கோனிசெக் ஒன்:ஒன் கார் விபத்து: விரிவான தகவல் அறிக்கை வெளியானது...!!

Written By: Krishna

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனம் கொனிசெக். இந்த நிறுவனம் தயாரித்து மிகவும் பரவலாக பேசப்பட்ட ஸ்போர்ட் மாடல் கார் ஒன்:ஒன். அதாவது பவர் டூ வெயிட் விகிதம் ஒன்:ஒன்-ஆக இந்த மாடலில் இருப்பதுதான் சிறப்பு.

உலக அளவில் மொத்தமே 7 வண்டிகள்தான் இந்த மாடலில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தக் கார் டிராக்கில் வந்தாலே, நாட்டின் பிரதமரைப் பார்ப்பது போன்றதொரு பிரம்மிப்பு அனைவருக்கும் ஏற்படும். ஜெர்மனியின் நர்பெர்க்ரிங் பந்தய டிராக்குகளில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக அந்தக் கார் விபத்தில் சிக்கிக் கொண்டது.

கார் விபத்து

அதிவேகமாக இயக்கப்பட்ட ஒன்:ஒன் கார், கட்டுப்பாட்டை இழந்து டிராக் தடுப்பின் மீது மோதி வீசி எறியப்பட்டது. இதில் அந்தக் கார் சின்னாபின்னமாக உருக்குலைந்தது. அதிர்ஷ்டவசமாக அந்தக் காரை இயக்கிய ஓட்டுநர் சிறிய காயங்கள் கூட ஏதுமின்றி தப்பித்து விட்டார்.

இந்த நிலையில், கேரேஜுக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த நொறுங்கிய காரை ஆய்வு செய்து விரிவான அறிக்கை ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கார் விபத்துக்குள்ளானதற்கான காரணம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்டவை அந்த அறிக்கையில் அலசப்பட்டுள்ளன.

ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி - லாக் பிரேக்கிங் சிஸ்டம் சரிவர இயங்காததால்தான் இந்த விபத்து நேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. அதிவேகத்தில் கார் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென பிரேக் பிடித்தால் வீல்கள் லாக் ஆகாமல் இருப்பதற்காகக் கொடுக்கப்படும் பாதுகாப்பு வசதிதான் ஏபிஎஸ்.

இந்த நிலையில் அண்மையில் விபத்துக்குள்ளான ஒன்:ஒன் கார் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றபோது ஏபிஎஸ் சிஸ்டம் வேலை செய்யவில்லை. சுமார் 112 கிலோ மீட்டர் வேகத்தில் தடுப்பு வேலி மீது மோதி 22 மீட்டருக்கு கார் பறந்துள்ளது. அதன் பிறகு, அங்குள்ள புல்தரையில் உருண்டுபோய் நின்றுள்ளது. விபத்து காலத்தில் இயங்கும் ஏர்-பேக், ஃப்யூயல் லாக் ஆகியவை சரியாக செயல்பட்டுள்ளது.

முன்பகுதி இடது பக்க வீலில் தரையிரங்கியதால் அந்தப் பக்கம் முழுவதும் சேதமடைந்துள்ளது. உராய்வின் காரணமாக சில இடங்கள் தீ பிடித்து எரிந்துள்ளன. உச்ச வேகத்தில் செல்லும்போதே ஏபிஎஸ் வேலை செய்யவில்லை என்ற எச்சரிக்கைத் தகவல், காரின் டேஷ் போர்டு அருகே உள்ள திரையில் தெரிந்துள்ளது. அந்த வாகனத்தை இயக்கியவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால், அதை அவர் கவனிக்கத் தவறியிருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏபிஎஸ் சிஸ்டம் செயலிழப்பால் நேர்ந்த இந்த விபத்து, கொனிசெக் ஒன்:ஒன் காரின் உறுதித்தன்மை மீது பல்வேறு சந்தேகக் கணைகளைத் தொடுக்கக் காரணமாக அமைந்துள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Koenigsegg Issue A Detailed, Official Statement Regarding The One:1 Crash.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark