கொல்கத்தாவை தாய்லாந்துடன் இணைக்கும் முயற்சியில் மத்திய அரசு!! நெடுஞ்சாலை 2,800கிமீ நீளத்திற்கு...
இந்தியா-மியான்மர்-தாய்லாந்து நாடுகளை இணைக்கும் விதமாக உருவாக்கப்படும் நெடுஞ்சாலை இன்னும் 4 வருடங்களில் தயாராகிவிடும் என தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில் எந்த பகுதியில் இருந்து துவங்கி இந்த நெடுஞ்சாலை தாய்லாந்தில் எங்கு முடிவடையவுள்ளது? என்பதையும், இடையில் முழு மியான்மர் நாட்டையும் எங்கு இந்த சாலை கடக்கவுள்ளது? என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.
இரு மாநகரங்களிடையே போக்குவரத்து அதிகரிப்பது அந்த இரு மாநகரங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை உள்கட்டமைப்பு வசதிகள் உள்பட பல விஷயங்களில் மேம்படுத்தும். இந்த விஷயத்தில் சற்று அதிகமாகவே யோசித்துள்ள நமது மத்திய அரசு தாய்லாந்து தலைநகர் பேங்காக் வரையில் நெடுஞ்சாலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இந்திய வர்த்தக சபை மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் கடந்த ஜூன் 13ஆம் தேதி கொல்கத்தாவில் வணிக மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இதில் மேற்கு வங்காள மாநில வர்த்தக அமைச்சர் உடன் பல்வேறு நாட்டு வர்த்தக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் கொல்கத்தாவையும், பேங்காக்கையும் இணைக்கும் நெடுஞ்சாலை பற்றியும் பேசப்பட்டது.
BIMSTEC திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்படும் இந்த நீண்ட தூர நெடுஞ்சாலையை உருவாக்கும் பணிகள் இன்னும் 3-4 வருடங்களில் முழுவதுமாக நிறைவடைந்துவிடும் என இந்த மாநாட்டின் மூலமாக நமக்கு ஒரு செய்தி கிடைத்துள்ளது. அதாவது, 2026 அல்லது 2027இல் இந்த நெடுஞ்சாலை முழுவதுமாக தயாராகிவிடும். மூன்று நாடுகளை இணைக்கும் இந்த நெடுஞ்சாலையை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தியாவை தாய்லாந்தின் எந்த நகரத்துடன் இந்த நெடுஞ்சாலை இணைக்கும் என்ற கேள்வி இந்த மாநாட்டிற்கு முன்பு வரையில் இருந்தது. தற்போது அது தாய்லாந்தின் தலைநகர் பேங்காக் என்பது உறுதியாகியுள்ளது. தாய்லாந்து வளைகுடா கடலில் தேவதைகளின் நகரம் என தாய்லாந்து மக்களால் அழைக்கப்படும் பேங்காக்கும், பரந்து விரிந்த வங்காள விரிகுடாவின் வடக்கில் அமைந்துள்ள இந்தியாவின் முக்கிய மாநகரங்களுள் ஒன்றான கொல்கத்தாவும் சாலை வழியாக இணையவுள்ளன.
இருப்பினும் இந்த நெடுஞ்சாலை தாய்லாந்திற்குள் மொத்தமாக 20% மட்டுமே அமையவுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் பேங்காக்கை அந்தமான் கடலை ஒட்டியவாறே இந்த நெடுஞ்சாலை இணைக்கவுள்ளது. மீதி 80% இந்தியாவிலும், மியான்மர் நாட்டிலும் அமையவுள்ளன. குறிப்பாக, மியான்மர் நாட்டை பாதியாக பிரிக்கும் வகையில் இந்த நெடுஞ்சாலை அமையவுள்ளது.

கொல்கத்தாவில் துவங்கும் இந்த நெடுஞ்சாலை, சிலிகுரி, ஸ்ரீராம்புர், கௌகாத்தி, கோஹிமா, மோரே என்ற இந்திய நகரங்களை இணைத்தவாறு மியான்மர் நாட்டிற்குள் நுழைந்து டாமு, காலேவா, மண்டாலே, யாங்கோன் நகரங்களை கடந்து தாய்லாந்திற்குள் மே சோட் மற்றும் சுகோதாய் நகரங்கள் வழியாக பேங்காக்கில் முடிவடைய உள்ளது. மொத்த தூரம் 2,800கிமீ-இல் இருந்து 2,820கிமீ வரையில் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: வங்காளதேசம் என்ற ஒரு நாட்டையே இந்த நெடுஞ்சாலை சுற்றி வளைக்கவுள்ளது. மனிதன் எந்த அளவிற்கு தனது கட்டிடக்கலைகளில் முன்னேறியுள்ளான் என்பதற்கு இந்த நெடுஞ்சாலை சாட்சி ஆகும். தாய்லாந்து நாட்டு அரசு ஏற்கனவே புதியதாக போடப்பட்ட நெடுஞ்சாலையை இந்த நெடுஞ்சாலை உடன் இணைத்து கொள்ள உள்ளது. ஆதலால் அந்த நாட்டிற்கு பெரியதாக வேலை இல்லை. மியான்மர் நாட்டு அரசாங்சம் தங்களது நாட்டில் வேலை முடிய இன்னும் 2- 3 வருடம் ஆகுமென சொல்கிறது.
NOTE: Images are used for representational purpose only


Click it and Unblock the Notifications









