ஒரு சடர்ன் பிரேக் போதும்... பட்ட பகலில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம் - வைரலாகும் வீடியோ!!
கார்களில் சன்ரூஃப் எதற்காக வழங்கப்படுகிறது என்பதே நம்மில் நிறைய பேருக்கு தெரிவதில்லை என்பது கடந்த சில மாதங்களாக மீண்டும், மீண்டும் உறுதியாகி வருகிறது. சில வாரங்களுக்கு முன், பெங்களூரில் கியா கேரன்ஸ் கார் டிரைவர் ஒருவர் காரின் சன்ரூஃப் வழியே சிறுவர்களை வெளியே எட்டி பார்க்க அனுமதித்தது இணையத்தில் வைரலாகியது. இந்த நிலையில் பெங்களூரில் மீண்டும் ஒரு சம்பவமாக, டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார் உரிமையாளர் ஒருவர் ஒருபடி மேலே சென்று, சன்ரூஃப் வழியாக சிறுவர்களை காரின் மேற்கூரையில் அமர வைத்தப்படி காரை ஓட்டி சென்றுள்ளார்.
சன்ரூஃப் ஒரு காலத்தில் விலையுயர்ந்த சொகுசு கார்களில் மட்டுமே வழங்கப்படும் ஒன்றாக இருந்தது. ஆனால் உண்மையில், அந்த சமயங்களில் சன்ரூஃப்-ஐ அதிகமாக யாரும் தவறாக பயன்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், எப்போது சன்ரூஃப் மலிவானதாக, எல்லா கார்களிலும் கிடைக்க ஆரம்பித்ததோ, அப்போதில் இருந்து பிரச்சனைகளும் துவங்கிவிட்டன.

ஏனெனில், நம்மில் நிறைய பேருக்கு கார்களில் சன்ரூஃப் எதற்காக வழங்கப்படுகிறது என்கிற ஐடியாவே இல்லை. சாலையில் கார் இயக்கத்தில் இருக்கும்போதும் ஜாலியாக சன்ரூஃப் வழியாக வெளியே வந்து எட்டிப்பார்த்தப்படி பயணம் செய்யலாம் என பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில், கார் ஓய்வு நிலையில் இருக்கும்போது மட்டுமே சன்ரூஃப் வழியாக வெளியே எட்டி பார்க்க வேண்டும்.
கார் இயக்கத்தில் இருக்கும்போது, சன்ரூஃப்-ஐ திறந்து வைத்துக் கொள்ளலாம். ஆனால், அதன் வழியாக எட்டி பார்ப்பது கூடாது. ஏனெனில், அவ்வாறு வெளியே எட்டி பார்க்கும் சமயத்தில் ஆபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், இது எல்லாம் தெரியாத டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் டிரைவர் ஒருவர், கர்நாடகாவில் சிறுவனை சன்ரூஃப் வழியாக மேற்கூரையில் அமர வைத்தப்படி சென்றுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் பிசியான சாலையில் இந்த நெக்ஸான் இவி கார் சென்றுக் கொண்டிருந்த போது, அதன் பின்னால் சென்ற வாகனத்தில் இருந்தவர்கள் இந்த காட்சியை தங்களது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளனர். எலக்ட்ரிக் கார் என்பதை குறிக்கும் வகையில், காரில் பச்சை நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளதை வீடியோவில் காணலாம்.
இதுகுறித்த எக்ஸ் பதிவில், "இது உங்கள் மனதை நெருடும் - சன்ரூஃப் அமர்ந்திருக்கும் குழந்தை! ஒரு சடர்ன் பிரேக் அல்லது மற்றொரு வாகனத்தின் மோதல் குழந்தையை தரைக்கு கொண்டுவர போதுமானது. தயவுச்செய்து உங்கள் குழந்தைகளை இதை செய்ய விடாதீர்கள்" என வீடியோவை பதிவிட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதன்படி, ஒரு சடர்ன் பிரேக் ரூஃப் மீது அமர்ந்திருக்கும் சிறுவனுக்கு காயத்தை ஏற்படுத்துவதற்கு போதுமானது. நேரம் சரியில்லை என்றால், சிறுவன் காரில் இருந்து தூக்கி வீசப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில், சன்ரூஃப் வழியாக ரூஃப்-இல் அமர்ந்திருக்கும் சிறுவனுக்கு பிடிமானதுக்கு எந்த வசதியும் கிடையாது. அதுமட்டுமின்றி, ரூஃப்-இல் அமர்ந்திருக்கும் அவனால் சீட் பெல்ட் அணிந்திருக்க முடியாது.
இந்த வீடியோவில் காட்சி தருவது, அப்டேட் செய்வதற்கு முந்தைய ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார் ஆகும். டாடா மோட்டார்ஸின் பிரபலமான எலக்ட்ரிக் காரான இது, பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் சமீபத்தில்தான் 5க்கு 5 நட்சத்திரங்களை பெற்று அசத்தி இருந்தது. என்னதான் கார் பாதுகாப்பு மிக்கதாக அங்கீகாரம் அளிக்கப்பட்டாலும், இவ்வாறு பயணம் செய்வது ஆபத்தானது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விபத்து நடக்கும்போது, காருக்குள் முறையாக சீட் பெல்ட் அணிந்திருப்பவர்களுக்கே சில சமயங்களில் காயங்கள் ஏற்படுகின்றன. அப்படியிருக்கையில், இவ்வாறு காரின் மேற்கூரையில் அமர்ந்து பயணிக்கும்போது, யோசிக்க முடியாத அளவிற்கு கூட காயங்கள் ஏற்படலாம். ஆதலால், இவ்வாறு பயணம் செய்பவர்களுக்கு அபராதங்களை விதிப்பதோடு, இதுகுறித்து வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் போலீசார் ஈடுப்பட வேண்டும். குறிப்பாக, இவ்வாறான சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக பெங்களூரில் அதிகமாக நடக்கின்றன.


Click it and Unblock the Notifications








