒரு சாலை விபத்தில் இருந்து பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளது. பலமுறை உருண்டு, தலைகீழாக கவிழ்ந்த போதிலும், உள்ளே இருந்த யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து தொடர்பான வீடியோ யூ-டியூப்பில் (YouTube) பதிவேற்றப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய கியா கேரன்ஸ் கார் எந்த அளவிற்கு சேதமடைந்துள்ளது? என்பதை இதன் மூலம் நம்மால் தெளிவாக காண முடிகிறது. அப்படி இருந்தும் கூட, யாருக்கும் பெரிதாக காயங்கள் ஏற்படவில்லை என்பது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான விஷயம்தான்.
இந்த விபத்து எங்கே நடந்தது? எப்படி நடந்தது? என்ற தகவல் கிடைக்கவில்லை. இருப்பினும் விபத்தின்போது 6 ஏர்பேக்குகளும் சரியான நேரத்தில் விரிவடைந்துள்ளன. பயணிகள் அனைவரும் பெரிய அளவிலான காயங்கள் இன்றி உயிர் தப்பியதற்கு இதுவே முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய கியா கேரன்ஸ் கார், எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.
பாதுகாப்பை பொறுத்தவரையில் கியா கேரன்ஸ் காரில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வசதிகள் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுவது கூடுதல் சிறப்பம்சம்.
குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என 2 பிரிவுகளிலும், கியா கேரன்ஸ் கார், தலா 3 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில், 17க்கு 9.30 புள்ளிகளை மட்டுமே கியா கேரன்ஸ் கார் ஸ்கோர் செய்துள்ளது.
மறுபக்கம் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 30.99 புள்ளிகளை மட்டுமே கியா கேரன்ஸ் கார் பெற்றுள்ளது. நிறைய பாதுகாப்பு வசதிகளை கொண்ட ஒரு காருக்கு இது குறைவான புள்ளிகள்தான். எனினும் நிஜ உலகில் நடந்த ஒரு விபத்தில் கியா கேரன்ஸ் கார் பயணிகள் அனைவரையும் காப்பாற்றியிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்தான்.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
கார்களில் பாதுகாப்பு வசதிகள் ஏன் மிகவும் முக்கியம்? என்பதற்கு இந்த சாலை விபத்து ஒரு சான்று. சாலை விபத்துக்கள் கணிக்க முடியாதவை. எப்போது வேண்டுமானாலும் அவை நிகழலாம். எனவே முடிந்தவரை அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார்களை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








