லட்சத்தில் ஒருத்தருக்கு தான் இப்படியெல்லாம் நடக்கும் - ஓனரின் கண் முன்னே சாம்பலாகிய 25 கோடி ரூபாய் கார்!!
மிகவும் ஆசையுடன் புத்தம் புதியதாக வாங்கிய கார் முதல் நாளே தீயில் எரிந்து நாசமாகினால், எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் வேதனையாக தான் இருக்கும். விலை குறைவான காருக்கே அப்படியென்றால், ரூ.25 கோடி மதிப்பில் வாங்கிய கார் என்றால், அது வாழ்நாள் முழுவதும் நீங்காத காயமாக மாறிவிடும். அப்படியொரு சம்பவம்தான் கிரீஸ் நாட்டில் ஒருவருக்கு நடந்துள்ளது. ஆனால் இறுதியில், கார் ஓனர் மகிழ்ச்சியாகும் வகையில் ஒரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இறுதியாக நடந்த அந்த ட்விஸ்ட் என்ன? இந்த தீ விபத்து எவ்வாறு நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
பார்த்து, பார்த்து உருவாக்கப்பட்ட சூப்பர் லக்சரி காராக இருந்தாலும், விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ள சம்பவங்கள் பலவற்றை இதற்கு முன் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். சில விலையுயர்ந்த கார்கள் ஓடிக் கொண்டிருக்கும்போதே தீப்பற்றிக் கொண்டு தீயில் சம்பலாகிய நிகழ்வுகள் எல்லாம்கூட நடந்துள்ளன.

அதாவது, குறைந்த விலையில் உற்பத்தி செய்யப்பட்ட கார் தான் தீப்பிடிக்கும் என்றில்லை, பல கோடி ரூபாய் செலவில் மாதக்கணக்கில் கவனத்துடன் உருவாக்கப்பட்ட சூப்பர் கார் கூட தீப்பிடிக்கலாம். அது கார் ஓட்டுவதை பொறுத்து உள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், சூப்பர் கார்கள்தான் அவ்வப்போது சாலையில் தீப்பற்றிக் கொள்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு, அதிவேக பயணம் ஒரு காரணமாக இருக்கலாம்.
அவ்வாறான ஒரு சம்பவமாக, கிரீஸ் நாட்டில் 30 இலட்சம் டாலர்கள் (இந்தியா ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய ரூ.25 கோடி) மதிப்பிலான ஹைப்பர் கார் ஒன்று சாலையில் தீப்பற்றி முற்றிலுமாக எரிந்து சாம்பலாகி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகளவில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் தீக்கு இரையாகி உள்ள ஹைப்பர் கார், கோய்னிக்செக் ஜெஸ்கோ நர் எடிசன் (Koenigsegg Jesko Nur Edition) ஆகும்.

சாதாரணமான கோய்னிக்செக் ஜெஸ்கோ காருடன் ஒப்பிடுகையில் நர் எடிசன் ஆனது கார்பன் ஃபைபர் பாடிவொர்க்கை கொண்டது. இதற்கேற்ப இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் நிறைய இடங்களில் கோல்டு நிறத்தில் ஹைலைட்களும், கார்பன் சக்கரங்களும் மற்றும் கோல்டு நிறத்தில் பிரேக் காலிபர்களும் கொடுக்கப்படுகின்றன. இந்த அளவிற்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கார் முற்றிலுமாக தீயில் அழிந்து நாசமாகி உள்ளது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, நெடுஞ்சாலையில் இயங்கிக் கொண்டிருந்த போது தொழிற்நுட்ப கோளாறு காரணமாக இந்த கார் தீப்பிடித்துள்ளது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காரின் பின்பக்கத்தில் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட பழுதடைந்த ஹைட்ராலிக் குழாயினால் இந்த தீவிபத்து நடந்துள்ளது. அதாவது, அந்த குழாயில் இருந்து ஹைட்ராலிக் திரவம் கசிந்ததை அடுத்து தீப்பொறி உருவாகியுள்ளது.

இது, காரை உற்பத்தி செய்த நிறுவனத்தின் தவறாகும். இதனையடுத்து, ஜெஸ்கோ காரை வைத்திருப்பவர்களை கார் ஓட்ட வேண்டாம் என கோய்னிக்செக் நிறுவனம் எச்சரித்துள்ளது. உலகில் மொத்தமாகவே வெறும் 28 ஜெஸ்கோ கார் ஓனர்கள் மட்டுமே உள்ளனர். அதாவது, அந்த அளவிற்குதான் இந்த விலையுயர்ந்த சூப்பர் கார் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள இந்த 28 ஜெஸ்கோ கார்களை ஆய்வு செய்யும் பணியில் கோய்னிக்செக் நிறுவனம் இறங்கியுள்ளது.
இதற்காக, மென்பொருள் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளதாக கோய்னிக்செக் தெரிவித்துள்ளது. மேலும், கிரீஸ் நாட்டில் தீவிபத்தில் ஜெஸ்கோ காரை இழந்துள்ளவருக்கு புதியதாக ஒரு ஜெஸ்கோ காரை வழங்கவும் கோய்னிக்செக் முடிவெடுத்துள்ளது. அதிகப்பட்சமாக மணிக்கு 400கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய கோய்னிக்செக் ஜெஸ்கோ காரில் 5.0 லிட்டர் ட்வின்-டர்போ வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜினின் ஆற்றல் காரின் பின் சக்கரங்களுக்கு செல்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோய்னிக்செக் காரை நம் இந்தியாவில் யாரும் வைத்தில்லை. ஆகையால், அந்த 28 ஜெஸ்கோ கார் ஓனர்கள் யாரும் இந்தியாவில் இல்லை. வெறும் 28 பேர் மட்டுமே என்பதால், அவர்களை இதுகுறித்து எச்சரிப்பதும், அவர்களது இருப்பிடத்திற்கு சென்று ஜெஸ்கோ காரை பழுதுப் பார்ப்பதும் கோயினிக்செக் நிறுவனத்துக்கு பெரிய கஷ்டமாக இருக்காது. அதேபோல், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு புதியதாக ஒரு ஜெஸ்கோ காரை வழங்குவதும் இந்த நிறுவனத்துக்கு பிரச்சனையாக இருக்க வாய்ப்பில்லை.


Click it and Unblock the Notifications









