குடும்பத்தோட பைக்குல போனா இனி அபராதம் போட மாட்டாங்க! அமைச்சர் சொன்ன பரபரப்பு பதில்!
கேரள அரசு பைக்குகளில் பெற்றோர் இருவருடன் ஒரு குழந்தையை மட்டும் கூட்டிச் செல்வதை சட்டப்பூர்வமாக அனுமதிக்க மத்திய அரசிடம் சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான கோரிக்கை விடுக்க ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்தியாவில் டூவீலர்களில் இருவர் மட்டுமே செல்வதற்கு அனுமதியுள்ளது. இரண்டு நபர்களுக்கு அதிகமான நபர்களை அழைத்துச் செல்ல அனுமதியில்லை. மீறிச் சென்றால் அவர்களுக்கு மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்படும். ஆனால் இந்தியாவில் ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர்.

குழந்தை வைத்திருக்கும் குடும்பத்தினர் தன் குழந்தைகளை பைக்கின் முன்பக்கம் ஏற்றிக் கூட்டிச் செல்வது மிகச் சாதாரண விஷயமாக இருக்கிறது. இது சட்டப்படி தவறு என்றாலும் இது நாள் வரை போலீசார் சிலர் குடும்பத்துடன் இப்படி பைக்கில் செல்லும் நபர்களைப் பிடித்து சாலை விதிமுறை மீறலுக்காக அபராதம் விதிப்பதில்லை.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் தற்போது சேஃப் கேரளா என்ற பெயரில் 726 செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் முக்கியமான பகுதிகளில் பொருத்தப்படவுள்ளது. இந்த கேமராக்கள் சாலையில் யாராவது போக்குவரத்து விதியை மீறி வாகனம் ஓட்டியதைப் படம் எடுத்தால் அதைக் கண்டுபிடித்துக் குறிப்பிட்ட நபரைப் புகைப்பட ஆதாரத்துடன் அபராதம் விதித்துவிடும்.

இதில் பைக்கில் குழந்தையுடன் 3 பேர் பயணம் செய்தாலும் இந்த சிஸ்டம் அபராதம் விதித்துவிடும். இந்நிலையில் இது குறித்து அம்மாநிலத்தின் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ கூறும்போது : "இந்தியாவில் டூவீலர் வாகன ஓட்டிகள் அதிகமாக இருக்கின்றனர். அவர்கள் மத்தியில் குழந்தைகளை சட்டப்பூர்வமாக வாகனத்தில் வைத்துக் கூட்டிச் செல்வது குறித்த கோரிக்கை இருக்கிறது. இதைச் சிறப்பு அனுமதியின் கீழ் அனுமதி வழங்குவது குறித்து நாம் ஆலோசிக்க வேண்டும் " எனக் கூறினார்.
கேரள அரசின் இந்த சேஃப் கேரளா திட்டம் குறித்துப் பல முன்னெடுப்புகளை அம்மாநில நிர்வாகம் செய்து வருகிறது. புதிதாகச் சட்ட தருத்ததங்களை கொண்டு வராமல் ஏற்கனவே உள்ள சட்டங்களை எப்படி முறையான நடைமுறைப்படுத்துவது என்பது குறித்துப் பல முன்னெடுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் மாநில வாரியாக மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றங்கள் அல்லது புதிய விதிகளைக் கொண்டு வர மாநில அரசுக்கு அனுமதி வேண்டும் என மத்திய அரசுக்குக் கோர விருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மே மாதம் 10ம் தேதி அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதன் பின்னர் இதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு கேமராக்களை பொருத்தும் பணியைத் தொடர்ந்து செய்து வரவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்த கேமராக்கள் கேரளாவிற்குள் சட்ட விதிமுறைகளை மீறுபவர்களை உடனடியாக கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கும் வேலையைச் செய்யும். இது போன்ற கேமராக்கள் தற்போது நாடு முழுவதும் மாநில அரசுகள் சார்பில் ஆங்காங்கே பொருத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சாலைகளில் சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 2 வீலர்களில் 2 நபர்களுக்கு மேல் பயணம் செய்வது சாதாரண விஷயமாக இருக்கிறது. இதில் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் டூவீலர்களில் முன்னே அமர வைத்துக் கூட்டிச் செல்கின்றனர்.இதை சட்டப்பூர்வமாக மாற்றக் கோரிக்கை வரும் போது அது எந்த அளவிற்கு சேஃப்டியான விஷயம் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டியது இருக்கிறது. இதை ஆய்வு செய்த பிறகே இதற்கான முடிவை அரசு எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









