காரை பார்த்து இடைவிடாமல் குரைத்து கொண்டே இருந்த நாய்! காரணம் தெரிந்ததும் ஆடிப்போன உரிமையாளர் குடும்பம்!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 (Mahindra XUV500) காரை வைத்துள்ளார். பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள காவி என்னும் சுற்றுலா தளத்திற்கு அவர் சமீபத்தில் சென்றிருந்தார். வீட்டிற்கு திரும்பும் வழியில், பாம்பு ஒன்று சாலையை கடப்பதை அவர் பார்த்தார்.
எனவே உடனடியாக பிரேக் பிடித்து அவர் காரை நிறுத்தினார். இதன் பின் காருக்கு அடியில் பாம்பு இல்லை என்பதை உறுதி செய்த பிறகு, அவர் மீண்டும் தனது பயணத்தை தொடங்கினார். இடையில் சிறிய ஓய்வு எடுத்து கொள்ளலாம் என்பதற்காக, கடை ஒன்றின் அருகே அவர் காரை நிறுத்தினார். அப்போது தெரு நாய் ஒன்று காரை பார்த்து குரைத்து கொண்டே இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் உரிமையாளர், அருகில் இருந்த வனத்துறை அலுவலகத்திற்கு காரை ஓட்டி சென்றார். அங்கு அதிகாரிகள் காரை சோதனை செய்து பார்த்தனர். அப்போது பாம்பு எதுவும் இல்லை. எனவே அங்கிருந்து நேராக அவர் காரை வீட்டிற்கு ஓட்டி சென்றார்.
ஆனால் வீட்டிற்கு சென்றதும், அவரது வளர்ப்பு நாய் வித்தியாசமான முறையில் நடந்து கொள்ள ஆரம்பித்தது. குறிப்பாக காரின் பானெட்டை பார்த்து குரைத்து கொண்டே இருந்தது. எனவே பாம்புகளை பிடிப்பதில் பிரபலமானவரான வாவா சுரேஷை (Vava Suresh), அவர் தொடர்பு கொண்டார். இதன் பேரில் வாவா சுரேஷ் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ய தொடங்கினார்.

காரின் பானெட்டை திறந்து, பாம்பு உள்ளதா? என்பதை அவர் பார்த்தார். ஆனால் வனத்துறை அதிகாரிகளை போல், அவராலும் பாம்பை கண்டறிய முடியவில்லை. எனவே பாம்பை கண்டறிய, மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் உரிமையாளரின் நாய் உதவி நாடப்பட்டது. அப்போது கட்டி வைக்கப்பட்டிருந்த நாய், அவிழ்த்து விடப்பட்டது.
இதன்பின் உடனடியாக காரை நோக்கி ஓடிய நாய், இன்ஜின் கவருக்கு அடியில் முகர்ந்து பார்க்க தொடங்கியது. எனவே பாம்பு அங்குதான் உள்ளது என்பதை வாவா சுரேஷ் அறிந்து கொண்டார். இதன்பின் அங்கிருந்து பாம்பு பத்திரமாக அகற்றப்பட்டது. அது நாக பாம்பு என்பது தெரியவந்ததும், அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஏனெனில் இது கொடிய விஷமுள்ள பாம்பு ஆகும். அது காரின் கேபினுக்கு உள்ளே சென்றிருந்தாலோ அல்லது வீட்டிற்குள் நுழைந்திருந்தாலோ பெரும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கலாம். நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. தற்போது அந்த பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாம்புகள் வெதுவெதுப்பை தேடி அடிக்கடி கார்களின் பானெட்டிற்குள் புகுந்து விடும். அப்படி உங்கள் காருக்குள் பாம்பு புகுந்து விட்டால், நீங்கள் இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் உரிமையாளரை போல்தான் நடந்து கொள்ள வேண்டும். அதாவது வனத்துறைக்கோ அல்லது பாம்புகளை பிடிப்பதில் கை தேர்ந்தவருக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதை விடுத்து விட்டு, நீங்களாகவே பாம்புகளை பிடிக்க முயற்சி செய்ய கூடாது. அது ஆபத்தை ஏற்படுத்தி விடலாம். ஏனெனில் பாம்புகளை பற்றிய அறிவு, உண்மையில் நமக்கு குறைவுதான். எனவே பாம்புகளை பிடிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்களால் மட்டுமே, யாருக்கும் பாதிப்பு இல்லாமல், சூழலை திறமையாக கையாள முடியும். எனவே அவர்களின் உதவியை நாடுங்கள்.


Click it and Unblock the Notifications








