டிக்கெட் விலை வெறும் ரூ.27 கோடி... வாழ்க்கையில ஒருமுறையாவது தூரத்தில் நின்று பார்த்துடணும்!!
ரூ.27 கோடி செலவழித்தால் போதும், 'கிஸ்மெட்' (Kismet) என்கிற பெயரிலான உல்லாச படகில் 1 வாரத்திற்கு ராஜாவாக வாழலாம். அப்படி என்னென்ன அம்சங்கள் இந்த சொகுசு படகில் இருக்கிறது? யார் இந்த படகை உருவாக்கியது? இந்த சொகுசு படகை எவ்வாறு புக் செய்வது? வாருங்கள் எல்லாவற்றையும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
அமெரிக்காவை சேர்ந்த ஒரு செல்வந்தர் தான் வைத்திருக்கும் ஓர் படகை மேம்படுத்தி மீண்டும் சேவையில் களமிறக்க தயாராகி வருகிறார். அளவில் நன்கு பெரியதாக இருக்கும் அந்த படகை சொகுசு வசதிகள் மிக்க ஓர் உல்லாச படகாக மாற்றி, வணிகம் செய்ய ஆரம்பிக்க உள்ளார். அந்த உல்லாச படகு தான் கிஸ்மெட் ஆகும். 'கிஸ்மெட்' என்பதற்கு ராயல் என்பதும் ஒரு அர்த்தம்.

அமெரிக்க தொழிலதிபர் ஷாகித் கான் என்பவர் 2018ஆம் ஆண்டில் வணிகத்தை பெருக்குவதற்காக தனது உல்லாச படகை மேம்படுத்துவது என்கிற முடிவில் இறங்கினார். இவ்வளவு பெரிய சொகுசு படகை மேம்படுத்துவதும் ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த படகை மேம்படுத்துவதற்கு மொத்தம் 360 மில்லியன் டாலர்கள் செலவாகி உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.3,000 கோடி ஆகும்.
ஷாகித் கானின் 3வது கிஸ்மெட் உல்லாச படகு இதுவாகும். முதல்முறையாக 2007ஆம் ஆண்டில் 60 மீட்டர் நீளம் மட்டுமே கொண்ட அளவில் சிறியதாக ஓர் உல்லாச படகை கிஸ்மெட் என்கிற பெயரில் ஷாகித் கான் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். இது 2014ஆம் ஆண்டில் விற்கப்பட்டு, இன்னும் கொஞ்சம் பெரிய உல்லாச படகாக மாற்றப்பட்டது. அதே 'கிஸ்மெட்' என்கிற பெயரில் அழைக்கப்பட்ட அந்த படகை சமீபத்தில்தான் ஷாகித் கான் விற்றார்.

இந்த இரு கிஸ்மெட் படகுகளுடன் ஒப்பிடுகையில், புதிய கிஸ்மெட் உல்லாச படகு இராட்சச தோற்றத்தை கொண்டதாக உள்ளது. 'உல்லாச படகு' என்கிற பெயருக்கு ஏற்றதாக இந்த 3வது கிஸ்மெட் விளங்குகிறது. இதன் நீளம் 400 அடி ஆகும். அதாவது 122 மீட்டர்கள். மொத்தம் 6 அடுக்கு மாடிகளை கொண்ட இந்த உல்லாச படகு 'ஜிகா யாச்ட்' எனவும் அழைக்கப்படுகிறது. இந்த படகின் உட்புறத்தை உலகின் பிரபலமான ரேமண்ட் லங்டன் டிசைன் குழுவுடன் இணைந்து ஷாகித் கானின் குடும்பத்தினர் வடிவமைத்துள்ளனர்.

அப்கிரேட் செய்யப்பட்ட பின், இந்த கிஸ்மெட் உல்லாச படகு இன்னும் வணிகத்தை துவங்கவில்லை. ஆனால், விரைவில் துவங்கிவிடும் என ஷாகித் கான் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பயன்பாட்டிற்கு வந்த பின் இந்த படகில் வெவ்வேறு விதமான கட்டணங்களில் டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. அதிகப்பட்சமாக 33 இலட்ச டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.27.30 கோடி) வரையிலான கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த ரூ.27 கோடி கட்டண டிக்கெட்டை பெற்றுவிட்டால், நீங்கள் தான் இந்த உல்லாச படகிற்கு இராஜாவாக கவனிக்கப்படுவீர்கள். இந்த கிஸ்மெட் படகில் மொத்தமாகவே 50 பேர் மட்டுமே பயணிப்பர். அதுவும், டிக்கெட் முழுவதுமாக விற்று தீர்ந்தால் மட்டுமே 50. இந்த உல்லாச படகில் மொத்தம் 6 சூட்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் அதிகப்பட்சமாக 14 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். 50இல் மீதி 36 பயணிகள் வேறு யாரும் இல்லை, படகு குழு உறுப்பினர்கள் ஆவர்.
அதாவது, 14 வாடிக்கையாளர்களுக்கான பணிவிடைகளை செய்வதற்காக இந்த 36 பேர் படகில் இருப்பர். இந்த 36 பேரில் படகை ஓட்டும் கேப்டனும் ஒருவர் ஆவார். 6 சூட்ஸ்களில் இருப்பவர்கள் தேவைப்பட்டால் ஒரு இடத்தில் சந்தித்து கொள்ளும் வகையில் ஒரு பகுதி இந்த படகில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் நெருப்பு இருக்கும். அங்கிருந்து வானத்தை பார்க்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கப்பல் பயணத்தில் இருக்கும் ஒரேயொரு பிரச்சனை என்னவென்றால், நீண்ட நாள் கடல் பயணத்தை எல்லாராலும் தாங்கிக் கொள்ள முடியாது. உடல்நிலையிலும், மன நிலையிலும் ஒரு சிறிய பிரச்சனை ஏற்படும். பயப்படும் அளவிற்கு அதில் ஒன்றும் இல்லை என்றாலும், இந்த கிஸ்மெட் போன்ற உல்லாச படகில் அந்த பிரச்சனை கூட ஏற்படாது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்த உல்லாச படகு நீரில் மிதக்கும் ஓர் குட்டி உல்லாச தீவு போல் இருக்கும்.
Image Courtesy: Cecil Wright


Click it and Unblock the Notifications









