மக்களே நீருக்கு அடியில் பயணிக்க தயாரா?.. வேக வேகமாக தயாராகி வரும் நீருக்கு அடியில் பயணிக்கும் முதல் ரயில்!
நீருக்கு அடியில் பயணிக்கும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக கொல்கத்தா மெட்ரோவைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவர் எதிர்பார்த்திராத ஓர் தகவலை வெளியிட்டுள்ளார். அது என்ன என்பது பற்றிய விரிவான விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் பயணிக்கும் மெட்ரோ ரயில் திட்டம் மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதன் உருவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு வரும் நிலையில், அவை அனைத்தும் தற்போது நிறைவுடையும் நிலையை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், எப்போது இந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் முதல் நீருக்கு அடியில் பயணிக்கும் மெட்ரோ ரயில் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என்றே தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சமீபத்தியில் பேட்டி அளித்த ஷைலேஷ் குமார் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். இவர் சிவில் கேஎம்ஆர்சி-யின் பொது மேலாளர் ஆவார். பேட்டியன்போது அவர் கூறியதாவது, "விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நீருக்கு அடியில் சுரங்கம் அமைக்கும் பணிகள் 2023 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும்.
தற்போது சில புனரமைக்கும் பணிகளே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு சிக்கல்களினாலேயே இந்த பணிகள் தாமதாகக் காரணமாக உள்ளன. அவை அனைத்தும் விரைவில் களையப்படும்" என்றார். மேலும் பேசிய அவர், "சில வெளிநாட்டு கலைஞர்களுடன் இணைந்து நீருக்கு அடியில் அமைக்கப்படும் சுரங்கங்களை உருவாக்கி வருகின்றோம். இத்துடன், வெளிநாட்டு (ஜெர்மன்) எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டு அவற்றைக் கொண்டே சுரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன" எனவும் அவர் கூறினார்.

1984 லேயே கொல்கத்தாவில் முதல் முறையாக மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு சேவையை கூடுதல் சிறப்பானதாக மாற்றும் விதமாக நாட்டின் முதல் அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில் திட்டம் அமைந்துள்ளது. கொல்கத்தாவின் கிழக்கு - மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த புதிய மெட்ரோ ரயில் தடம் உருவாக்கப்பட்டு வருகின்றது. இது சுமார் 15 கிமீ இடைவெளிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
லேக் ஸ்டேடியத்தில் இருந்து ஹவுரா வரை நீண்டிருக்கும். மிகப் பெரிய பொருட் செலவில் இந்தியாவின் முதல் நீருக்கடியில் பயணிக்கும் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஒரு கிமீட்டருக்கு மட்டும் ரூ. 120 கோடி செலவாகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில் ஆற்றின் ஆழமான நீருக்கு அடிப்பகுதியில் சுரங்கம் அமைக்க மட்டும் சற்று கூடுதலாக செலவாகுவதாக கேஎம்ஆர்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 157 கோடி செலவு ஆழமான பகுதிகளுக்கு ஆகின்றதாம்.
இந்த திட்டம் நிறைவடையும் பட்சத்தில் லட்சக் கணக்கான பொது மக்கள் பெரும் பலன் அடைவர். தற்போது நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் வாகன நெரிசல் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதுமட்டும் இல்லைங்க, பொது போக்குவரத்தும் கூட்டம் மிகுந்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே நீருக்கு அடியில் இயங்கும் மெட்ரோவை விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் கொல்கத்தா மெட்ரோ ரயில்வே கார்பரேஷன் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.
இது ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பொது போக்குவரத்துகளில் (பேருந்து மற்றும் பிற ரயில் சேவைகளில்) காணப்படும் கூட்ட நெரிசலைக் கணிசமாக குறைக்க உதவியாக இருக்கும். இதுமட்டும் இன்றி இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் பயணிக்கும் ரயிலில் டிராவல் செய்வதற்கு என்றே சுற்றுலாப் பயணிகள் பலர் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு. ஆகையால், இந்த திட்டம் பல வழிகளில் கொல்கத்தா நகராட்சிக்கு உதவும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அனைவரும் பயணிக்கும் வகையிலேயே இந்த ரயில் சேவை உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, நீருக்கு அடியில் பயணிக்கும் ரயிலுக்கான கட்டணம் மலிவானதாகவே இருக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இது பற்றிய விபரங்கள் வெளியாக உள்ளன. மேலும் வருகையை எதிர்நோக்கி ஒட்டுமொத்த இந்திய நாடே பெருத்த ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








