குண்டா இருந்தா இனி பொண்ணு மட்டுமல்ல பைக்கும் கிடைக்காது போலயே!இந்த ரூல்ஸ் பத்தி தெரிஞ்சுக்கோங்க...
ஒவ்வொரு வாகனத்திற்கும் அதிகபட்சம் எடை இருக்கும். இதனால் குண்டாக இருப்பவர்கள் பைக் ஓட்டுவதில் சிக்கல் இருக்கிறது, இது பற்றி பலருக்குத் தெரியாது. இது குறித்த தெளிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

ஒருவர் பைக் ஓட்ட வேண்டும் என்றால் எதெல்லாம் தகுதியாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைப்பீர்கள்? அவருக்கு பைக் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும், அதற்கான ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும், அவர் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும், சாலை விதிகள் எல்லாம் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்.

இது எல்லாம் தான் ஒரு பைக் ஓட்டுநருக்குத் தேவையான விஷயம் என நம்மில் பலர் நினைப்போம். ஆனால் ஒரு பைக்கு ஓட்ட வேண்டும் என்றால் அவர் உடல் எடையும் ஒரு முக்கியமான விஷயம் தான் என உங்களுக்குத் தெரியுமா?

அதிகமான எடை கொண்டவர்கள் பைக்கை ஓட்டுவது பைக்கின் வாழ்நாளைப் பாதிப்பதோடு, சாலையில் விபத்து ஏற்படுத்தும் வாய்ப்பையும் அதிகப்படுத்தும். இது எல்லாம் உண்மையா என உங்களுக்குத் தோன்றலாம். இது முற்றிலும் உண்மையான ஒரு விஷயம் தான். ஆனால் இது குறித்த போதிய விழிப்புணர்வு தான் மக்கள் மத்தியில் இல்லை இப்பொழுது எவ்வளவு எடை கொண்டவர்கள் எந்த பைக்கை ஓட்டலாம் என விரிவாகவும் தெளிவாகவும் காணலாம்.

ஒவ்வொரு வாகனத்திற்கும் Gross Vehicle Weight Rating (GVWR) என்ற ஒரு ரேட்டிங் இருக்கிறது. அப்படி என்றால் வாகனம் பயணிக்கும் போது இருக்க வேண்டிய அதிகபட்ச மொத்த எடை என்பது தான். இந்த ரேட்டிங் வாகனம் பயணிக்கும் போது இதில் குறிப்பிட்டுள்ளதை விட அதிகமாக எடை இருந்தால் ஆபத்து அதிகமாக இருக்கும். இதில் குறிப்பிட்டுள்ளதற்குக் குறைவாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.

GVWR என்பது வாகனத்தின் எடை, அதை ஓட்டும் ஓட்டுநர், சக பயணிகள், லக்கேஜ்கள் என ஓட்டு மொத்தமாக எல்லா எடையும் சேர்த்து இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்ற கணக்கு தான் அது. இதில் ஒரு பைக்கை ஓட்டும் போது எவ்வளவு எடை கொண்டவர் வரை ஓட்டலாம் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் மற்றொரு தகவலும் நமக்கு வேண்டும் வாகனத்தின் வெட் வெயிட் என அழைக்கப்படும் பயணிகள் இல்லாமல் முழுமையாக பெட்ரோல் மற்றும் ஆயில்கள் நிரப்பப்பட்ட வாகனத்தின் எடை எவ்வளவு என்ற தகவல் வேண்டும்.

இந்த வாகனத்தின் வெட் வெயிட்டையும் GVWR-ஐயும் கழித்தால் என்ன கிடைக்கிறதோ அது தான் ஒரு வாகனத்தின் பயணிகள்/ லக்கேஜின் அதிகபட்ச கேப்பாசிட்டி சராசரியாக ஒரு இந்தியாவில் விற்பனையாகும் பைக்கில் 200 கிலோ எடை வரை உள்ளவர்கள் பயணிக்கலாம். அதாவது பைக்கை ஓட்டுபவர் மற்றும் பின்னால் இருப்பவர், இது போக அவர்கள் ஏதும் லக்கேஜ் வைத்திருந்தால் அதுவும் சேர்ந்து மொத்தமாக 200 கிலோ எடை வரை ஒரு பைக்கில் பயணிக்கலாம்.

ஒரு வாகனத்தின் GVWR மற்றும் வெட் வெயிட் குறித்த விபரங்களை வாகனம் வாங்கும் போது வழங்கப்படும் மேனுவலில் காண முடியும், இது மட்டுமல்ல இன்று ஆன்லைன்களில் வாகனங்களின் மாடலை குறிப்பிட்டாலே அந்த வாகனம் குறித்த இந்த தகவல்கள் எல்லாம் எளிமையாகக் கிடைக்கிறது. எதையும் பயன்படுத்தலாம்.

சரி அதையும் மீறி அதில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு அதிகமான எடையை வாகனத்தில் கொண்டு சென்றால் என்ன நடக்கும் என்ற கேள்வி பலருக்கு இருக்கும். இன்று நாம் சாலைகளில் சில லாரிகளில் ஓவர் லோடு ஏற்றிச் செல்லும் விஷயங்களைப் பார்த்திருப்போம் கேள்விப் பட்டிருப்போம். அதே போலத் தான் பைக் மற்றும் கார்களிலும் ஓவர் லோடு ஏற்றிச் செல்லும்போது ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

பைக்கில் அளவு அதிகமாக எடையைக் கொண்டு பயணித்தாலும் பைக்கின் பாதுகாப்பிற்குப் பிரச்சனை ஏற்படும். இது மட்டுமல்ல பைக்கின் பிரேக், இன்ஜின், சஸ்பென்சன், டயர்கள் இவை எல்லாமே நேரடியாகப் பாதிக்கப்படும். அதே போல அதிக எடை வாகனத்திலிருந்தால் வாகனத்தை ஹேண்டில் செய்வது சிரமமாக இருக்கும். இதனால் சில நேரங்களில் இது விபத்தில் கூடக் கொண்டு சென்று முடியலாம்.

இது மட்டுமல்ல பைக்கில் ஓவர் லோடு இருக்கும் போது பிரேக் பிடித்தால் பிரேக் அதிக எடை கொண்ட வாகனத்தை நிறுவனத்தை வழக்கமான லோடை விட அதிக லோடை தாங்க வேண்டியது வரும் இதனால் பிரேக் ஃபெயிலியர் கூட ஏற்படலாம். அதிகமாக எடையை இழுத்துச் செல்ல பைக்கின் இன்ஜின் சிரமப்படும் இதனால் பைக்கின் மைலேஜ் மற்றும் பைக்கின் இன்ஜின் ஆயுள் நேரடியாகப் பாதிக்கப்படும்.

இந்த பைக்கின் எடை என்பது பைக்கிற்கு பைக் மாறுபடும். இந்த மாறுபாடுஇன்ஜின் திறனை வைத்து மாறுபடும் என்று கூட சொல்லாம். ஒரு 150 சிசி பைக்கை விட 300 சிசி பைக் அதிக எடையைத் தாங்கும் திறன் கொண்டதாக இருக்கும். அதே போல பைக்கின் டைப்பை பொருத்தும், அதன் எடை என்பது மாறுபடும். டூரிங் வாகனங்கள் தயாரிக்கப்படும் போது அதிக லக்கேஜ்களை கொண்டு செல்லும் வகையில் GVWR ரேட்டிங் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அதே போல ஸ்போர்ட் பைக்குகளில் குறைவான அளவு எடை இருக்கும்படி தான் டிசைன் செய்யப்படும். இது மட்டுமல்ல ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் நடுவில் மட்டுமே எடை தங்கும்படியும், பக்கவாட்டில் எடையிருந்தால் பைக் ஒரு புறமாக இழுக்கும்படியும் இருக்கும். அதனால் பைக் ஓட்டும் போது அதில் உள்ள எடை என்பது மிகவும் முக்கியம்.

இதனால் பைக் ஓட்டும் போது ஒல்லியாக இருப்பவர்களை விட குண்டாக இருப்பவர்கள் திணறுவார்கள். ரொம்ப குண்டாக இருப்பவர்கள் பைக் ஓட்டவே சிரமப்படுவார்கள். பலருக்குஇந்த விதிகள் தெரியாது. நீங்கள் சாலையில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் உங்கள் உடல் எடைக்கு ஏற்ற பைக்கை வாங்குவதும் முக்கியம். அப்பொழுது தான் பாதுகாப்பாக பயணிக்க முடியும். இதே எடை கட்டுப்பாடு கார் மற்றும் கமர்ஷியல் வாகனங்களுக்கும் உள்ளது என நினைவில்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications