எம்பி ஆனதும் பாஜக சுரேஷ் கோபி எடுக்க போகும் முதல் நடவடிக்கை!! மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற போகுது!
இந்தியா முழுவதும் மெட்ரோ இரயில் சேவை வேகமாக விரிவடைந்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் அதிக பேர் மெட்ரோ இரயில் போக்குவரத்தை பயன்படுத்துவதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. இத்தனைக்கும், கேரளாவில் கொச்சியில் மட்டுமே மெட்ரோ இரயில் சேவை உள்ளது. கொச்சியிலும் மெட்ரோ இரயில் சேவை குறுகிய தொலைவிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கேரளாவில் மெட்ரோ இரயில் சேவையை கொச்சியில் இருந்து திரிச்சூர் வரையில் வழங்க முயற்சிகளை மேற்கொள்வேன் என கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வரும் கேரள அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நம் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பாஜக கால்பதிக்க முடியாது என்கிற நிலைமாறி நடந்து முடிந்த 2024 மக்களவை தேர்தலில் கேரளாவில் முதல்முறையாக பாரதீய ஜனதா கட்சி ஒரு தொகுதியை வென்றுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த விஷயம் வைரலாகி வருவதால், உங்களில் நிறைய பேர் இதனை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். மேலும், அந்த தொகுதியில் வென்ற பாஜக வேட்பாளர் யார் என்பதும் உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும்.

அந்த பாஜக வேட்பாளர் வேறு யாருமில்லை... பிரபல மலையாள திரைப்பட நடிகர் சுரேஷ் கோபி. தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சுரேஷ் கோபி நடித்திருந்தார். ஐ திரைப்படத்தை போன்று, கேரள மக்களிடையேயும் சுரேஷ் கோபிக்கு நெகட்டீவ் இமேஜ் தான் உள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் திரிச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.
ஆனால், முதல் தேர்தலே சுரேஷ் கோபிக்கு பலத்த அடியாக விழுந்தது. அதனை தொடர்ந்து 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அதிலிலும் தோல்வி தான் மிச்சம். இருப்பினும், மனம் தளராத நடிகர் சுரேஷ் கோபி 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதே திரிச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். கேரள மக்கள் சினிமாவை திரையரங்குகளில் பார்ப்பதோடு நிறுத்திகொள்வார்கள் என்கிற கருத்து உள்ளதால், இந்த முறையும் சுரேஷ் கோபி வெற்று பெறுவது கடினம் என கூறப்பட்டது.

ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கி சுரேஷ் கோபி திரிச்சூர் தொகுதியை பாஜகவிற்கு பெற்றுக் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாதது ஒருபக்கம் கவலையாக இருந்தாலும், கம்யூனிச கட்சிகளின் இராஜ்ஜியமான கேரளாவில் வெற்றி கணக்கை தொடங்கி இருப்பது பாஜக மேலிடத்திற்கு பெரிய ஆறுதலாக இருந்திருக்கும். அதேபோல், கேரளாவில் தாமரையை மலர செய்துள்ள நடிகர் சுரேஷ் கோபி, கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக சில திட்டங்களை வைத்துள்ளார்.
அதில் முக்கியமானது, திரிச்சூர் வரையிலான மெட்ரோ இரயில் சேவை ஆகும். ஏற்கனவே கூறியதுபோல், தற்போதைக்கு கேரளாவில் கொச்சியில் மட்டுமே மெட்ரோ இரயில் சேவை உள்ளது. கொச்சியின் மெயின் ஏரியாவில் இருந்து 25கிமீ தொலைவில் உள்ள அலுவா வரையில் மெட்ரோ இரயில் சேவை உள்ளது. இதனை திரிச்சூர் வரையில் விரிவுப்படுத்த கடந்த சில வருடங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இது தொடர்பாக கடந்த சில வருடங்களாகவே கொச்சி மெட்ரோவின் நிர்வாக இயக்குனர் லோக்நாத் பெஹ்ரா உடன் பேசி வருவதாக எம்பி சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். கொச்சி மெட்ரோவின் முன்னாள் நிர்வாக இயக்குனர் முகமது ஹானீஷ் உடனும் சுரேஷ் கோபி இதுகுறித்து வலியுறுத்தி வந்துள்ளார்.
இந்த மெட்ரோ இரயில் திட்டம் மட்டுமின்றி, ஏற்கனவே கூறியதுபோல் திரிச்சூர் மக்களுக்காக வேறு சில திட்டங்களையும் சுரேஷ் கோபி வைத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, திரிச்சூர் மாவட்டத்தின் நகரங்களை அருகில் உள்ள முக்கிய நகரங்களுடன் இணைக்கும் சாலை விரிவாக்க திட்டங்களும் அடங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கொச்சியில் இருந்து திரிச்சூர் மாவட்டத்தின் தலைநகரம் 84கிமீ தொலைவில் உள்ளது. இவ்வளவு தொலைவிற்கு மெட்ரோ இரயில் சேவை வழங்கப்படுமா என்பது மிக பெரிய கேள்வி குறி ஆகும். ஏனெனில், நம் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் கூட மெட்ரோ இரயில் சேவை 84கிமீ தொலைவிற்கு இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications









