Maruti Alto காரின் பானெட்டை திறந்த உரிமையாளருக்கு பேரதிர்ச்சி! உங்க கார்லயும் எப்ப வேணாலும் இப்படி நடக்கலாம்!
சுற்றுச்சூழல் குளிர்ச்சியாக மாறும்போது, பாம்புகள் (Snakes) வெப்பமான இடங்களை நோக்கி படையெடுக்கும். அந்த சமயங்களில் கார்களின் 'இன்ஜின் பே' பாம்புகளுக்கு மிக சிறந்த இடமாக மாறுகின்றன. பாம்புகள் தஞ்சமடையும் வகையில் 'இன்ஜின் பே' வெதுவெதுப்பாக இருப்பதுதான் இதற்கு மிகவும் முக்கியமான காரணம் ஆகும்.
கார்களின் 'இன்ஜின் பே' பகுதிக்குள் பாம்புகள் பதுங்கியிருந்த நிகழ்வுகள் கடந்த காலங்களில் பலமுறை நிகழ்ந்துள்ளன. இந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் வஹாபுதீன். இவர் மாருதி ஆல்டோ (Maruti Alto) கார் ஒன்றை வைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த காரை அவர் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். பின்பு காரை எடுப்பதற்காக வந்தபோது, பானெட்டிற்குள் ராஜ நாகம் (King Cobra) இருப்பது அவருக்கு தெரியவந்தது. எனவே இதுகுறித்து உடனடியாக வன துறை அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். இதன்பேரில் பாம்பு பிடிப்பவரான ரத்தீஷ் என்பவரை வன துறையினர் ஏற்பாடு செய்தனர்.
தகவல் கிடைத்ததும், தேவையான உபகரணங்களுடன் ரத்தீஷ் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விட்டார். பாம்புகளை பிடிப்பதில் கை தேர்ந்தவரான ரத்தீஷ், ராஜ நாகத்தின் வாலை பிடித்து யாருக்கும் எந்தவிதமான பிரச்னைகளையும் இல்லாமல், அதை லாவகமாக வெளியே எடுத்து விட்டார். பிடிக்கப்பட்ட பாம்பிற்கு 5 வயது இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த ராஜ நாகம் உடனடியாக வன துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. அதன் உடல் நிலையை பரிசோதித்த பிறகு, மீண்டும் வன பகுதிக்குள் விடுவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். உங்கள் காருக்குள் பாம்பு இருப்பது தெரியவந்தால், நீங்களும் அப்துல் வஹாபுதீன் போல செயல்படுங்கள்.
நீங்களாக பாம்பை வெளியேற்ற முயற்சி செய்ய வேண்டாம். பாம்புகள் விஷம் கொண்டவை என்பதால், அனுபவம் இல்லாமல் அவற்றை கையாள்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே வன துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பதுதான் சிறந்தது. அவர்கள் பாம்பு பிடிப்பவர்கள் மூலம் பிரச்னையை எளிதாக கையாண்டு விடுவார்கள்.
எனவே பாம்பை பார்த்தால் எக்காரணத்தை கொண்டும் பதற்றம் அடையாமல் சமயோசிதமாக செயல்படுங்கள். இதுதவிர உங்கள் பகுதியில் பாம்புகள் அதிகம் இருக்கின்றன என்றால், எங்கே வெளியே கிளம்புவதாக இருந்தாலும், புறப்படுவதற்கு முன்பு 'இன்ஜின் பே' பகுதியை ஒரு முறை சோதித்து பார்த்து கொள்ளுங்கள்.
அதேபோல் எக்காரணத்தை கொண்டும் புதர்களுக்கு அருகில் காரை நிறுத்த வேண்டாம். பாம்புகள் உங்கள் காருக்குள் எளிதாக நுழைவதற்கு இது காரணமாக அமைந்து விடலாம். இந்த வழிமுறைகளை எல்லாம் முறையாக பின்பற்றுவதன் மூலம், பாம்புகளால் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
கார்களின் பானெட்டிற்குள் பாம்புகள் நுழைவது வழக்கமான ஒரு விஷயம்தான். இதே கேரளா மற்றும் மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே உங்கள் காரின் பானெட்டிற்குள் பாம்பு இருப்பது தெரியவந்தால் உடனடியாக வன துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விடுங்கள்.


Click it and Unblock the Notifications








