இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே... தமிழ்நாட்டுக்கு பிரேக் கம்பெனியை தட்டி தூக்கிட்டு வந்துட்டார்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் (M K Stalin) அவர்கள் சமீபத்தில் ஐரோப்பாவில் ஜெர்மனி (Germany) உள்பட சில நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுப்பட்டதை செய்திகளில் பார்த்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். இதில், ஜெர்மனி முதலீட்டாளர்களிடம் இருந்து மட்டும் சுமார் ரூ.3,201 கோடி மதிப்பீட்டில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஜெர்மனியை சேர்ந்த நூர்-ப்ரெம்ஸ் (Knorr-Bremse), நார்டெக்ஸ் க்ரூப் (Nordex Group) மற்றும் எப்ம்-பப்ஸ்ட் (ebm-papst) போன்ற முன்னணி நிறுவனங்கள் உடன் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் ஜெர்மனியில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலமாக, தமிழ்நாட்டின் தொழிற்துறை மேம்படுவதுடன், ஆயிரக்கணக்கில் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக உள்ளன.

முக்கியமாக, ஆட்டோமொபைல் (Automobile) துறைக்கான சில பாகங்களுக்கான உற்பத்தி மையமாக இந்திய அளவில் தமிழ்நாடு விளங்க உள்ளது. குறிப்பாக, மோட்டார் வாகனங்களுக்கான பிரேக் சிஸ்டங்கள் வருங்காலங்களில் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு தமிழ்நாட்டில் இருந்துதான் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், மேற்கூறப்பட்ட ஜெர்மனி நிறுவனங்களில் நூர்-ப்ரெம்ஸ் ஆனது பிரேக் சிஸ்டங்களை (Braking Systems) உற்பத்தி செய்வதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக உள்ளது.
ஜெர்மனியின் முனிச் (Munich) நகரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நூர்-ப்ரெம்ஸ் நிறுவனம், பெரிய அளவிலான பிரேக் சிஸ்டங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எந்த அளவிற்கு பெரிய அளவிலான பிரேக் சிஸ்டம் என்றால், நூர்-ப்ரெம்ஸ் பிரேக் சிஸ்டங்கள் அதிகமாக இரயில்களிலும், கனரக லாரிகள், பேருந்துகள் மற்றும் விவசாய கருவிகளிலும் தான் பயன்படுத்தப்படுகின்றன.

கார்கள் மற்றும் பைக்குகளுக்கு இந்த ஜெர்மன் நிறுவனம் பிரேக் சிஸ்டங்களை உருவாக்குவது இல்லை. பிரேக் சிஸ்டங்கள் மட்டுமின்றி, இரயில்களுக்கான இதர சில பாகங்களை உருவாக்கும் நிறுவனமாகவும் நூர்-ப்ரெம்ஸ் விளங்குகிறது. இத்தகைய நிறுவனம், தமிழ்நாட்டிற்கு வருவது முக்கியமாக இரயில்களுக்கான பிரேக் சிஸ்டங்கள் மற்றும் கதவுகளை உருவாக்குவதற்காக ஆகும்.
இதற்காக சுமார் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் தொழிற்சாலைகளை அமைக்க நூர்-ப்ரெம்ஸ் ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம், நூர்-ப்ரெம்ஸ் அதன் மேம்பட்ட இரயில் பிரேக் சிஸ்டம்கள் மற்றும் ஓட்டுநர் உதவித் சொல்யூஷன்கள் மூலம் இந்தியாவின் இரயில் போக்குவரத்தின் பாதுகாப்பிலும், தமிழ்நாட்டின் வாகனத் துறையின் பாதுகாப்பிலும் முக்கியப் பங்காற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

நூர்-ப்ரெம்ஸின் நவீன பிரேக் சிஸ்டங்களில் எலக்ட்ரானிக் பிரேக்கிங் சிஸ்டம் (EBS) முக்கியமானது. இது ABS மற்றும் ASR போன்ற அடிப்படை பிரேக்கிங் செயல்பாடுகளை ஒரே மின்னணு அமைப்பில் ஒருங்கிணைக்கிறது. இதன் விளைவாக விரைவான ரெஸ்பான்ஸும், பிரேக் கொடுத்த பின் வாகனம் நிற்கும் தூரம் குறைவாகவும் இருப்பதால் வாகனத்தின் பாதுகாப்பு மேம்படுகிறது.
நூர்-ப்ரெம்ஸின் பிரேக் சிஸ்டங்களில் தற்சமயம் பயன்படுத்தப்படும் 5-ஆம் நிலை EBS உடன் ஒருங்கிணைக்கப்பட்ட எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) ஆனது வாகனத்தின் பிரேக் மற்றும் என்ஜின் மேலாண்மை அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்டு, முக்கியமான சூழ்நிலைகளில் ஓட்டுநர்கள் தங்களது கட்டுப்பாட்டைப் தொடர்ந்து பராமரிக்க உதவுகிறது.

இதன் மூலம் வாகனங்கள் கவிழ்வது போன்ற விபத்துகள் தடுக்கப்படுகின்றன. ஆபத்தான பிரேக்கிங் சூழ்நிலைகளை கண்டறிந்து, பெடலை லேசாக அழுத்தினாலும் அதிகபட்ச பிரேக்கிங் திறனை உருவாக்கும் 'ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட்' (Active Brake Assist) செயல்பாடு, ABS உடன் இணைந்து அவசர நேரத்தில் சடர்ன் பிரேக் கொடுக்கும்போது விரைவாகவும் பாதுகாப்பாகவும் வாகனத்தை நிறுத்துகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நூர்-ப்ரெம்ஸ், டிஸ்க் பிரேக்குகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. இதுவரை 2.7 கோடிக்கும் அதிகமான பிரேக் சிஸ்டங்களை விற்றிருப்பதில் இருந்து நூர்-ப்ரெம்ஸ் எந்த அளவிற்கு பிரம்மாண்டமான நிறுவனம் என்பதை அறியலாம். இத்தகைய பன்னாட்டு நிறுவனத்தின் முதலீட்டை ஈர்த்தது மட்டுமின்றி, இந்த நிறுவனத்தை தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைக்கவும் சம்மதிக்க வைத்தது தமிழ்நாடு அரசின் விவேகமான செயல்பாட்டை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









